Published : 31,May 2021 10:47 AM
"எதிரணியை அதிகம் யோசிக்க வைக்கும் இடத்தில் இருக்கிறது இந்திய அணி"-முகமது ஷமி

முன்பு இருந்த இந்திய கிரிக்கெட் அணி வேறு. இப்போதுள்ள அணி எதிரணியை அதிகம் யோசிக்க வைக்கிறது என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி ஜூன் 2 ஆம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. இப்போது மும்பையில் இருக்கும் ஹோட்டலில் இந்திய அணி வீரர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்.
இது குறித்து இந்தியா டிவிக்கு பேட்டியளித்த முகமது ஷமி " இந்திய அணியில் 4-5 வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களால் 140 முதல் 145 கி.மீ. வேகத்தில் பந்துவீச முடியும். இது ஒரு மிகச் சிறப்பான விஷயம். அதனால்தான் எதிரணியினரை நாங்கள் யோசிக்க வைக்கிறோம். எதுமாதிரியான பிட்ச் எங்களுக்கு வழங்க வேண்டும் என்பது கேள்வியாகவே இருக்கும்" என்றார்.
மேலும் " முன்பெல்லாம் எதிரணியினருக்கும் எங்களை வீழ்த்துவதற்கான திட்டத்தை தீட்டுவதற்கு எளிதாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நியூசிலாந்தை விட மிகச் சிறந்த பவுலிங் அணியை நாங்கள் கொண்டுள்ளதாகவே நினைக்கிறோம். எங்களில் ஒருவர் சரியாக பந்துவீசவில்லை என்றாலும் கூட அந்த பந்துவீச்சாளருக்கு ஆதரவு தெரிவித்து உத்வேகம் படுத்துவோம்" என்றார் முகமது ஷமி.