kishore Thalamai Seyalagam Review
kishore Thalamai Seyalagam ReviewZee5

Thalamai Seyalagam review | ஊழலில் சிக்கும் முதல்வர்... எப்படியிருக்கிறது இந்த தலைமைச் செயலகம்..?

இது ஒரு binge watchஆ என்று கேட்டால், கண்டிப்பாக விறுவிறுப்பாக நகரும் ஒரு தொடர், binge watch செய்ய தகுந்தது தான்.
Thalamai Seyalagam (3.5 / 5)

ஊழல் வழக்கில் சிக்கிய முதலமைச்சரும்... கொலை குற்றவாளி ஒருவரை தேடும் போலீஸ் பயணமும் இணையும் புள்ளியே Zee5ல் வெளியாகியிருக்கும் `தலைமைச் செயலகம்’ தொடரின் ஒன்லைன்.

அருணாச்சலம் (கிஷோர்) தமிழ்நாட்டின் முதலமைச்சர். அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அவரது மகள் அமுதவள்ளி (ரம்யா நம்பீசன்), நண்பர் (சந்தான பாரதி), உறவினர்கள் (கவிதா பாரதி, நிரூப் நந்தகுமார்) ஆகியோர் இருக்க, முதலமைச்சரின் தோழியும், கட்சி ஆலோசகருமாக கொற்றவை (ஸ்ரேயா ரெட்டி) இருக்கிறார். கட்சியின் இப்போதைய பரபரப்பு ஒன்றுதான். அருணாச்சலம் மீது ஊழல் வழக்கு இருக்கிறது, நீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் நிரபராதி என நிரூபிக்க கட்சி சார்பில் பல முயற்சிகள் நடக்கிறது. ஆனால் கட்சியினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழக்கில் அருணாச்சலம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைக்கு செல்வார் என உறுதியாகத் தெரிகிறது. அவருக்குப் பின் கட்சியின் தலைமைப் பொறுப்பு யாருக்கு? அடுத்த முதலமைச்சர் யார்? என்பதே பெரிய பேசுபொருள். அந்த இடத்தைப் பிடிக்க சிலரும், அவர்களை உசுப்பேற்ற பலரும் இருக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் ஜார்கண்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு விசாரிக்கப்படுகிறது. அந்தக் கொலையாளியை போலீஸ் பிடிக்கவில்லை என இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதை விசாரிக்கும் அதிகாரியாக வருகிறார் நவாஸ்கான் (ஆதித்யா மேனன்). முதலமைச்சரின் வழக்கு என்ன ஆகிறது? கொலையாளி பிடிபட்டாரா? இந்த இரண்டு விஷயங்களும் இணையும் புள்ளி எது? இவற்றை எல்லாம் எட்டு எப்பிசோடுகளில் விரிவாக சொல்கிறது `தலைமைச் செயலகம்’.

சீரிஸின் பாசிடிவ்ஸ் என்றால் முதலில் நடிப்பை தான் சொல்ல வேண்டும். லீட் ரோலில் நடித்திருக்கும் அனைவரும் அழுத்தமான நடிப்பால் கவர்கிறார்கள். முதலமைச்சர் அருணாச்சலம் கதாப்பாத்திரத்தில் கிஷோர் அத்தனை பொருத்தம். கட்சியின் மானத்துக்கு பங்கம் வரும் போது பொங்குவது, பிரச்சனைகளை கண்டு குழம்புவது, சில சமயங்களில் தடுமாறுவது என பல உணர்வுகளை அழகாகக் கடத்துகிறார். கொற்றவை கதாப்பாத்திரத்தில் வரும் ஸ்ரேயா ரெட்டிக்கு மிடுக்கான, கறாரான வேடம். அரசியலில் துணிவாக முடிவெடுப்பது, தன்னை வெறுக்கும் மகளை கையாளமுடியாமல் தடுமாறுவது என இரு வேறு உணர்வுகளையும் தெளிவாக வெளிப்படுத்துகிறார். கதையின் மையக் கதாப்பாத்திரமாக இல்லை என்றாலும் சந்தான பாரதியின் நடிப்பு மிக இயல்பாக இருந்தது. ஒரு சம்பவத்திற்குப் பிறகு பதைபதைத்து போகும் காட்சி பிரம்மாதம். இவர்கள் தவிர ரம்யா நம்பீசன், கனி குஸ்ருதி, ஆதித்யா மேனன் எனப் பலரும் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஸ்ரேயா ரெட்டி | தலைமைச் செயலகம்
ஸ்ரேயா ரெட்டி | தலைமைச் செயலகம்

சில இடங்களை உணர்வுப்பூர்வமாக கையாண்டிருந்த விதமும் சிறப்பு. குறிப்பாக கிஷோர் - சந்தான பாரதி சம்பந்தப்பட்ட காட்சியில் தர்ம சங்கடமான உணர்ச்சியை அழகாக திரையில் கடத்தியிருந்தார்கள். வைட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு தரம். அரசியல் படம் என்றாலும் பெரிய கூட்டமுள்ள காட்சிகள் பெரிய அளவில் இடம்பெறாது. ஒரு கட்சி அலுவலகத்தில் நடக்கும் விவாதங்கள், முதல்வரின் வீட்டில் நடக்கும் குழப்பங்கள், இது போக சில சண்டைக்காட்சிகள் என ஒவ்வொன்றிலும் பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஜிப்ரானின் பாடல்கள், சைமன் கிங் பின்னணி இசை இரண்டும் அட்டகாசம். கதையில் விறுவிறு உணர்வு வரக் காரணமே பின்னணி இசைதான் எனலாம்.

சீரிஸின் குறைகள் எனப் பார்த்தால், மொத்த சீரிஸும் பல ஏன்? எதற்கு? எப்படி? கேள்விகளை எழுப்புகிறது. அவை இந்த சீரிஸ் கடத்த வேண்டிய உணர்வுகளுக்கு குறுக்கே நிற்கிறது. முதலில் அருணாச்சலம் செய்த ஊழல் என்ன என்ற எந்த தெளிவும் இல்லை. கார் நிறுவனம் சார்ந்த ஊழல் ஒன்றை செய்துவிட்டார் என மேம்போக்காக சொல்லப்படுகிறது. அதனால் ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன என்ற அந்த தகவலும் இல்லாமல், அதை எப்படி தீர்க்க முயல்கிறார்கள் என்று மட்டுமே சொல்கிறார்கள். இது நம்மை அந்தப் பிரச்சனையை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு நபர் போல் மாற்றிவிடுகிறது. மாயா கதாப்பாத்திரத்திற்கு எதற்காக அவளின் அம்மா மேல் அப்படி ஒரு கோபம் என்ற தெளிவும் இல்லை. வெறுமனே அவளின் அம்மா பற்றி உலவும் வதந்திகளை வைத்து மட்டுமே கோபம் வந்தது என்றே வைத்துக் கொள்வோம். அதை நிறுவுவதற்கான எந்த காட்சிகளும் இல்லாததால், அதுவும் வலுவின்றி இருக்கிறது. மேலும் ஒரு டீன் ஏஜ் பெண் மிகப்பெரிய டீலை முடிக்கிறார் என்பது சுத்தமாக நம்பும்படியால இல்லை அல்லது நம்பும்படியாக காட்சியாக்கப்படவில்லை. தண்ணிக் கேன் வாங்கிட்டு வர்றேன் ரேஞ்சில், கோடிக்கணக்கான டீலிங்கை செய்வதில் நம்பகத்தன்மையை கொடுத்திருக்கலாம்.

பல காட்சிகள் என்ன நோக்கத்திற்காக வைக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றாமல் மற்றும் ஒரு காட்சியாகவே கடக்கிறது. கொற்றவை கதாப்பாத்திரம், ஒரு நபரை உளவாளியாக மாற்றி அதனால் ஒரு காரியத்தை சாதிக்க நினைக்கும். ஆனால் அந்த உளவாளியால் நடந்தது என்ன என்று யோசித்தால் எதுவும் இருக்காது. நீதிமன்றத்திற்குள் மொபைல் போனை வைத்து ஒன்று முயன்றிருக்கிறார்கள் அதுவும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக இல்லை. இதில் சிறப்பான நடிப்பு இருப்பது போல் சில மோசமான நடிப்பும் இருக்கிறது. கொற்றவை வீட்டு பணிப்பெண் கேத்தி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது அவ்வளவு ரசிக்கும்படி இல்லை. முதலமைச்சரின் மருமகனாய் வரும் நிரூப் நந்தகுமார் நடிப்பிலும் அத்தனை செயற்கைத்தனம்.

இவை மட்டுமின்றி சீரிஸின் பல திருப்பங்கள் யூகிக்கும்படி உள்ளது. கதையின் துவக்கத்தில் முகத்தை மறைத்தபடி சண்டையிடும் கதாப்பாத்திரம் காட்டப்படும், அது யார் என நாமே எளிதில் கண்டுபிடித்துவிடுவோம். இன்னொரு கதாப்பாத்திரம் யார் என்ற உண்மை சொல்லப்படும், அதையும் முன்பே நாம் கணித்துவிடுவோம். இது ஒரு அரசியல் கதைக் களம் என்பதால், நிஜமான நிகழ்வுகள் / நாம் கேள்விப்பட்ட விஷயங்கள் போன்றவை காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒன்றிரண்டு தவிர வேறெதும் சுவாரஸ்யமான விதத்தில் இடம்பெறவில்லை. மேலும் அவை எல்லாம், இது அந்த நிகழ்வு தானே? இவர் அவர் தானே? என்ற சின்ன குறுகுறுப்பை தரும் அளவிலேயே இருக்கின்றன.

இது ஒரு binge watchஆ என்று கேட்டால், கண்டிப்பாக விறுவிறுப்பாக நகரும் ஒரு தொடர், binge watch செய்ய தகுந்தது தான். ஆனால் சுவாரஸ்யமான காட்சிகளோ, நிகழ்வுகளோ இதில் இல்லை. ஏற்கனவே zee5ல் வெளியான விலங்கு, அயலி போன்ற தொடர்களில் நாம் ரசித்த காட்சியோ, வசனமோ, மொமண்ட் என பலவற்றை சொல்லமுடியும். ஆனால் அப்படி ரசிக்க `தலைமைச் செயலகத்தில்’ வாய்ப்பு பெரிதாய் இல்லை. மற்றபடி விறுவிறுவென நகர்ந்தால் போதும் என்பவர்களுக்கு இந்த சீரிஸ் திருப்தி அளிக்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com