Published : 19,Nov 2021 12:23 PM
''என்னுடைய வார்த்தைகளை குறித்துக்கொள்ளுங்கள்'' - தனது பழைய வீடியோவை சுட்டிக்காட்டிய ராகுல்

அநீதிக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துகள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, நாட்டிற்கே உணவளிப்பவர்கள் தங்களின் சத்தியாகிரகம் மூலம் ஆணவத்தை தலை குனியச் செய்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
அநீதிக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துகள் என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார். மேலும் அவர் பழைய வீடியோ ஒன்றையும் மேற்கொள் காட்டியுள்ளார். அதில், ''விவசாயிகளின் போராட்டத்தை கண்டு பெருமிதம் கொள்கிறேன். நான் அவர்களுடனே துணை நிற்கிறேன். தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். என்னுடைய வார்த்தைகளை குறித்துக்கொள்ளுங்கள். இந்த அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்'' என்று அதில் பேசியிருக்கிறார்.
देश के अन्नदाता ने सत्याग्रह से अहंकार का सर झुका दिया।
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2021
अन्याय के खिलाफ़ ये जीत मुबारक हो!
जय हिंद, जय हिंद का किसान!#FarmersProtest https://t.co/enrWm6f3Sq