[X] Close

கொரோனா கால மாணவர் நலன் 15: கல்லறைகளாகும் கல்வி நிலையங்கள்... காட்சிகள் மாறுமா?

சிறப்புக் களம்

Will-Tamilnadu-Schools-become-the-safest-place-for-Students-or-not

கொரோனா பரவல் கொஞ்சம் ஓய்ந்து, பின் இப்போது அதுவே ஒமைக்ரானாக உருப்பெற்று உலகம் முழுக்க தீவிரமாக பரவிவருகின்றது. இருப்பினும் இந்தியாவில் இன்னும் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் தீவிரமடையவில்லை என்பதால், இங்கு அதுசார்ந்த கட்டுப்பாடுகள் எதுவுமும் இன்னும் தீவிரமடையவில்லை. இதனால் பள்ளிக்கு தினந்தோறும் போய் வருகின்றனர் நம் குழந்தைகள். ஆனால் அந்தப்பள்ளிக்கூடம் அவர்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பானதாக இருக்கின்றதா என ஆராய்ந்தால், இல்லை என்பதே சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்தும் உண்மை.

மாணவர்களுக்கு, பேராபத்துகளை தந்துக்கொண்டிருக்கின்றன பள்ளி வளாகங்கள். கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட பலதரப்பட்ட சவால்களுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு, அதைவிட பேரிடர்களாக வந்துக்கொண்டிருக்கின்றன பள்ளி கட்டட பராமரிப்பின்மையும் பாலியல் துன்புறுத்தல்களும்.

கடந்த சில வாரங்களாகவே பாலியல் துன்புறுத்தல்களால் தற்கொலை முடிவெடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும், பாலியல் துன்புறுத்தலால் வன்கொடுமைக்கு உள்ளாவதாக பதிவாகிவரும் குழந்தைகள் புகார்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்தப் பட்டியலில், பாதுகாப்பற்ற பள்ளிக்கட்டட சுவர் காரணமாக உயிரிழந்த மாணவர்களின் துயரக்கதையும் தற்போது சேர்ந்துள்ளது. இதுகுறித்த இந்த வார கொரோனா கால மாணவர் நலன் அத்தியாயம் அமைய உள்ளது.


Advertisement

image

குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள், அவர்களின் கல்லறைகளாக மாறிப்போகும் இந்த அசாதாரண சூழலை அரசு எப்படி கையாள வேண்டும் - இனி இப்படி விபத்து நேராமல் இருக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, நம்மிடையே சில முக்கிய தகவல்களை பகிர்ந்துக்கொண்டார் குழந்தைகள் நல கள செயற்பாட்டாளர் தேவநேயன்.

“நெல்லை விபத்துக்குப்பின் அரசு துரிதமாகவும் வேகமாகவும் எல்லாவித நடவடிக்கையையும் எடுத்துவருவதை பார்க்கமுடிகிறது. ஆனால், இதையெல்லாம் விபத்துக்கு முன்னரேவும் அவர்கள் செய்திருக்க வேண்டும். ‘இழப்புக்குப் பின் நீதி’ என்பது, கொடுமைத்தனம். கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த பின்னரே ‘குடிசையில்லா பள்ளிகள்’ வந்தன. இப்போது நெல்லை விபத்துக்குப் பின்னர்தான் கட்டடங்கள் கவனத்துக்கு வருகின்றது. எல்லாவற்றுக்கும் ஒரு பச்சிளம் உயிரை கேட்பது, என்ன மாதிரியான அதிகார வர்க்க மனநிலையென்பதை யோசிக்கக்கூட முடியவில்லை.

image

இந்தியாவில், கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ‘எல்லா பள்ளிகளும், தங்களின் தகுதிச்சான்றிதழை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்’ என்ற விதியொன்று உள்ளது. இந்த தகுதிச்சான்றிதழை ஒரு பள்ளி பெற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வர்.

இந்த தகுதிச்சான்றிதழ் புதுப்பிப்பானது சட்டரீதியாக நடைமுறையில் இருந்தாலும்கூட, அரசுப்பள்ளிகள் இதை பெரும்பாலும் செய்வதேயில்லை என்பதுதான் வேதனைத்தரும் நிதர்சனம். தனியார் பள்ளிகள், சான்றிதழை புதுப்பிக்கிறது என்றாலும் கூட அவர்களும் அதை முறையாக செய்வதில்லை. வெறும் கையெழுத்து நடைமுறையாக மட்டுமே தனியார் பள்ளிகளிலும் அது உள்ளது.

இந்த தகுதிச்சான்றிதழை பரிசோதிக்கும் ஒரு ஆய்வாளரின் பார்வையின் கீழ் நூற்றுக்கணக்கான பள்ளிகள் தரப்படுகின்றதும் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. அளவுக்கு மீறி வேலைப்பளு வருகையில், சம்பந்தப்பட்ட ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு செய்யாமல் வாய் வார்த்தைக்கு எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவரும் கையெழுத்து நடைமுறைக்கு வந்துவிடுகிறார். இந்தச் சூழலை சரிசெய்ய, ஆய்வுநடத்தும் அதிகாரிகளுக்கு பணியை பகிர்ந்தளிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அந்தவகையில், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து தலைவரும் அவருடைய கிராமத்திலுள்ள பள்ளிகளின் கட்டமைப்பை உறுதிசெய்ய வேண்டும். இப்படி பணியை பகிர்ந்தளுக்கும்போது, வி.ஏ.ஓ தரப்பில் ஒவ்வொரு பள்ளியிலும் முன்னறிவிப்பின்றி குறைந்தபட்சம் ஒன்று (அ) இரண்டு இன்ஸ்பெக்‌ஷன் செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை அரசு எளிதாக நடைமுறைப்படுத்தலாம்.

இவையன்றி, ஒவ்வொரு பள்ளியிலும் அதன் தரத்தை அரசு ஆடிட் செய்யப்பட வேண்டும். ஆடிட்டின்போது, பள்ளி வருமானத்தை பரிசோதிப்பது மட்டுமன்றி குழந்தைகள் பாதுகாப்புக்கான அனைத்துவகை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் பள்ளியில் உள்ளதா, குழந்தைகள் நல கமிஷனோடு பள்ளி நன்முறையில் இணைந்து செயல்படுகிறதா, இப்பள்ளியில் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பிரச்னை ஏற்பட்டால் அவர்களை சரியாக அணுக பள்ளி நிர்வாகம் சார்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, பள்ளியில் கழிவறை வசதி முறையாக உள்ளதா, விளையாட்டு மைதானம் எப்படி உள்ளது, மரங்களெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதும் உள்ளதா, நூலக வசதி உள்ளதா, கணினி வசதி உள்ளதா, பெஞ்ச் வசதி - மின்சார வசதி உள்ளதா என்பதெல்லாம் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

இந்த ஆடிட், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறப்புக்கு முன்னர் செய்யப்பட வேண்டும். பின் மழை, புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களின்போது, பேரிடர் விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பும் முன்னர் செய்யப்பட வேண்டும். இதை செய்வதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பெற்றோர்கள், பஞ்சாயத்துக்குழு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

image

இவை அனைத்துக்கும் பின்னும் ஒரு பள்ளிக்கட்டடம் இடிந்து விழுகின்றது என்றால், சம்பந்தப்பட்ட கட்டடத்தை அங்கீகரித்த அரசு நகராட்சி துறையின் நகரத்திட்ட அலுவலர், சி.எம்.டி.ஏ. ஊழியர்கள் கைது செய்யப்பட வேண்டும். இப்போது நடந்த நெல்லை பள்ளி விபத்தை முன்னிறுத்தியே இதை குறிப்பிடுகிறேன். ஏனெனில் அந்த விபத்தில் இப்போது வரை கட்டடத்தை அங்கீகரித்த அரசு அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவும் இல்லை; பணிநீக்கம் செய்யப்படவும் இல்லை.

இந்த விஷயத்தில், அரசு முனைப்புக் காட்டுவதை போலவே ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர்களும் அக்கறை காட்ட வேண்டும். என்னைக்கேட்டால், இன்றைய ஆசிரியர்களுக்கு சுயநலனே பெரிதாக இருக்கிறது. சம்பளம் உயர்த்த வேண்டும், அரியர் தொகை தரப்பட வேண்டும் என சுய உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்கள் எவரும் ‘அரசுப் பள்ளியில் இந்த வசதி இல்லை / கட்டடம் சரியில்லை / கணினி வசதி இல்லை / கழிவறை வசதி இல்லை’ என்று போராடுகின்றார்களா? இல்லையே...! அதனால்தான் சொல்கிறேன்.

இன்றைய ஆசிரியர்களில் பெரும்பான்மையானோருக்கு சுயநலன் மட்டுமே உள்ளது. ஆசிரியப்பணி என்பது சம்பளத்துக்கு செய்யும் வேலை அல்ல. மாறாக அது ஆத்மார்த்தமான பணி. அடுத்த தலைமுறையையே உருவாக்கும் இடம், பள்ளிக்கூடம்தான். அப்படி இருக்கையில் ஆசிரியர்கள் சுயநலவாதிகளாக இருப்பதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

image

அரசு உடனடியாக தமிழக ஆசிரியர்களையும், குறிப்பாக ஆசிரியர் சங்கங்களையும் மறுசீராய்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு, அவர்களுக்கும் மாணவர்களுக்குமான பந்தத்தையும்; மாணவர் நலனில் ஆசிரியரின் பங்களிப்பையும்; மாணவர்களே அடுத்த தலைமுறையின் நம்பிக்கை என்பதையும் அரசு போதிக்க வேண்டும். இதையெல்லாம் அரசு செய்தால், பல மாணவர்கள் உயிரிழப்பை நம்மால் தடுக்க முடியும். கல்வி நிலையங்களின் காட்சிகளையும் நம்மால் மாற்ற முடியும்” என்றார்.

இனியாவது கல்விநிலையங்களில் காட்சிகள் மாறுமா? அரசு, செயற்பாட்டாளரின் இந்த குரலுக்கு செவிசாய்க்குமா?

முந்தைய அத்தியாயம்: கொரோனா கால மாணவர் நலன் 14: விரைவில் குழந்தைகளுக்கும் கிடைக்கப்போகிறது கோவிட்-19 தடுப்பூசி!

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close