Published : 22,Jul 2021 02:04 PM

பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் இருக்கும் தென்பெண்ணை தடுப்பணை: விவசாயிகள் அதிருப்தி

Farmers-shares-their-worry-on-Damaged-Thenpennai-Dam

பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் இருக்கும் தென்பெண்ணை தடுப்பணையை சீரமைக்க கோரிக்க, அப்பகுதி விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர். 

கடந்த பிப்ரவரி - மார்ச் மாதத்தையொட்டி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையொன்று, திறக்கப்பட்டு ஒன்றரை மாதமேயான நிலையில் உடைந்திருந்தது. இதுதொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை பொறியாளர் உட்பட நான்கு பொறியாளர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது அப்போது ஆட்சியிலிருந்த தமிழக அரசு. மேலும், ‘ரூ.7 கோடி செலவில் சீரமைக்கப்படும்’ என அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்திருந்தார். ஆனால் அந்த சீரமைப்புப் பணி இப்போதுவரை தொடங்கப்படமால் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

இப்போதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதத்தை தொடர்ந்து, அணையை மீண்டும் சீரமைக்க கோரி அப்பகுதி விவசாயிகள் அடுத்த மாதம் சாலை மறியல் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

image

கடந்த 2019ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் திரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த தடுப்பணை கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு, தடுப்பணை கடந்த டிசம்பர் மாதம் அது திறக்கப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் அப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தென்பெண்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கின்போது, சுமார் 14 அடி உயரம் கொண்ட அந்த புது தடுப்பணை முழுவதும் நிரம்பும் அளவிற்கு நீர் வழிந்தோடியது. இதன் காரணமாக, ஒன்றரை மாதத்திற்கு உள்ளாகவே தடுப்பணை உடைந்து நீர் வெளியேறியத் தொடங்கியது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் அப்பகுதி விவசாயிகள்.

இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கும் நீர்தான், எனதிரிமங்கலத்தை அடுத்த நீர் வரப்புகளான சுமார் 14 ஏரிகளுக்கும் செல்கிறது. மேலும் விழுப்புரம் தளவானூர் அடுத்துள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் இதுதான் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.

image

அப்படிப்பட்ட முக்கிய நீர் ஆதாரமான தடுப்பணையில் திடீரென உடைந்ததால் விவசாயிகள் பதறினர். அணை உடைந்தது குறித்துத் தகவலறிந்து அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஜவகர் மற்றும் உதவி செயற் பொறியாளர் சுமதி ஆகியோர் தலைமையிலான பொதுப் பணித்துறையினர், அங்கு ஆய்வு செய்தனர். அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாகச் சேமிக்கப்பட்ட தண்ணீரை வெளியேற்றினர். இதனால் சேமிக்கப்பட்ட தண்ணீர் யாவும் வெளியேறியது. இதனால் தடுப்பணையை ஒட்டி இருக்கக் கூடிய தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர்திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் அந்த நேரத்தில் பேசும்போது, “இந்த விபத்து இயற்கையாக ஏற்பட்டதா அல்லது கட்டுமான பணியின்போது நிகழ்ந்த அலட்சியத்தால் ஏற்பட்டதா என்பது குறித்து உயர்மட்ட குழுவிலிருந்து பொதுப்பணி செயலாளர் உட்பட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இப்போதைக்கு மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் ஒரு தடுப்புச் சுவர் கட்டுவதற்கான கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பணை என்பது நன்றாக இருக்கிறது, தற்போது தடுப்புச் சுவரில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது உடனடியாக சீர் செய்யப்படும்" என தெரிவித்தார். ஆனால் இன்று வரை பணிகள் எதுவும் நடைபெறவில்லை அமைச்சராகி என்பது வெறும் கானல் நீராகி போய்வட்டது என்கின்றனர் விவசாயிகள்.

image

இதனால் இந்த அணையை உடனடியாக சரி செய்து தராவிட்டால் அடுத்த மாதம் அனைத்து விவசாயிகளும் ஒன்றுக்கூடி, திருச்சி சன்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக விவசாயிகள் தற்போது தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் மழை பெய்யும்நிலை இருப்பதனால், உடனடியாக அணையைக் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். இல்லையென்றால் இந்த ஆண்டும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் வீணாகச் சென்று கடலில் கரைந்து விடும் என்கிறார்கள் அவர்கள். 

தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை மேற்கொண்டு அவரிடமிருந்து தண்டனை தொகையாக பணம் வசூலித்து இந்த அணியை கட்டித்தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஜோதி நரசிம்மன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்