Published : 04,Oct 2021 11:17 AM
முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை

தமிழகத்தில், வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சிக்கான முதற்கட்ட தேர்தலில் வாக்கு சேகரிப்புக்கான கால அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளlது. இதையொட்டி தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதிகட்டப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையை அடுத்த செங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு வேட்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், அம்பாசமுத்திரம் மற்றும் கடையத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்துதீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில், அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வீதி வீதியாகச் சென்று மக்களிடம் விநியோகித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் பகுதியில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான காமராஜ், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.