[X] Close >

"கார்ப்பரேட் ஆதரவாக செயல்படுகிறது மத்திய அரசு!"- உண்ணாவிரதப் போராட்டத்தில் ஸ்டாலின் சாடல்

center-favoring-only-for-corporate-companies-say-MK-stalin

"விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.


Advertisement

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமைக்கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி திமுக தோழமைக் கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, கனிமொழி, முத்தரசன், பாரிவேந்தர், தங்கபாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது:


Advertisement

"கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா என்ற நோய்த் தொற்றில் இந்தியா முழுவதும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதைப்பற்றி மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் சிந்தித்துப் பார்க்காமல், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், சுகாதாரப் பணியில், பொருளாதார உதவியில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், தாங்கள் போகிற போக்கில் மக்களுக்கு எதிரான உணர்வுகளை, எண்ணங்களை, சட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு மக்கள் விரோதச் சட்டங்களை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவே இன்று கொந்தளித்துப் போய் இருக்கிறது. தலைநகர் டெல்லி இன்று கொதித்துப் போய் இருக்கிறது. வட மாநிலங்களில் இருக்கும் விவசாயிகளெல்லாம் கும்பல் கும்பலாக, குடும்பம் குடும்பமாகத் தலைநகர் டெல்லியை நோக்கி வருகை தந்து அங்கேயே தங்கி கடுமையான குளிரைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல், அங்கேயே உறங்கி, அங்கேயே சமைத்து உணர்வுபூர்வமான ஒரு போராட்டத்தை விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயத்தைப் பாழடிக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்க்கையைச் சிதைக்கும் வகையிலும் அமைந்திருப்பதால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு விவசாயிகளை அழைத்துப் பேசியிருக்க வேண்டும்; விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அல்லது இதுகுறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதத்தை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், இது எதையும் இந்த மத்திய அரசு செய்திடவில்லை. எதற்காக இவ்வளவு அவசரம்? யாரைப் பாதுகாக்க இந்தச் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்? இதை மக்கள் மன்றத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும்.


Advertisement

மக்களை பற்றி கவலைப்படாமல், கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு பேச்சுவார்த்தை என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வாழ்க்கைப் பிரச்சினையாக இதைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் அவர்கள் டெல்லியை நோக்கி வரும் காட்சிகளை நாம் ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு அதை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனைக் கண்டிக்கும் வகையில்தான் நாம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல போராடக் கூடியவர்களை மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால், தேசவிரோதிகள், அந்நியக் கைக்கூலிகள் என்று சொல்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். தீவிரவாதிகள் என்று விமர்சிக்கிறார்கள்.

வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதால் எவ்விதப் பயனும் இல்லை. ஆகவே அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். அதுதான் விவசாயிகளுடைய கோரிக்கை; நம்முடைய கோரிக்கை; மக்களுடைய கோரிக்கை என்பதையும் எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறுகிற வரையில் நம்முடைய போராட்டங்கள் தொடரும்; வேறு கட்டங்களில் அவற்றை முடிவு செய்து அறிவித்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களைச் சேர்ந்த நம்முடைய தோழர்கள் இதுவரையில் 21 பேர் அதிர்ச்சியிலும் தற்கொலை செய்து கொண்டும் மாண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்திய அளவில் இருக்கக்கூடிய விவசாய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வருகிற 20-ஆம் தேதி அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளனர். இன்று நாம் இந்தப் போராட்டத்தை நடத்துகின்ற காரணத்தால், நாமும் அதில் பங்கேற்றிட வேண்டும்” என்றார் ஸ்டாலின்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close