[X] Close

இந்திய பாரம்பரிய இடங்கள் 6: கொனார்க் சூரிய கோயில் - 3 வகை வயதினருக்கும் சிற்ப விருந்து!

சிறப்புக் களம்

Indian-Heritage-Sites-6--Konark-Sun-Temple---Sculpture-feast-for-3-ages

ஆதி காலத்து மனிதன் இயற்கையை வழிபட்டான். காலம் மாற மாற அவனது நம்பிக்கையும், வழிபாடும் மாறத் தொடங்கியது. இயற்கையையே மனித உருவத்துள் புகுத்தி, அந்த உருவங்களைக் கடவுள் என வழிபடத் தொடங்கினர். சூரியன், சந்திரன், வியாழன், புதன் என்று கிரகங்களுக்கும் உருவம் கொடுத்து அவற்றையும் வழிபடத் தொடங்கினார்கள். உருவங்களை ஓவியங்களாக மட்டுமல்லாது சிலைகளாகவும் வடித்தனர். பின்னர் கோயில்களைக் கட்டி அவற்றினுள் அந்தச் சிலைகளை வைத்து வழிபட்டனர். இப்படியாகவே கோயில்களும் இறைவனும் கால ஓட்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்தன எனலாம்.


Advertisement

image

இந்தியாவின் முக்கியத் தொழிலாக அன்றைய காலம் முதல் இன்று வரை அமைந்திருப்பது விவசாயம். அப்படிப்பட்ட விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிப்பது சூரிய ஒளியும் தண்ணீரும். ஒவ்வொரு அறுவடையின்போதும் அந்த போகம் நன்றாய் அமைந்ததற்காக சூரியனுக்கு நன்றிக்கடன் செலுத்தி, படையல் போட்டுவிட்டுதான் அதை சந்தைக்கோ, வீட்டிற்கோ எடுத்துச் செல்வர். இது காலம் காலமாக விவசாயிகள் பின்பற்றும் ஒரு நடைமுறை, பண்பாடு என்றே சொல்லலாம். இவையே, விவசாயிகள் தாண்டி அனைவரும் கொண்டாடும் பொங்கல், ஓணம், லோ ஹரி, மேகி பிஹு, நுவாகை ஜூஹார் பண்டிகைகள் ஆனது. இப்படிப்பட்ட சூரியனுக்கு, வங்கக் கரையோரம் எழுப்பப்பட்ட கொனார்க் சூரிய கோயிலே இன்றைய அத்தியாயத்தின் நாயகன்.


Advertisement

image

பலரையும் வியக்க வைத்த இந்த கொனார்க் சூரிய கோயிலை, 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற 8-வது யுனெஸ்கோ மாநாட்டில் கலாசாரம், நாகரிகம், பாரம்பரியம், தனித்துவம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1, 3 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் கொனார்க் சூரிய கோயில் சேர்க்கப்பட்டது.வரலாறு...


Advertisement

13-ஆம் நூற்றாண்டு காலம் அது. துருக்கி பழங்குடி மக்கள், ஹிந்துகுஷ் மலையைக் கடந்து இந்தியா வந்து, சிந்து - கங்கை நதிகளுக்கு இடைப்பட்ட நிலத்தில் தங்கள் ஆட்சியை ஓரளவு நிலைநிறுத்தி ஒரு நிலையான ஆட்சி புரிந்துக்கொண்டிருந்த காலம் அது. மம்லுக் வம்சத்தைச் சேர்ந்த இல்துமிஷ்-ன் ஆட்சிக்குப் பிறகு, அவரது மகள் ரஸியா பேகம் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கப்பட, அவரது மகன்களுள் ஒருவரான ருகுன்-வுட்-டின் பெரோஸ் போன்ற சில திறனற்ற ஆட்சியாளர்கள் இருந்த காலம். 11-ம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரை இன்றைய ஒடிசா, வங்காளம், சத்தீஸ்கர், வட ஆந்திரா மாநிலங்களை உள்ளடக்கிட மகாநதி - கோதாவரி நதிகளுக்கிடையேயுள்ள நிலப்பகுதிகளைக் கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி புரிந்துவந்தனர். இதிலுள்ள திரிகலிங்கர்கள் பிரிவைச் சேர்ந்தவர் முதலாம் நரசிம்ம தேவர். இவர், பீகார் மற்றும் வங்காளத்தை சுல்தானியர்களிடமிருந்து கைப்பற்றியதன் நினைவாக, ஒரு நினைவு கட்டடம் எழுப்ப நினைத்தார்.

Plan of the Sun Temple at Konark — Attempted Synthesis

சூரிய பகவான் மேல் கொண்ட பக்தியினால், சூரிய கோயில் எழுப்ப முடிவு செய்தார். ஒடியா புராணக் கதையின்படி, கோயிலைக் கட்டும் பணிக்காக, சிறந்த கட்டிட நிபுணரான 'பிஷு மஹாராணா'வை நியமித்தார் நரசிம்ம தேவர். 12 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 1200 பணியாட்களோடு நடைபெற்ற கட்டுமான பணியானது சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்றது. நரசிம்ம தேவரின் கட்டளைப்படி 12 வருடங்களுக்குள் கோயிலைக் கட்டிமுடிக்க வேண்டும். ஆனால், கோயில் கட்டும் பணி, முடியும் நிலைக்கு வந்த பின்னரும், பணியாளர்களின் உடல் எடை காரணமாக கோயிலின் மேல் கலசத்தை வைக்க முடியவில்லை.

கடைசி நாள் வந்துவிட்டதால், மறுநாள் காலைக்குள் பணியை முடிக்காவிடில், 1200 பேரையும் தூக்கிலிடுவதாக உத்தரவிட்டார் நரசிம்ம தேவர். கோயில் கட்டும் பணி தொடங்கியபோது, பிஷு மஹாராணாவுக்கு தர்மபாதர் என்ற குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்ததிலிருந்து 12 வருடங்களாக குழந்தையைப் பார்க்கவில்லை. 12 வருடங்களுக்குப் பிறகு தந்தையைப் பார்க்க வந்த மகன், 1200 பேரையும் மீட்க, கலசத்தை (கிரீடத்தை) கோயிலின் உச்சியில் வைத்து கட்டுமான பணியை நிறைவு செய்தான். அவர்களுக்கு பதிலாக ஒரு குழந்தை பணியை முடித்ததால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும், எனவே தர்மபாதரைக் கொல்லும்படி பிஷு மஹாராணாவை கேட்டுக்கொண்டனர். இதற்கு அவர் கடுமையாக எதிர்த்தாலும், அவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தர்மபாதர், கலசம் வைக்கப்பட்ட இடத்திலிருந்து கடலில் குதித்து தன்னுயிரை நீத்து, தந்தையையும், பணியாளர்களின் உயிரையும் மீட்டார் என ஒடியா புராணக் கதையில் கூறப்படுகிறது.

image

அதற்குப்பின், 1508-ல் சுல்தான் சுலைமான் போர் தொடுத்து வந்தபோது முக்கிய கருவறையும் இதர இந்து கோயில்களும் சேதப்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது. 15-வது மற்றும் 17-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பல முறை பல்வேறு படைகளால் இக்கோயில் சூறையாடப்பட்டதாக நூல்கள் கூறுகின்றன. இதையடுத்து, புயல், அரிப்பு காரணமாகவும், கலசத்தின் எடை அதிகமான காரணமாகவும் கட்டடம் சரிந்துள்ளது. புதர் மண்டிய நிலையிலிருந்த கோயில் 1,800-களில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கத் தொடங்கினர். தற்போது, இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

image

கட்டடத்தின் சிறப்பு:

கலிங்க கட்டிடக்கலை அமைப்புப்படி, 7 குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களுடன் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருள்வது போல தேர் வடிவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 7 குதிரைகள் 7 நாட்களையும், 24 சக்கரங்கள் 24 மணி நேரத்தையும் குறிக்கும். நாழிகை, நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கால ஓட்டத்திற்கு ஏற்பவும், சூரியனின் நகர்வுக்கு ஏற்பவும், சூரிய ஒளியானது மூலவரின் சிலை மீது படும் வகையிலும் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.

image

இந்தக் கோயிலின் தனித்தன்மையை உணர்ந்து, இதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ. கலிங்க கட்டிடக் கலையில் விமானம், கோபுரம், கற்ப கிரகம், மக்கள் கூடும் மண்டபம், நாடக / நடன மண்டபம், தரிசன மண்டபம், அன்னதான சாலை, கோபுரம்தான் முக்கிய அங்கங்கள். கோயிலின் கோபுரம் 1676-ம் ஆண்டிலிருந்து கருப்பு நிறமாக உள்ளது. இதனால் இது 'கருப்பு பகொடா' என்று அழைக்கப்பட்டது. பிரதான கோயிலில் 229 அடி உயரம் கொண்டது விமானம். இங்குள்ள மண்டபத்தில் ஜகன்மோஹனா எனப்படும் தரிசன அரங்கம் 128 அடி உயரமுடையது.

தேர்ச்சக்கரத்தின் சிறப்பு:

இங்குள்ள தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை. இந்த தேரின் சக்கரத்தை நாம் தினமும் கையாளுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 10 ரூபாய் நோட்டின் பின்னால் இருப்பது கொனார்க் சூரிய கோயிலின் தேர்ச்சக்கரமே.

image

தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 9 அடி, 9 அங்குலம் என்ற கணக்கில் 8 பெரிய ஆரைகளும், பெரிய ஆரைகளுக்கு இடையில் 8 சிறிய ஆரைகளும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சக்கரம் ஒரு முழு நாளை குறிக்கும். பெரிய 8 ஆரைகள் 24 மணிநேரத்தை 8 ஆகப் பிரிக்கும். அதாவது ஒரு ஆரை 3 மணி நேரக்கணக்கு. இடையில் உள்ள சிறிய ஆரை ஒன்றரை மணி (90 நிமிடங்கள்) நேரக் கணக்கு. ஒரு பெரிய ஆரைக்கும் ஒரு சிறிய ஆரைக்கும் இடையில் முப்பது முத்துபோன்ற அமைப்புகள் உள்ளது. ஒவ்வொரு முத்தும் 3 நிமிட அளவுகளைக் கொண்டது. இதைக் கொண்டு ஒரு நாளின் நேரத்தை இதில் விழும் சூரிய நிழல் மூலமாகத் துல்லியமாக கணக்கிட முடியும். சக்கரங்கள் முழுவதும் சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளன.

image

கட்டிட நுணுக்கங்கள்:

இக்கோயில் சிவப்பு மணற்பாறை கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள பெரும்பாலான கற்கள் அனைத்தும் நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களைக் கொண்டுள்ளன. இது மூன்று வகை கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இதில், கோண்டலைட் பாறைகள் எனப்படும் பாறை அமைப்புகள் திடம் குறைவானவை. எளிதில் அரிக்கக்கூடியது. இதனை எழிலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டிடம் சிதைந்ததற்கு இந்த பாறைகூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை வடிவமைத்த கலைஞர்கள் 'ஆஷ்லார்' (Ashlar Technique) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டிடத்தில் கற்கள் சேருமிடம் தெரியாத அளவு இதை வடிவமைத்துள்ளனர். மிகவும் சிறிய இடங்களில் கூட இதை வைத்து அலங்கரித்துள்ளனர். சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்ற விதிப்படி கொனார்க் கோயில் கிழக்கு - மேற்கு வாயில்கள் திட்டவரைவைக் கொண்டது. சூரியன் என்றாலே சமஸ்கிருத முறைப்படி 7 குதிரைகள் பூட்டிய ஒரு தேரில் வருவதாய் தான் உருவங்கள் இருக்கும். அந்த அமைப்பையே அடிப்படையாகக் கொண்டு ஒரு தேர் அமைப்பிலான கோயிலையே கட்டியுள்ளனர்.

கொனார்க் சூரிய கோயிலுக்கு அருகிலேயே பாழடைந்த நிலையில் இரண்டு கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலொரு கோயில் சூரிய பகவானின் மனைவியான மாயாதேவியுடையது.

தேர் கோயில்:

கொனார்க் கோயிலின் முகப்பில் உள்ள சிலையே சிறப்புமிக்கது. ஏனெனில், பேய்களை அடக்கி ஒரு யானை அதன் மீது படுத்திருக்கும். அந்த யானையை அடக்கி ஒரு சிங்கம் அமர்ந்திருக்கும். இந்த கம்பீர தோற்றமே நம்மைப் புல்லரிக்கச் செய்து நம்மை வரவேற்கும்.

image

சமஸ்கிருத முறைப்படி, Gayatri, Brihati, Ushnih, Jagati, Trishtubha, Anushtubha, Pankti எனும் ஏழு குதிரைகள் பூட்டிய தேராக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேருக்கு 12 ஜோடிகள் (24) சக்கர அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 12 ஜோடி சக்கரம் என்பது 12 மாதங்களைக் குறிப்பதாக அமைகிறது. ஒவ்வொரு சக்கரத்தை ஒட்டியுள்ள சிலைகள் வெவ்வேறு பருவகால நிலையைக் குறிப்பதாக அமைகிறது. சூரிய பகவான் சிலை அருகில் உஷா மற்றும் பிரத்யுஷா என்ற இரண்டு பெண் தெய்வங்களின் சிலைகள் உள்ளன. மண்டபத்திலிருந்து வெளியே வரும் படிக்கட்டின் இருபுறமும் பைரவர், யாழி போன்ற சிலைகள் கம்பீரமாய் நிற்கும். பிரதான மண்டபத்தின் வலப்புறம் குதிரையும், இடப்புறம் யானை சிலைகளும் உண்டு. அது தவிர்த்து வலப்புறத்தில் மகாதேவி கோயிலும், சிறிய வைஷ்ணவ கோயிலும் அமைந்திருக்கும். போஜன மண்டபத்தில் சமையலறை, கிணறு போன்ற அமைப்புகளும் உள்ளது.

வியக்கவைக்கும் சிலைகள்:

"இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியைத் தாண்டிச் செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார் ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரிய கோயிலின் சிற்பங்கள். இந்தக் கோயிலுக்கு வரும் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று பருவத்தினருக்கும் மகிழ்ச்சி சேர்க்கும் வகையில் தனித்தனியாகச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.

image

சிறுவர்களுக்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் மிகக் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக ஊடல், கூடல், ஆடல் போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் கண்டுகளிக்க ஆன்மிக சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கோயிலின் அடிவாரம் முதல் கிரீடம் வரை உள்ள சுவர்கள் அழகிய சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மொட்டை மாடிகளில் வீணை, மார்டலா போன்ற பல்வேறு இசைக்கருவிகளை வைத்திருக்கும் ஆண் மற்றும் பெண் இசைக் கலைஞர்களின் கற்சிலைகள் உள்ளன. இதுபோன்ற மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் கல்லிலே காட்சியோட்டம் காட்டுவது போல் ஏராளமான சிற்பங்கள் அமைந்துள்ளன.

image

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு...

கொனார்க்கில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' மிகவும் புகழ் பெற்றது. அப்போது சூரிய பகவானை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோயில் முன் நடனத் திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது.

image

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் கொனார்க் அமைந்துள்ளது. பூரி, புவனேஸ்வர், பிப்லி போன்ற பல நகரங்களில் இருந்து பேருந்துகள் மூலமாகவோ, சொந்த வாகனம் மூலமாகவோ கொனார்க் செல்லலாம். பூரி ரயில் நிலையத்திலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், புவனேஸ்வர் ரயில் நிலையத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, நாக்பூர் விமான நிலையங்களிலிருந்து புவனேஸ்வருக்கு நேரடி விமானங்கள் உள்ளன. புவனேஸ்வர் விமான நிலையத்திலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் கொனார்க் உள்ளது. காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை கொனார்க் சூரிய கோயிலைக் கண்டு ரசிக்கலாம். இரவு 7 மணியளவில் ஆங்கிலம், ஒடியா, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி நடைபெறும் 30 நிமிடம் நடைபெறுகிறது.

image

கட்டணம்: கொனார்க் சூரிய கோயிலைச் சுற்றிப் பார்க்க விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

சுற்றுலாவிற்குச் செல்ல விரும்புபவர்கள் https://asi.payumoney.com/tickets என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பூரி ஜெகநாதர் கோயில், கொனார்க் சூரியகோயில், புவனேஸ்வரின் லிங்கராஜர் கோயில் ஒடிசாவின் முப்பெரும் ஸ்தலங்கள் எனலாம். ஒடிசா சுற்றுலா திட்டமிடும் போது இம்மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது சிறப்பாக அமையும்.

(உலா வருவோம்...)

முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 5: தாஜ்மஹால்... கட்டடங்களின் இளவரசி, காதலின் அடையாளம்!


Advertisement

Advertisement
[X] Close