Published : 17,Aug 2021 07:02 PM

எப்படியிருந்த டீம் இப்படி ஆகிடுச்சே! டெஸ்ட் கிரிக்கெட்டும் இங்கிலாந்து அணியும் - ஒரு அலசல்

What-happen-for-the-England-team-s-continuous-downfall-in-Test-Cricket-an-Explainer

கிரிக்கெட் உலகின் தாய்நாடு என போற்றப்படுகிறது இங்கிலாந்து. நடப்பு 50 ஓவர் உலக கோப்பை சாம்பியனும் இங்கிலாந்து அணி தான். அதோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ள அணி. 

இருந்தாலும் ‘என்ன தான் ஆச்சு இங்கிலாந்துக்கு?’ என கேள்வி கேட்கும் அளவுக்கு உள்ளது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஆட்டம். 

image

ஹெர்பர்ட் சட்கிளிஃப் (Herbert Sutcliffe), ஜாக் ஹாப்ஸ், லென் ஹட்டன், மைக்கேல் வாஹன், கெவின் பீட்டர்சன், இயன் போதம், ஆலன் நாட், ஹரோல்ட் லார்வுட், ஃப்ரேங்க் டைசன், பார்ன்ஸ், ஜிம் லேக்கர், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், அலஸ்டர் குக், ஆண்ட்ரூ பிளின்டாஃப், ஆண்டர்ஸன், பிராட், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என மகத்தான மாவீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொடுத்துள்ளது இங்கிலாந்து அணி. இதில் ஆண்டர்ஸன், பிராட், ஜோ ரூட் தற்போது இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். 

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு!

கடந்த 1877 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து விளையாடி வருகிறது. 144 ஆண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் அணி. இதுவரை 1038 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்தியாவுடன் மோதிய லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியும் இதில் அடக்கம். மொத்தம் 377 போட்டிகளில் வெற்றி, 310 போட்டிகளில் தோல்வி, 351 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளன. விகிதாச்சார அடிப்படையில் வெற்றியை அதிகம் பதிவு செய்துள்ள அணி. ஆனால் இன்று அந்த நிலையே வேறு விதமாக உள்ளது.

உள்நாடு, வெளிநாடு எங்கு சென்று விளையாடினாலும் தோல்வியை தழுவி வருகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் வெளிநாடுகளை காட்டிலும் சொந்த மண்ணில் அந்த அணிகள் கிரிக்கெட் விளையாடும் போது அதிகம் ஆதிக்கம் செலுத்தும். அதற்கு காரணம் அங்கு நிலவும் சூழல். ஆனால் இப்போது இங்கிலாந்து அணி அதை செய்ய தவறி வருகிறது. குறிப்பாக 2021-இல் இதுவரை இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் தோல்வி கண்டுள்ளது. மீதமிருக்கும் இரண்டு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. அதில் ஒன்று மழையினால் கைவிடப்பட்டது. 

image

என்ன சிக்கல்?

கிரிக்கெட் 11 வீரர்களை கொண்டு குழுவாக விளையாடப்படும் விளையாட்டு. அதில் பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள், பவுலர்கள் என வீரர்களின் திறனுக்கு ஏற்ப ரோல்கள் மாறுபடும். அந்த ரோலை கச்சிதமாக செய்து டீம் ஸ்பிரிட்டை வெளிப்படுத்தும் அணி வெற்றி பெறும். இங்கிலாந்து அந்த இடத்தில் தான் பின் தங்கியுள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டு டிப்பார்ட்மெண்டிலும் தனி இரு வீரர்களை மட்டுமே நம்பி இங்கிலாந்து களம் காண்கிறது. 

பேட்டிங்கில் கேப்டன் ரூட், பவுலிங்கில் ஆண்டர்சன். இவர்கள் இருவரும் தான் இங்கிலாந்தை இப்போது தாங்கிப் பிடித்துள்ளார்கள். அணியில் இடம் பிடித்து விளையாடும் மீதமுள்ள ஒன்பது வீரர்கள் எப்போதாவது பர்ஃபார்ம் செய்வார்கள். 

2021-இல் மட்டுமே 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அந்த மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றியை இலங்கை அணிக்கு எதிராக பதிவு செய்திருந்தது. 

image

மாற்றம் வேண்டும்!

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் தொடர்ச்சியாக ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை இழப்பது பலமான பின்னடைவை சந்திக்க முக்கியக் காரணம். அதே போல மிடில் ஆர்டரிலும் பேர்ஸ்டோ, பட்லர் என இங்கிலாந்து அணியின் ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் தொடக்க வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைத்து வருகிறது. அவர்களது ரோலை மாற்றி பேர்ஸ்டோவை, பேர்ன்ஸ் உடன் தொடக்க வீரராகவும், பட்லரை மூன்றாவது அல்லது ரூட்டுக்கு பிறகும் களம் இறக்கலாம். பேர்ஸ்டோ மற்றும் பட்லர் என இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5, 6 மற்றும் 7-வது பேட்ஸ்மேனாக 100க்கும் மேற்பட்ட இன்னிங்ஸை விளையாடி உள்ளார். வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் அணியில் சேர்க்கப்பட வேண்டும். வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் இல்லாத குறையை போக்குவார். இதை செய்தால் இங்கிலாந்து அணி ஓரளவுக்கு பேலன்ஸ் ஆகும் என கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் சொல்லி வருகின்றனர்.  

image

ஆட்டத்தின் அணுகுமுறையில் தேவை மாற்றம்!

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அண்மைய நாட்களாக Diffensive மோடில் அணுகி வருகிறது. இது லார்ட்ஸ் மைதானத்தில் இந்த ஆண்டு இரண்டு போட்டிகளில் வெளிப்பட்டது. கடந்த ஜூன் மாதம் லார்ட்ஸில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் 75 ஓவர்களில் 273 ரன்களை இங்கிலாந்து எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து விளையாடியது. இருப்பினும் அந்த போட்டி சமனில் முடிந்தது. அடுத்த சில மாதங்களில் இதே லார்ட்ஸ் மைதானத்தில் டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் மூலம் தனது பேட்ஸ்மேன்கள் மீது எந்த அழுத்தமும் இல்லாமல் சேஸ் செய்வது சுலபம் என்ற நோக்கில் இந்த முடிவை ரூட் எடுத்திருக்கலாம். ஆனால் இறுதி நாளில் இங்கிலாந்து அதை செய்ய தவறியதோடு, போட்டியிலும் தோல்வியை தழுவியது. 

அடுத்து என்ன? என்ற ஏராளமான கேள்விகளுடன் இங்கிலாந்து ஹெட்டிங்லி மைதானத்தில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. வரும் 25-ஆம் தேதி இந்த போட்டி ஆரம்பமாக உள்ளது. இந்தியாவுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே அணியில் விளையாட உள்ள வீரர்களின் விவரங்களை இங்கிலாந்து வெளியிட்டிருந்தது. காயத்தினால் விலகியிருந்த ஆர்ச்சர், வோக்ஸ் கம்பேக் கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அவர்கள் கொடுக்கும் கம்பேக் இங்கிலாந்து அணிக்கு புதிய பாய்ச்சலை கொடுக்கலாம். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்