இயக்குநர் பாலசந்தரின் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்கள் கூட வலிமையாக வடிவமைக்கப்படும். சம்பந்தப்பட்ட திரைப்படத்தை ஒருவர் நினைவுகூரும் போதெல்லாம் பிரதான பாத்திரங்களைத் தாண்டி துணைக் கதாபாத்திரங்களும் நிச்சயமாக நினைவிற்கு வரும்.
அத்தகைய பாத்திரங்களில் ஒன்று ‘திலீப்’.
நடிகர் திலீப் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். சில நடிகர்களுக்கு இயற்பெயர் மறைந்து அவர்கள் அறிமுகமான திரைப்படத்தின் பாத்திரமே பெயராக நிலைத்து விடும். கர்நாடகாவைச் சேர்ந்த திலீப்பின் இயற்பெயர் வேறாக இருக்கக்கூடும். ஆனால் கதாபாத்திரத்தின் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.
‘வறுமையின் நிறம் சிவப்பு’ திரைப்படத்தில் அறிமுகமான திலீப், பிறகு மோகன் உள்ளிட்ட ஹீரோக்களின் படங்களில் நண்பன் பாத்திரங்களில் நடித்தார். இயக்குநர் விசு தன்னுடைய திரைப்படங்களில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்தார். ‘சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி போன்ற திரைப்படங்களில் நடித்த திலீப், ஏராளமான கன்னடத் திரைப்படங்களிலும் நடித்தார்.
உடல்நல பாதிப்பு, தொழில் நஷ்டம் போன்ற காரணங்களால் 2001-ல் திரைத்துறையிலிருந்து விலகியவர், உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து 2012-ம் ஆண்டு மறைந்தார்.
ஸ்பிலிட் பர்சனாலிட்டி போன்ற உளச்சிக்கல் கொண்ட பாத்திரங்களையெல்லாம் நாம் இப்போதுதான் தமிழ் சினிமாவில் ‘அந்நியன்களாக’ பார்க்கிறோம். ஆனால் எண்பதுகளிலேயே இப்படிப்பட்டதொரு பாத்திரத்தை பாலசந்தர் படைத்து விட்டார். ஆம், திலீப் என்கிற பாத்திரம் இப்படிப்பட்டதுதான்.
தீமையின் பக்கம் இறங்க நாம் யோசிக்கும் போதெல்லாம் நம் மனச்சாட்சி உள்ளிருந்து எச்சரிக்கும். ஆனால் தீமையின் வசீகரத்தை உதறித் தள்ளுவது அத்தனை எளிதான சமாச்சாரமில்லை. மனச்சாட்சியின் குரலை ஒதுக்கி விட்டு மூர்க்கமாக முன்னேறுவது ஒரு வழி. இன்னொரு வழி, அதற்கு நியாயம் கற்பிப்பது. “வறுமை சார்.. திருடினேன்.. வேலைல உடம்பு வலி. அதான் குடிச்சேன்” என்பது மாதிரியான காரணங்களை மனது கற்பித்துக் கொள்ளும் போது மனச்சாட்சியின் குரல் தற்காலிகமாக மங்க ஆரம்பிக்கும்.
எண்பதுகளில் இருந்த வேலையில்லாத திண்டாட்டத்தின் பிரச்சினையை உக்கிரமாக உரையாடிய படங்களுள் ஒன்று ‘வறுமையின் நிறம் சிவப்பு’.
இதில் மூன்று இளைஞர்கள் இருப்பார்கள். ரங்கன் (கமல்) நேர்மைவாதி. இன்னொருவனான தம்பு (எஸ்.வி.சேகர்) அப்பாவி. மூன்றாமவன் சந்தர்ப்பவாதி. அவன்தான் நம்முடைய ‘திலீப்’.
தம்பு வேலை தேடி இந்தியாவின் தலைநகரத்திற்கு வந்து சேர்வதில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. நண்பர்கள் தங்கியிருக்கும் வளைக்குள் அவனும் ஒண்டிக் கொள்கிறான். நல்ல படிப்பு படித்தும் வேலை கிடைக்காத காரணத்தால் வறுமையும் அவர்களுடன் சம்மணம் போட்டு தங்கியிருக்கிறது. பாரதியார் பாட்டின் துணையுடன் ரௌத்ரம் பழகும் ரங்கன் நேர்மையான வழியில் மட்டுமே சம்பாதிப்பான். அப்பாவியான தம்புவிற்கு தவறான வழியில் செல்லத் தெரியாது. ஆனால் திலீப் மட்டும் சம்பாதிப்பதற்கான உதிரி வழிகளை அறிந்திருப்பவன்.
ரோட்டில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் ‘பாதி’ சிகரெட்டை, கர்ச்சீப்பை தவற விடுவது போல் போட்டு நைசாக எடுக்கிறான் திலீப். அதற்கு ‘சுட்ட பழம்’ என்று சங்கேத பெயர் வைத்திருக்கிறான். புதிய சிகரெட்டிற்கு ‘சுடாத பழம்’ என்பது அடையாளப் பெயர்.
அன்றாட உணவிற்கே வழியில்லாமல் பட்டினி கிடக்கும் அந்த தரித்திர வீட்டிற்கு உள்ளே ஒரு புத்தம் புதிய நூறு ரூபாய்த் தாள் நுழைகிறது. ‘மணி.. மணி.. ‘ என்று ஆங்கிலப் பாட்டை உற்சாக பாடியபடியே ஸ்டைலாக வந்து அமர்கிறான் திலீப். “ஏதுடா. நூறு ரூபா..?” என்று ரங்கனும் தம்புவும் ஆச்சரியத்துடன் கேட்க, வெவ்வேறு முகபாவங்கள் தெறிக்க திலீப் பேசும் வசனம் சுவாரசியம். “நடக்கற பிலிம் ஃபெஸ்டிவல்ல ஒரு படத்துல நிறைய செக்ஸ் காட்சிகள். சென்சார் பலிக்கு ஆளான நம்ம ரசிகர்கள் என்னமா அலையறாங்க தெரியுமா. அஞ்சு ரூபா டிக்கெட்டை ஒரு மடையன் கிட்ட நூத்துப் பத்து ரூபாய்க்கு வித்தேன்.. வாழ்க பாரதம். வாழ்க சென்சார்” என்று உணர்ச்சிகரமாகச் சொல்கிறான் திலீப்.
“இதெல்லாம் உன் சொந்த ஐடியாவா..?” என்று ரங்கன் கேட்க “அவ்வளவு புத்தி எனக்கிருந்தா.. நான் ஏன் இங்க இருக்கேன். திலீப்ன்னு ஒரு பிரெண்டு சொன்னான். அவன் எவ்வளவு ஐடியா வெச்சிருக்கான் தெரியுமா?” என்று சொல்ல மற்ற இருவரும் சந்தேகமாகப் பார்த்தாலும் அப்போதைக்கு அவனைச் சோதிக்க நேரமில்லை. அடுத்த வேளை சோற்றுக்கு அவர்கள் உற்சாகமாக திட்டம் போடும் போது வீட்டு உரிமையாளர் மூலமாக அந்த நூறு ரூபாய் நோட்டு பறி போகிறது.
சீட்டு ஆடிக் கொண்டிருக்கும் திலீப் திடீரென எழுந்து “கோயிலுக்குப் போறேன்” என்று கிளம்ப “என்னடா இது திடீர் பக்தி?” என்று தம்பு ஆச்சரியப்பட்டு பின்னாலேயே சென்றால் அந்த வேடிக்கையான காட்சி தெரிகிறது. வேண்டுதலுக்காக தேங்காய் உடைக்க வரும் ஒரு பெரியவரிடம் வம்படியாக வாங்கி தேங்காயை சூறை விட்டு விட்டு அதை எடுப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறான் திலீப். தம்புவும் போட்டிக்கு வர இருவரும் சண்டையிட்டுக் கொண்டு தேங்காய்த் துண்டுகளைப் பொறுக்குவதைக் காட்டுவதின் மூலம் அந்தக் காலக்கட்டத்தின் வறுமையை அவல நகைச்சுவையோடு சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.
இவர்களின் வறுமையை காட்சிப்படுத்திய இன்னொரு சுவாரசியமான சீனும் படத்தில் உண்டு. ரங்கனின் தோழியான தேவி (ஸ்ரீதேவி). நாடகத்தில் நடிக்க சான்ஸ் வாங்கித் தருவதின் மூலம் அவர்களுக்கு உதவ முடியும் என்கிற நோக்கத்துடன் இவர்களின் வீட்டுக்கு வருகிறாள். “நாடகத்துல ஒத்திகையெல்லாம் முடிய ரொம்ப நேரம் ஆகும். நீங்க சாப்பிட்டுட்டு வந்துடுங்க” என்று அவள் சொல்ல, “வீட்டில் சாப்பாடு எதுவும் இல்லை” என்பதைச் சொல்ல முடியாமல், மூடிய அறைக்குள் காலி பாத்திரங்களை உருட்டி பெரிய விருந்துச் சாப்பாடே சாப்பிடுவது போல் அவர்கள் ஆடும் நாடகக் காட்சியை எவராலும் மறக்க முடியாது.
இன்னொரு காட்சி. மூவரும் சிகரெட்டை கை மாற்றி வலித்து பசியைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். திலீப் மட்டும் யாரும் கவனிக்கவில்லை என்கிற போது இன்னொரு முறை சிகரெட்டை வலித்து விட, ரங்கனுக்கு கோபம் வந்து சின்னப் பிள்ளைகள் போல் கட்டி உருண்டு சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
பூங்காவில் பசியுடன் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறான் திலீப். ஒரு கார் அவனைக் கடந்து போய் விட்டு ரிவர்ஸில் வருகிறது. காரில் உள்ளே இருக்கும் பெண்ணுக்கு வேறு விதமான பசி. ஸ்டைலான தோற்றத்துடன் அமர்ந்திருக்கும் திலீப்பை அவள் பயன்படுத்திக் கொள்கிறாள். வாய் நிறைய உணவை அள்ளி விழுங்கும் திலீப் “நாளைக்கும் லிஃப்ட் கிடைக்குமா?” என்று ஆவலுடன் கேட்க “ஸாரி. மெனுவா இருந்தாலும் மென்னா இருந்தாலும் தினமும் மாறிட்டே இருக்கணும் எனக்கு” என்கிறாள்.
ரங்கன் இண்டர்வியூ செல்வதற்கு அணிந்து கொள்ள ஒரு கோட்டு தேவை. அதற்காக தம்புவும் திலீப்பும் இணைந்து ஆடும் ஒரு வேடிக்கையான நாடகமும் சுவாரசியமான காட்சிதான். ஒரு திடகாத்திரனை வழிமறித்து “உங்களை ஒவியமாக வரைந்து தருகிறோம்” என்று அவருடைய கோட்டைக் கழட்டி ரங்கனுக்கு மாட்டியனுப்புவதும் அதன் மீது ஓடும் காரின் சேறு வாரியிறைப்பதும் இன்னொரு அவல நகைச்சுவைக்காட்சி.
பசியுடன் தம்பு படுத்துக் கிடக்க, சிகரெட்டை ஊதியபடி உல்லாசமாக வருகிறான் திலீப். புதிய டீஷர்ட், உட்லண்ட்ஸில் டிபன் என்று அவன் சொல்லச் சொல்ல தம்புவிற்கு வயிறு எரிகிறது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு சம்பாதித்த பணம் அது. ‘ஐடியா கொடுத்தது திலீப்பாம்’.. “நான் இங்கு பன்னுக்கு கூட வழியில்லாம உக்காந்திருக்கேன். உட்லண்ட்ஸ்ல தின்னியா?” என்று தம்பு கோபமாக பாய, இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிடுகிறார்கள்.
தம்பு ஒரு நாள் காணாமல் போகிறான். ‘பசி தாங்க மாட்டானே’ என்று அவனைப் பற்றிக் கவலைப்படும் ரங்கன், திலீப்பிடம் விசாரிக்க “யாரு அந்த திலீப்புன்னு கேட்டுட்டே இருந்தான். ஜெய்ப்பூர்ல இருக்கான்னு சொல்லி ஒரு டூப்ளிகேட் அட்ரஸ் கொடுத்துட்டேன். ஒருவேளை அங்க போயிருப்பானோ?!” என்று திலீப் சிரித்துக் கொண்டே சொல்ல “அடப்பாவி!” என்று கோபத்துடன் அவனை முகத்தில் அறைகிறான் ரங்கன்.
ஒரு நாள் இரவில் பணக்கார குடும்பத்தின் குழந்தையைக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறான் திலீப். “ரங்கா.. நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்தது.. பத்தாயிரம் ரூபா தரலேன்னா குழந்தை க்ளோஸ்ன்னு சொல்லி பணம் கறக்கலாம்” என்று திலீப் சொல்ல அவனை கன்னத்தில் அறைந்து முகத்தின் மீது மிதித்து “யாரு.. உனக்கு இந்த ஐடியாலாம் தர்றது.. சொல்லிடு.. யாரு அந்த திலீப்?” என்று ரங்கன் கோபாவேசமாக கேட்க “அடிக்காதடா.. சொல்லிடறேன்.. நான்தான் அந்த திலீப்.. இந்த மாதிரி குறுக்குவழி பொழப்புக்கெல்லாம் கற்பனையா நானே ஒரு பெயரை உண்டாக்கிட்டேன்” என்று சொல்ல அவனை உதைத்து “இனிமே இந்தப் பக்கம் வராதே..” என்று விரட்டியடிக்கிறான் ரங்கன்.
இறுதிக் காட்சி. திலீப் இப்போது சூட்டும் கோட்டும் போட்டுக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் ஆகியிருக்கிறான். காரில் அவனுடன் பயணிப்பது ஒரு பணக்கார விதவை. சாலையில் பரதேசி கோலத்தில் இருக்கும் தம்புவைப் பார்த்து வாகனத்தை நிறுத்துகிறான் திலீப்.
“நம்ம மூணு பேர்ல நான்தான் உருப்பட்டிருக்கேன் பார்த்தியா.. அவளுக்கு மட்டுமில்ல.. அவளோட பணத்துக்கும் நான்தான் ஹஸ்பண்ட். நீ ஏன் இப்படி இருக்கே?” என்று விசாரிக்க “திலீப் என் கூடவே இருக்கற வரைக்கும் எனக்குப் பிரச்சினையில்ல” என்று சொல்லும் தம்புவின் உடல் முழுக்க ‘திலீப்’ என்கிற பெயர் எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு கற்பனைப் பாத்திரத்தை நம்பி, அவன் பேச்சைக் கேட்டால் தானும் சம்பாதிக்கலாம் என்று நம்பி ஏமாந்து புத்தி பேதலித்து சாலையில் விழுந்து கிடக்கிறான் தம்பு. அவனிடம் பத்து ரூபாய் நோட்டை தந்து விட்டு திலீப் கிளம்ப “பைத்தியக்காரனுக்கு பத்து ரூபாய்க்கும் ஒரு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாது” என்று திலீப்பின் ‘மனைவி’ சொன்னவுடன் “அதானே?” என்று அதைப் பிடுங்கி விட்டு ஒரு ரூபாய் நோட்டை செருகி விட்டுச் செல்கிறான் திலீப். “விதவைகள் வாழ்க!” என்று தம்பு நையாண்டியாகச் சொல்வதுடன் இந்தக் காட்சி நிறைகிறது.
தான் செய்யும் தவறுக்கெல்லாம் ‘திலீப்’ என்கிற கற்பனைப் பாத்திரத்தின் மீது பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கும் ஒரு இளைஞனின் சுவாரசியமான பயணத்தை, அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அட்டகாசமாக நடித்துக் காட்டியுள்ள திலீப். தடுமாற்றத்தால் தவறுகளின் பாதைகளில் சறுக்கி விழுந்து விடும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் பிரதிநிதியான ‘திலீப்’பை தமிழ் சினிமாவின் பார்வையாளர்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.