[X] Close

உருவக்கேலி முதல் 'மோஸ்ட் வான்டட்' காமெடியன் வரை... சினிமாவில் யோகி பாபு தடம் பதித்த கதை!

சிறப்புக் களம்

Tamil-actor-Yogi-Babu-success-story

ஒரு மனிதனின் வெற்றிக்கு பணமோ, தோற்றமோ, பெரிய பின்புலமோ தேவையில்லை... அயராத உழைப்பும் நம்பிக்கையும் இருந்தாலே போதுமானது என்பதற்கு நம் கண் முன் இருக்கும் சான்றுதான் தமிழ் நடிகர் யோகி பாபு. மனிதர்கள் இயல்பாக சந்திக்க நேரிடும் அவமானங்கள், புறக்கணிப்புகள் அனைத்துமே இவருக்கு சற்றே தூக்கல்தான். அனைத்தையும் கடந்து யோகி பாபு சாதித்த கதையைப் பார்ப்போம்.


Advertisement

கிராமப் பின்னணியில் இருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் காமெடியனாக இருக்கும் யோகி பாபுவின் தந்தை ஒரு ராணுவ வீரர். சிறுவயதில் படிப்பு அவ்வளவாக வராததால் பத்தாம் வகுப்போடு நின்றுவிட்ட யோகி பாபுவுக்கு தந்தையை போலவே ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விருப்பம். 10-ம் வகுப்பு முடித்த பின் இதற்கான முயற்சிகளில் இறங்கியவருக்கு முதல் முயற்சி கைகூடவில்லை. இரண்டாம் வாய்ப்புக்காக எதிர்நோக்கி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். அந்த தருணத்தில் நண்பர் ஒருவர், உறவினரிடம் காசு வாங்க வேண்டும் என்றும், உறவினர் `லொள்ளு சபா' படப்பிடிப்பில் இருப்பதால் அங்குச் செல்ல துணைக்கு அழைத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான `லொள்ளு சபா' அப்போது தமிழகத்தில் மிகப் பிரபலம். பட்டிதொட்டி எங்கும் இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருந்த அந்த ஷோ, யோகி பாபுவுக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக இருந்தது. அதனால் நண்பன் உடன் சென்றால், அதன் ஷூட்டிங்கை பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் `லொள்ளு சபா' செட்டுக்கு செல்கிறார். அங்கு சிறிதுநேரம் இருந்தபோதுதான் இயக்குனர் ராம்பாலா, யோகி பாபுவை முதல்முறையாக பார்க்கிறார்.


Advertisement

image

முதல்முறை பார்த்தபோதே அவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். காரணம், யோகி பாபுவின் வித்தியாசமான `ஹல்க்' நடையும், அவரின் உடல்வாகும் அந்தக் கூட்டத்தில் அவரை தனித்து தெரியவைக்கிறது. இதனை கவனித்த ராம்பாலா அவருடன் பேச்சு கொடுக்கிறார். யோகிபாபு உடன் பேசியபோது அவரின் ராணுவக் கனவு தெரியவருகிறது. ஆனால் `இரண்டாம் வாய்ப்பு கிடைக்க, குறைந்தது 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால் அதுவரை வேறு வேலை தேட வேண்டும்' என யோகிபாபு சொல்ல, ராம்பாலா நடிக்க அழைக்கிறார்.

தனக்கு நடிப்பெல்லாம் வராது என கிடைத்த வாய்ப்பை மறுக்கப் பார்த்த அவரை, இரண்டு சீன்கள் மட்டும் நடித்து காண்பிக்கச் சொல்லி அந்த இடத்திலேயே கேட்கிறார். அவர் கொடுத்த இரண்டு சீன்கள்: 'திருவிளையாடல்' படத்தில் சிவாஜி கணேசன் நடந்துவரும் காட்சியும், 'மூன்று முகம்' படத்தில் ரஜினிகாந்தின் வசனக் காட்சியும். இரண்டிலுமே சிவாஜி போலவோ, ரஜினிகாந்த் போலவோ யோகிபாபு செய்யவில்லை. ஆனால் அவர் செய்த விதம் `லொள்ளு சபா' செட்டை கலகலப்பாக்கியது. அந்த தருணத்தில், அவருக்குள் இருக்கும் நகைச்சுவைத் திறனை உணர்ந்த இயக்குநர் ராம்பாலா, யோகியின் நம்பரை வாங்கி வைத்துக் கொள்கிறார்.


Advertisement

எதிர்பார்த்தது போலவே இரண்டு, மூன்று வாரம் கழித்து ராம்பாலாவிடம் இருந்து `லொள்ளு சபா'வில் நடிக்க அழைப்பு வருகிறது. நான்கு செட் துணிகளை எடுத்துக்கொண்டு ஷூட்டிங் கிளம்புகிறார் யோகிபாபு. முதல்முறைச் நடிக்க செல்கிறார். அந்த நான்கு நாள்கள் பெரிய வேடம் இல்லையென்றாலும், முதல்முற்சியை அவர் கைவிடவில்லை. இதைவிட அவருக்கு அந்த நான்கு நாள்களின் ஷூட்டிங்கிற்காக ரூ.50 சம்பளம் கொடுக்கப்படுகிறது. பூந்தமல்லியில் இருந்து 100 ரூபாய் செலவு செய்து படப்பிடிப்பு சென்றவருக்கு கிடைத்த சம்பளம் 50 ரூபாய் ஒரு விரக்தியை தருகிறது. ஆனால், ஷூட்டிங்கின் மீது இருந்த ஆர்வம், சினிமா மீது இருந்த மோகம் அந்த விரக்தியை ஓரம்கட்டி மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பை கொடுக்கிறது.

image

ராணுவத்துக்கான வாய்ப்பு வரும்வரை இதனைத் தொடர முடிவு செய்தவர், ராம்பாலா உடன் பயணிக்க ஆரம்பிக்கிறார். `லொள்ளு சபா'வின் முக்கிய எபிசோடுகளில் சிறிய வேடங்கள் என்றாலும், நடித்துக்கொண்டு ராம்பாலா உடன் ஓர் உதவியாளர் போல் செல்கிறார். நடிப்பதுடன், வசனம் எழுதுவது என ரூ.50-க்கு வேலைக்குச் சென்றவர், படிப்படியாக உயர்ந்து அவரின் சம்பளம் ரூ.750-ஐ தொடும்போது ஐந்து வருடங்கள் கடக்க, 'லொள்ளு சபா' நிறுத்தப்படுகிறது. ராணுவத்திலும் சேர முடியாத நிலையை தாண்டியபோது சினிமாவே இனி வாழ்க்கை என முடிவெடுக்கிறார்.

அவர் நினைத்தபோல் அவ்வளவு எளிதாக சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் முயற்சியை ஒருபோதும் கைவிடவில்லை. அலைகிறார். கோடம்பாக்கத்தின் தெருக்களைச் சுற்றுகிறார். ஒவ்வொரு இயக்குநராக, தயாரிப்பு அலுவலகங்களாக வாய்ப்புக்காக ஏறி இறங்குகிறார். ஒருகட்டத்தில் கோடம்பாக்கத்தில் யோகிபாபுவின் கால்தடம் பதியாத இடமே இல்லை என்னும் அளவுக்கு சுற்றிவிட்டார். ஆனாலும் செல்லும் இடமெல்லாம், தனது உருவத்தை வைத்து கேலியையே எதிர்கொள்கிறார். அவரின் உடலமைப்பை வைத்து `உனக்கெல்லாம் சினிமா ஆசை ஏன்?' என்ற உதாசினச் சொல், பார்ப்பவர்கள் அனைவரும் கூறுவது. இத்தனைக்கும் யோகிபாபு ஒன்றும் ஹீரோ வாய்ப்போ, அமெரிக்க மாப்பிள்ளை வேடம் வேண்டும் என்று தேடி அலையவில்லை.

சண்டைக் காட்சிகளிலும், காமெடி காட்சிகளிலும் எடுக்கும்போது பத்தில் ஒன்றாக நிற்கும் வேடமே அவரின் அதிகபட்ச ஆசையாக இருந்தது. இந்த வாய்ப்பை கொடுக்கவும் அவர்கள் தோற்றப் போலிவு பார்த்து, யோகிபாபுவை விரட்டினர். சில நேரங்களில் தயாரிப்பு நிறுவனத்தின் வாட்ச்மேனால் விரட்டப்படும் அவமானங்களையும் சந்தித்துள்ளளார். ஒருகட்டத்தில் சினிமா ஆசையை மூட்டைக்கட்ட நினைத்தபோதுதான், எந்த உருவக்கேலியால் தமிழ் சினிமாவில் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட நபராக பார்க்கப்பட்ட தனுஷை வைத்து `திருடா திருடி' என்ற ஹிட் படத்தை கொடுத்து தனுஷை ஹீரோவாக மக்கள் மனதில் பதியவைத்த இயக்குநர் சுப்ரமணியம் சிவாவிடம் இருந்து அழைப்பு வருகிறது. இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த `யோகி' என்ற படத்திற்காக அழைப்பு வருகிறது. தனது ஆசைப்படியே சினிமாவுக்குள் முதல் என்ட்ரி கொடுக்கிறார் யோகி பாபு. இந்தப் படமும் வரவேற்பை பெற அதுவரை பாபு என அழைக்கப்பட்டவர், யோகி பாபுவாக மாறுகிறார்.

image

ஓரளவு தனக்கு இருக்கும் பழக்க வழக்கங்கள் மூலம் அடுத்தடுத்து சினிமா வாய்ப்பைத் தேடுகிறார். கிடைத்த வேடங்களில் நடித்துவந்தவர், தனது நான்காவது படமாக வெளிவந்த கார்த்தியின் `பையா'வில் சிறிய சீன்தான். ஆனால் ரவுடி வேடம். ரவுடியிச காட்சிகளில் நடிக்கும்போது அருகில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிடுகிறார்கள். அந்தச் சம்பவத்துக்கு பிறகு, ரவுடி வேடங்களே வேண்டாம் என முடிவெடுத்து தனக்கு இயல்பாக வரும் காமெடியை பின்தொடர்கிறார். ஆரம்பத்தில் 'கலகலப்பு', 'அட்டகத்தி', 'பட்டத்து யானை', 'சூது கவ்வும்' போன்ற படங்கள் அவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தன.

2014-ல் வெளிவந்த 'வீரம்', 'மான்கராத்தே' அவர் ஏற்ற வேடங்கள் நல்ல ரீச்சை ஏற்படுத்தி கொடுத்தது. இதே ஆண்டில் `யாமிருக்க பயமேன்' படத்தில் பேய் வேடம். இதில் அவரின் பெயர் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அதற்கு கிடைத்த ரீச் வேறு விதமாக இருந்தது. தமிழ் சினிமாவில் பிஸியான நடிகரானார். ஷங்கரின் 'ஐ' தொடங்கி அஜித்தின் 'வேதாளம்' வரை 2015-ல் 13 படங்கள் நடித்தார். 2016-ல் 20 படங்கள் நடித்தார். 2015-ல் 'காக்கா முட்டை' வழக்கமான காமெடி வேடத்தில் இருந்து அழுத்தமான பாத்திரமாக அமைந்ததோ அதே இயக்குநரின் அடுத்தப் படமாக 2016 வெளிவந்த `ஆண்டவன் கட்டளை' மீண்டும் யோகி பாபுக்கு அழுத்தமான ஒரு பாத்திரத்தை கொடுக்க, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருமாறினார்.

இந்த தருணத்தில் சந்தானம் காமெடி பாத்திரங்களில் நடிப்பதைவிட்டு ஹீரோ அவதாரமெடுக்க, காமெடியனுக்கென தமிழ் சினிமாவில் ஏற்பட்ட வெற்றிடம் தானாக யோகிபாபுவிடம் தேடிவந்தது. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார். அஜித், விஜய் போன்ற ஸ்டார் நடிகர்களுடன் நடிக்கும் அதே வேளையில், வளர்ந்து வரும் நடிகர்களுடனும் நடித்தார். சில ஆண்டுகள் முன் நயன்தாராவின் `கோலமாவு கோகிலா' படத்தில், `எனக்கிப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடீ' டூயட் இவரது சினிமா கிராஃபை மேலும் உயர்த்தியது.

image

பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த இந்தப் பாடலால் யோகி பாபுவின் வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருந்தது. இன்று யோகிபாபு இல்லாமல் பெரும்பாலான படங்கள் வருவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் வெளிவந்த `மண்டேலா' யோகிபாபுவின் நடிப்பில் புது அவதாரமாக வந்தது. இதில் 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு அழுத்தமான ஒரு பாத்திரம். கதைக்கான நடிகனாக தனி முத்திரை பதித்திருக்கிறார்.

தனது படங்களின் மூலமாக இரும்பை காந்தம் கவ்விக்கொள்வது போல யோகி பாபுவின் காமெடி ரசிகர்களை இதயங்களைப் பற்றிக்கொண்டது. இயல்பாக அவரிடமிருந்த உடல்மொழியும், நகைச்சுவைத் திறனும் தனக்கு பரிச்சயமான ஒருவர் திரையில் பேசுவது போல தோன்றியதால் ரசிகர்களால் அவரை எளிதாக கனெக்ட் செய்ய முடிந்தது. யோகி பாபுவுக்கு இதை சாத்தியப்படுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை.

யோகி பாபுவின் முடியைப்போல அவரது வாழ்க்கையும் சிக்கலாகவே இருந்துள்ளது. வாழ்வில் யோகி பாபு சந்தித்த அளவு உருவகேலிகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்க முடியாது. சில தினங்களுக்கு முன்புகூட ஓவியா உடன் நடிக்கப் போகிறார் என்றதும் அவரை சுற்றி சிலர் கலாய்ப்புகளில் ஈடுபட்டதையும் கவனிக்க முடிந்தது.

இதையெல்லாம் கடந்து தொடர்ந்து தனது தன்னம்பிக்கையால் விடா முயற்சியால், தனக்கு நேர்ந்த தடைகளை உடைத்து முக்கியத்துவம் வாய்ந்த காமெடி நட்சத்திரம், கதையின் நாயகன் என தனிமுத்தரை பதித்துள்ள யோகி பாபு நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனே.

- மலையரசு

வாசிக்க > பக்குவமில்லா பகடி முயற்சி, 'லாஜிக்'கில்லா ஜாலி: பேய் மாமா - ஒரு விரைவுப் பார்வை


Advertisement

Advertisement
[X] Close