Published : 19,Jan 2022 12:12 PM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருப்பதால் தற்போதைய சூழலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் என்பவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் முறையிட்டார். அப்போது, தற்போதைய சூழலில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என குறிப்பிட்ட அவர், நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், தேர்தல் தொடர்பாக எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தனது முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை மறுதினம் (ஜனவரி 21) மனுவை விசாரிப்பதாக தெரிவித்தனர்.
ஜனவரி 27ம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ள நிலையில், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.