[X] Close

புதுச்சேரி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் பாஜக எம்.எல்.ஏ ஜான்குமார்! யார் இவர்?

இந்தியா,சிறப்புக் களம்

BJP-Puducherry-Member-of-Legislative-Assembly-A-Johnkumar-is-making-echoes-in-Pondicherry-politics-and-an-Explainer-about-him

யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார் பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார். அண்மையில் அவரது ஆதரவாளர்கள் சிலர் பெருவாரியான மக்களால் தேர்வு செய்யப்பட்ட தங்கள் மனம் கவர்ந்த பிரதிநிதியான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டு பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து நெல்லித்தோப்பு மாதா ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனைகள் கூட நடைபெற்றது.


Advertisement

தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்கள் கடந்த நிலையில் மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மந்திரிகளின் பட்டியலை வெளியிட முடியாமல் திகைத்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்பம் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இறுதியில் நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர்கள் மற்றும் பாஜகவுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் பதவிக்கான பெயர்கள் அடங்கிய பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கியுள்ளார். 

இந்த நிலையில்தான் ஜான்குமார் ஆதரவாளர்களின் செயல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 


Advertisement

image

யார் இந்த ஜான்குமார்?

சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் ஜான்குமார் எம்.எல்.ஏ. புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள நெல்லித்தோப்பு பகுதி இவரது பூர்வீகம். அவருக்கு வயது 56. ரியல் எஸ்டேட் அவரது பிரதான தொழில். ஆரம்பத்தில் லாட்டரி சீட்டு தொழிலையும் பெரிய அளவில் செய்த அனுபவமும் உண்டு. அது தவிர உள்ளூர் அளவில் தனியார் கேபிள் நெட்வொர்க் தொழிலும் செய்து வருகிறார். 


Advertisement

அரசியல் அஸ்திவாரம் - ஜான்குமாரின் அப்பா அந்தோணிசாமி அதிமுக கட்சிக்காக பணியாற்றியவர் என சொல்லப்படுகிறது. 2000ஆவது ஆண்டு வாக்கில் அரசியல் ஆசை ஜான்குமாருக்கு துளிர்விட சின்ன சின்ன மக்கள் நல சேவைகளை செய்ய தொடங்கியுள்ளார். தொடர்ந்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கி உள்ளார். 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் புதுச்சேரி நகராட்சியின் துணை மேயராக ஜான்குமார் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2011 தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விரும்பி திமுக-வில் சீட் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு சீட்டு ஒதுக்கப்பட்டது உழவர்கரை. அதனால் அந்த தேர்தலில் அந்த தொகுதி மக்களிடம் அதிகம் பிரபலம் இல்லாத ஜான்குமார் தோல்வியை தழுவினார். 

அதே நேரத்தில் சமூக விழிப்புணர்வு குறும் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். குடிநீர் சிக்கனம், தலைக்கவசம் அணிவது தொடங்கி பல தீம்களில் அவர் குறும் படங்களை வெளியிட்டுள்ளார். அதன் மூலமாகவும் அவர் புதுச்சேரி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

image

திமுக டூ காங்கிரஸ் - தொடர்ந்து 2014 வாக்கில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு களப்பணியாற்ற தொடங்கினார். 2016 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அந்த முறை அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வரான நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதோடு நாராயணசாமி வெற்றிக்காக தனது தொகுதியில் தீவிரமாக களப்பணி செய்தார். தொடர்ந்து புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்ற செயலாளராக ஜான்குமார் நியமிக்கப்பட்டார். பின்னர் 2019 இடைத்தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இப்போது பாஜக - பிப்ரவரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு  முன்பாக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார். 

நெல்லித்தோப்பு தொகுதியில் தனது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் போட்டியிட, ஜான்குமார் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டார். இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். 

எப்படியும் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவரது ஆதரவாளர்கள் இருந்துள்ளனர். ஆனால் அது கைகூடாது என அரசல் புரசலாக தெரியவர அதகளம் செய்துள்ளனர் ஆதரவாளர்கள். அமைச்சர் பதவிக்காக டெல்லியில் ஜான்குமார் முகாம் கூட அமைத்திருந்தார். அவரிடம் அது குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் தெரிகிறது. 

image

அடுத்து என்ன? - “புதுச்சேரி வளர்ச்சிக்காகதான் நான் பாஜகவில் இணைந்தேன். கடந்த பத்து ஆண்டுகளில் புதுச்சேரியின் வளர்ச்சி பின்தங்கியுள்ளது. அதை மாற்றி அமைக்கும் வல்லமை மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு தான் உள்ளது” என சொல்லி இப்போதைக்கு அமைச்சர் சர்ச்சைக்கு ஜான்குமார்  முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close