Published : 13,May 2021 08:56 PM

"என்னை திட்டினாலும் பார்த்தவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்!" - ஜூலி சிறப்புப் பேட்டி

Bigg-Boss-Julie-special-interview

’பிக்பாஸ்’ நான்கு சீசன்களிலும் பங்குபெற்ற போட்டியாளர்ளுடன்  ‘பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற புதிய நடன நிகழ்ச்சியை துவங்கியுள்ளது விஜய் டிவி. அதில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கவனம் ஈர்த்தவரும், பிக்பாஸில் கலந்துகொண்டவருமான ஜூலி கம்பேக் கொடுத்திருக்கிறார்.  இவ்வளவு நாட்கள் ஜூலி எங்கே போனார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? - சில கேள்விகளை அவரிடமே முன்வைத்தோம்.

 திடீர்னு அமைதியாகிட்டீங்களே?

”சூரியன் மறைவது உதிப்பதற்குத்தான். சில விஷயங்களுக்கு இடைவெளி தேவைப்பட்டது. அதேநேரத்தில், ஷூட்டிங் இல்லாத சமயங்களில் வருமானமில்லாத பல புதிய மேக்கப் ஆர்டிஸ்ட்டுகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் என்று ஃப்ரீயாக ஃபோட்டோ ஷூட் செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன்.”

’பிக்பாஸ் ஜோடிகள்’ நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எப்படி இருக்கிறது?

” ’பிக்பாஸ் சீசன் 1’ போட்டியாளர்களில் நான் மட்டும்தான் கலந்து கொண்டுள்ளேன். மற்ற மூன்று சீசன் போட்டியாளர்களுடனும் பழகுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதனை ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்க்கிறேன். இந்த நிகழ்ச்சிக்காக நடனம் கற்றுக்கொள்ள மாஸ்டரை நியமித்திருக்கிறார்கள். இதற்குமுன், நான் முறையாக நடனம் கற்றுக் கொள்ளவில்லை. எனக்கு என்ன வருமோ அதனைச் செய்கிறேன். ஆனால், கொரோனா சூழலில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.”

image

படங்களில் நடித்தீர்களே?

”நடிப்பது ஜாலியான அனுபவம். கொரோனா சூழலால் நான் நடித்த படங்கள் தடைப்பட்டு நிற்கின்றன. இது எல்லோருக்கும் கடினமான காலக்கட்டம். இன்னும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை வெளியில் சொல்லக்கூடாது என்பதால் அமைதி காக்கிறேன்.”

தமிழக அளவில் நீங்கள் கவனிக்கப்பட்டவர். பிக்பாஸில்  கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் இத்தனை விமர்சனங்கள் வந்திருக்காது என்று நினைத்ததுண்டா?

 “நடந்து முடிந்த விஷயங்களை யாராலும் மாற்ற முடியாது. நடந்ததைப் பேசி வருத்தப்படவும் கூடாது. இப்படி ஆகிடுச்சேன்னு நினைச்சா வருத்தப்பட்டுக்கிட்டேத்தான் இருக்கணும். அதனால், நடந்ததை விட்டுட்டு அடுத்ததைதான் பார்க்கவேண்டும். அலெக்சாண்டர் பலமுறை தோற்றே ஜெயித்தார். இத்தனைமுறை தோற்று ஜெயித்ததால், அவரை இன்று எல்லோரும் ரோல்மாடலாக எடுத்துக் கொள்கிறார்கள். அதனால், தோற்று ஜெயித்தால்தான் வரலாற்றில் நிற்கமுடியும். வரலாற்றில் ஜெயித்தவர்களும் தோற்றவர்களுமே இருப்பார்கள். வேடிக்கைப் பார்த்துவிட்டு கருத்து சொல்பவர்கள் அல்ல. அதனால், அவர்கள் குறித்து நான் கவலைப்படவில்லை.

பெரிய பெரிய நடிகர்களுக்கே ஹேட்டர்ஸ் இருக்கிறார்கள். அவங்க முன்னாடி நானெல்லாம் ஒண்ணுமே இல்லை? இந்த விமர்சனங்கள் ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தால் காணாமல் போய்விடும். நான் நடித்துள்ளப் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறன.

என்னதான் தமிழக மக்கள் திட்டினாலும் என்னை பார்த்தவுடனே ’அக்கா ஒரு செல்ஃபி’ என்று பாசமுடன் வந்து எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ என்னை பார்த்தாலே செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள். இங்கு யாருக்கும் என் முகத்திற்கு நேராக பேசக்கூடிய தைரியம் கிடையாது. இதுதான் எதார்த்தமான உண்மை. மக்களுக்கு என்னைப் பிடிக்கும். அவர்களில் ஒருத்தியாக இருந்து பிக்பாஸ் சென்றதால்தான் கோபம். என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்த்துட்டாங்க. நம்ம பிள்ளை இப்படி போய்டுச்சே. இப்படி பண்ணிட்டாங்களேன்னுதான் கோபம்.”

image

நீங்களும் ஒரு செவிலியர். கொரோனா சூழலை எப்படி பார்க்கிறீர்கள்?

“செவிலியர்கள் என்றில்லை. கொரோனா சூழலில் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் பெரிய கஷ்டம். ஆனாலும், மனிதத்தோடு சேவை செய்வது போற்றுதலுக்குரியது. நானும் கொரோனா சூழலில், இதய அவரசப்பிரிவு அறுவை சிகிச்சைகளின் போது மட்டும் செவிலியராக பணிபுரிந்துகொண்டுதான் வருகிறேன். அதற்கென்று ஸ்பெஷல் கோர்ஸ் படித்துள்ளேன். அதனால், எனக்கு கொரோனா பேராபத்தின் கஷ்டங்களும் நஷ்டங்களும் தெரியும். எல்லோரும் உயிரை பணயம் வைத்துதான் வேலை செய்கிறார்கள்.  இன்று இருப்பவர் நாளை இல்லை. அதனால், அனைவர் மீதும் அன்பாக இருப்போம்.”

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா?

“அதுபோல் எதுவுமில்லை. இப்போதைக்கு அரசியல் எதுவும் வேண்டாம் என்று நினைக்கிறேன். எனக்கு ஆழமாக அரசியல் தெரியாது. அரசியல் தெரிந்திருந்தால் பிக்பாஸில் வேறு மாதிரியாக பண்ணியிருப்பேன். நிஜத்தில் எப்படியோ அப்படியே எதார்த்தமாக இருந்தேன். பிக்பாஸ் முடிந்தபிறகு கமல்சாரின் பிறந்தநாள் அன்று பார்த்தேன். அவ்வளவுதான். அதிலிருந்து பார்க்கவுமில்லை. பேசவுமில்லை.”

இப்போதும் சமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கிறீர்களா?

”எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டுத்தான் வருகிறேன். சமீபத்தில்கூட, 2 கோடி, 3 கோடி ரூபாய்க்கு ப்ளாட் வாங்கிவிட்டு இறந்தவர்களின் உடலுக்கு மரியாதை செய்ய இடம் கொடுக்காத அவல நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளேன். இது, ப்ளாட்டுகளில் வசிப்பவர்களுக்கு மிக முக்கியமான பிரச்னை. பிறப்பு என்று இருக்கும்போது இறப்பும் உள்ளது. இறப்புக்கு செய்யக்கூடிய மரியாதைக்கான இடத்தை குடியிருப்பை கட்டுபவர்கள் கொடுப்பதில்லை.”

image

’பிக்பாஸ் சீசன் 1’ போட்டியாளர்களில் யாருடன் இப்போதும் நட்பில் இருக்கிறீர்கள்?

”சுஜா வருணி, சக்தி அண்ணா, காயத்ரி ரகுராம் அக்கா, காஜல் என அனைவருடனும் பேசிக்கொண்டு சந்தோஷமாத்தான் இருக்கேன். அடிக்கடி மீட் பண்ணிக்கவும் செய்வோம். பிக்பாஸ் இல்லத்தில் உண்மையான அன்போடும் பாசத்தோடும் இருந்த சிலர் இப்போதும் பாசத்தோடு இருக்கிறார்கள்.”

ஓவியா?

”பிக்பாஸ் முடிந்தபிறகு ஓவியாவிடம் பேசவில்லை. ஆனால், இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் பார்த்தேன். அவ்வளவுதான். எங்களுக்குள் எந்த வெறுப்பும் வருத்தமும் கிடையாது.”

தமிழக அரசியல் குறித்து கவனிக்கிறீர்களா? திமுக வெற்றி பெற்றிருக்கிறதே?

”எனக்கு திமுக வெற்றி பெற்றதில் ரொம்ப சந்தோஷம். காரணம் எல்லாம் என்னால் சொல்ல முடியாது. ஆனால், எனக்கு திமுக ரொம்பப் பிடிக்கும். மற்றபடி வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.”

image

உமா ரியாஸ்கான் மகனுடன் காதல் என்று தகவல்கள் வருகிறதே?

”பிக்பாஸ் ஜோடிகளில் அவரும் ஒரு போட்டியாளர். நல்ல நண்பர். அவ்வளவுதான். அவருடன் எடுத்த புகைப்படங்களைப் பகிந்துகொண்டேன். இதனை, தவறாக எழுதுகிறார்கள்”.

சென்னை தமிழச்சி பத்மபிரியாவை கவனிக்கிறீர்களா?

   “பத்மபிரியா இளம் பெண். அவரின் இரண்டு மூன்று வீடியோக்களைப் பார்த்திருக்கேன். தேர்தலில் நின்றதும் தெரியும். புதுசா முயற்சி எடுப்பவர்களை பாராட்டணும்; வரவேற்கணும். பத்மபிரியா சொல்லக்கூடிய கருத்துகள் ரொம்பத் தெளிவா இருக்கு. தைரியமா பேசுறாங்க. அரசியலில் வெற்றிப் பெற்றால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.”

- வினி சர்பனா 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்