[X] Close >

“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி

Indian-cricketer-Washington-Sundar-s-father-Sundar-and-sister-Shailaja-Sundar-special-interview

இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காபா டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கியவர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். முதல் போட்டியிலேயே மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார் வாஷிங்டன்.  கடந்த 2017இல் இந்திய அணி சார்பில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானவர். சென்னையை பூர்வீகமாக கொண்டிருக்கும் வாஷிங்டன் சுந்தரின் தந்தை சுந்தரிடம் பேசினோம்…


Advertisement

image

வாஷிங்டனின் டெஸ்ட் அறிமுக போட்டியை எப்படி பார்க்கிறீர்கள்?


Advertisement

“அவன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவான் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். என்னை பொறுத்த வரை அவன் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சீக்கிரமாக அறிமுகமாகி விட்டான் என நினைக்கிறேன். குறிப்பாக அவன் ஆஸ்திரேலிய தொடரிலேயே டெஸ்ட் போட்டியில் விளையாடுவான் என கணித்திருந்தேன். அதே போல டி20 தொடருக்காக விளையாட சென்றிருந்தவனை அணியுடன் இருக்குமாறு சொன்னார்கள். அதை அவன் என்னிடம் சொன்ன போது “நீ நிச்சயம் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் இந்த தொடரில் விளையாடுவாய்” என சொன்னேன். ‘அப்பா, வாய்ப்பே இல்லை’ என்றான் அவன். அதே போலவே பொங்கல் அன்று எனக்கு போன் செய்து காபா டெஸ்டில் விளையாடுவதை சொன்னான். ‘நல்லா விளையாடு’ என்பதை மட்டும் தான் நான் சொன்னேன்” என்றார்.

அப்பாவின் பேச்சை தட்டாத வாஷிங்டன், காபா டெஸ்டில் விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பேட்ஸ்மேனாகவும் ஜொலித்தார். சரிவிலிருந்த அணியை மீட்க வந்த மீட்பராக அவதரித்தார் வாஷிங்டன். 

கடந்த 15 ஆம் தேதியன்று வாஷிங்டன் டெஸ்ட் கேப்பை பெற்ற போது அவரது குடும்பமே டிவியின் முன்னாள் அமர்ந்து அந்த காட்சியை கண்கொட்டாமல் ரசித்துள்ளனர். அதோடு ஆட்டத்தின் முதல் நாளன்றே ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்திய போது ஆராவாரம் செய்து ரசித்துள்ளனர் அவரது குடும்பத்தினர். 


Advertisement

image

முதல் போட்டியில் அவருடைய ஆட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

“இது தான் அவனது அசல் ஆட்டம். டி20 போட்டிகளில் வந்தவுடன் முதல் பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால்  அவனது  பேட்டிங் திறன் பெரிய அளவில் தெரியாமல் இருந்தது. அதனால் பெரும்பாலானவர்களுக்கு அவனை பந்துவீச்சாளராக தான் தெரியும். ஆனால் இந்த ஆட்டத்தின் மூலம் வாஷிங்டன் ஒரு பேட்ஸ்மேன் என்பதையும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிரூபித்துள்ளான். பேட்டிங்கில் ஓப்பனிங் செய்பவன் அவன். இந்த டெஸ்டில் அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் தரமான ஆஸ்திரேலிய பந்துவீச்சை அவர்களது மண்ணிலேயே பந்தாடியது அவனது பேட்டிங் திறனை அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தால் அவன் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரனாக வருவான்” என்கிறார் சுந்தர். 

“கல்லி கிரிக்கெட் ஆனாலும் சரி டிவிஷனல் லெவல் கிரிக்கெட் ஆனாலும் சரி வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து ஆடுபவன் அவன். அதனால் தான் அவன் ஆல் ரவுண்டராக தன்னை தகவமைத்துக் கொண்டான். பேட்டிங், பவுலிங் என அணியின் தேவைக்கு ஏற்ப விளையாடுவான்” என வாஷிங்டனின் எண்ண ஓட்டத்தை விவரிக்கிறார் அவரது சகோதரி ஷைலஜா சுந்தர். இவர் வாஷிங்டனை விடவும் வயதில் மூத்தவர். தென் மண்டல அளவில் கிரிக்கெட் விளையாடி உள்ளார் ஷைலஜா சுந்தர். 

image

வாஷிங்டன் உடனான பால்ய கால நினைவுகளை பகிருங்களேன்?

“எங்கள் இருவருக்குமே கிரிக்கெட் தான் எல்லாம். அதை உயிர்மூச்சாக சுவாசிப்பவர்கள். இதற்கு காரணம் எங்கள் அப்பா தான். சிறு வயதில் ஸ்கூலுக்கு போகின்ற நேரத்தை தவிர எப்போதுமே கிரிக்கெட் தான் விளையாடுவோம். டிவி பார்த்தாலும் அதில் கிரிக்கெட் தான் இருக்கும். விளையாட்டாக பேசிக் கொண்டால் கூட கிரிக்கெட் தொடர்பாக தான் இருக்கும். இருவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளோம். எதிரும்புதிருமாக வெவ்வேறு அணிக்காகவும் விளையாடி உள்ளோம். நாங்கள் இருவரும் சேர்ந்தால் அங்கு கிரிக்கெட் தான் இருக்கும். வீட்டில் எல்லோருக்கும் அவர் ரொம்ப செல்லம். அவன் மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடியவன்” என்கிறார் ஷைலஜா சுந்தர். 

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் விக்கெட். எப்படி பார்க்கிறீர்கள்?

“ஸ்மித்தும் வாஷிங்டனும் ஒன்றாக இணைந்து கிரிக்கெட் விளையாடியவர்கள். ஸ்மித்தை ரொம்ப பக்கத்தில் இருந்து பார்த்தவன் அவன். அதனால் ஸ்மித்துக்கு எப்படி பந்து வீச வேண்டுமென்பது வாஷிங்டனுக்கு தெரியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டாக ஸ்மித்தை வீழ்த்தியதும் அவனது பிள்ளை சிரிப்பை நான் பார்த்தேன். இந்த விக்கெட் கணக்கு அவனது ஆரம்பம் தான். இது தொடரும். ஒரு பக்குவப்பட்ட வாஷிங்டனை என்னால் பார்க்க முடிகிறது. அவன் அவனது கேமை வளர்த்துக் கொண்டான்” என்கிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளதை பற்றி சொல்லுங்களேன்?

“டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான திறன் தன்னிடம் உள்ளது என்பதன் வெளிப்பாடு தான் இது. இங்கிலாந்து தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தின் ஆடுகளம் எப்படி  ரியாக்ட் செய்யும் என்பதை அணுஅணுவாக அறிந்தவன் வாஷி. அதனால் அவன் ஆடும் லெவனில் இடம்பெற்று விளையாட கூட இதில் வாய்ப்பு உள்ளது” என்கிறார் ஷைலஜா. 

வாஷி டெஸ்ட் கிரிக்கெட் பிளேயராக அவதரித்துள்ளதை அவரது குடும்பமே கொண்டாடி வருகிறது. இப்போதைக்கு அவரது குடும்பமே வீட்டின் வாசலில் வாஷியின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது. 

ஆல் தி பெஸ்ட் வாஷி!

- எல்லுசாமி கார்த்திக்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close