[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பெண்ணால் முடியும்: நீதித்துறையின் உண்மை நிலவரம்!

indu-malhotra-1st-woman-lawyer-to-become-sc-judge-the-truth-of-justice

உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். தற்போது, உச்சநீதிமன்றத்தில் பானுமதி என்பவர் மட்டும்தான் ஒரேயொரு பெண் நீதிபதியாக இருக்கின்றார். இந்து மல்ஹோத்ராவின் நியமனம் அந்த எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியுள்ளது.

பாலின சமத்துவம் குறித்து ஏராளமாகப் பேசப்பட்டாலும் இன்று வரையிலும் மகளிருக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமாக்க முடியவில்லை என்பதே நமது போலித்தனத்துக்கு சாட்சியாக இருக்கிறது. சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட சட்டமன்ற, பாராளுமன்றத்திலேயே பெண்களுக்கு உரிய இடம் அளிக்காத போது நீதி வழங்கும் இடத்தில் நிலைமை எப்படியிருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.  

1956 ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த இந்து மல்ஹோத்ரா பள்ளி, கல்லூரி, சட்டப் படிப்புக்களை டெல்லியில் முடித்தார். அவரது தந்தை ஓம் பிரகாஷ் மல்ஹோத்ராவும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணி புரிந்து வந்தவர். சட்டம் படிப்பதற்கு முன்பு சில ஆண்டுகள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இந்து மல்ஹோத்ரா பணியாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த இந்து மல்ஹோத்ரா 2007 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார்.  

பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். உச்சநீதிமன்றத்தின் ‘கொலேஜியம்’ இந்து மல்ஹோத்ரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையின் மீது எந்த முடிவும் எடுக்காமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு காலம் தாழ்த்தி வந்தது. இது நீதித்துறையில் அரசு தலையிடுவதாக உள்ளது என மூத்த நீதிபதிகள் வெளிப்படையாகக் கண்டித்த பிறகே இப்போது இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நீதித்துறையில் பெண்களின் பங்கு என்பது மிகமிகக் குறைவாகும். 1950ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரையிலான 67 ஆண்டுகளில் மொத்தம் ஆறு பெண்கள் மட்டும்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது நியமிக்கப்பட்டுள்ள இந்து மல்ஹோத்ரா ஏழாவது பெண் நீதிபதியாவார். 

“உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கின்ற இருபத்து நான்கு உயர்நீதிமன்றங்களில் எட்டு உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. ஒட்டுமொத்தமாக உயர்நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதிகளில் 10 விழுக்காடு அளவுக்குத்தான் பெண் நீதிபதிகள் இருக்கின்றனர்” என விதி ( VIDHI ) என்ற அமைப்பு 2018 பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. 
நீதித்துறையில் உயர்நிலைகளில்தான் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது என்பதல்ல, கீழமை நீதிமன்றங்களிலும் அதே நிலைதான் இருக்கிறது. இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது. பீகாரில் 35%ம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் 33.33%ம், ராஜஸ்தான்,தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 30%ம், உத்தரப்பிரதேசத்தில் 20%ம், ஜார்கண்டில் 5%ம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு சட்டம் உள்ளது. 

தற்போது தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள ஒட்டுமொத்த நீதிபதிகளில் 37 % பெண்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு அளவைக் காட்டிலும் இது சற்று கூடுதலாகவே இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 182 மாவட்ட நீதிபதிகளில் 35.16 % பெண்கள் உள்ளனர். சீனியர் சிவில் நீதிபதி பதவிகள் 280 உள்ளன. அதில், 35.71 % பெண்கள் உள்ளனர். ஜூனியர் சிவில் நீதிபதி பதவிகள் 414 உள்ளன. அதில், 37.68 % பெண்கள் உள்ளனர். ஒப்பீட்டளவில் இது பாராட்டத்தக்கதாகும். 
 
‘விதி’அமைப்பு மட்டுமல்ல; நீதித்துறையில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி சட்டம் மற்றும் நீதிக்கான பாராளுமன்ற நிலைக்குழுவும் கடந்த 2018 மார்ச் மாதத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 15,959 , அதில், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 4409 மட்டுமே என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் பாராளுமன்ற நிலைக்குழு இந்த ஏற்றத்தாழ்வு விரைவிலேயே களையப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை 50 % ஆக உயர்த்த வேண்டுமென்றும் அது பரிந்துரைத்துள்ளது. 

பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவரத்தின்படி மும்பை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 73 நீதிபதிகள் உள்ளனர். அதில் 11 பேர்தான் பெண்கள். டெல்லி உயர்நீதிமன்றத்திலுள்ள 38 நீதிபதிகளில், 10 பேர் மட்டுமே பெண்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் 53 நீதிபதிகளில் 7 பேர் மட்டுமே பெண்கள். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் உள்ள 35 நீதிபதிகளில் 4 பெண்கள் மட்டுமே உள்ளனர். குஜராத் உயர்நீதிமன்றத்தில் 31 நீதிபதிகளில் 4 பெண்கள்தான் இருக்கின்றனர். இந்தியாவிலேயே பெண் நீதிபதிகள் மிகவும் குறைவாக இருக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம்தான். அங்குள்ள அலகாபாத் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 110 நீதிபதிகளில் வெறும் 6 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள்.

நீதித்துறையில் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது வெறுமனே பதவி சம்பந்தமான விஷயமல்ல. நாடெங்கும் பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் பெருகிவரும் பாலியல் வன்கொடுமைகளையும், அவை தொடர்பான வழக்குகள் பல்லாயிரக்கணக்கில் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதையும் பார்த்தால், நீதித்துறையில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் நமக்குப் புரியம். பெண்கள் தொடர்பான வழக்குகளை முன்னுரிமை தந்து தீர்த்து வைப்பதற்கு ஆண் நீதிபதிகள் போதிய அளவு அக்கறை காட்டுவதில்லை என்பது மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்புக்கென இயற்றப்பட்ட சட்டங்களையும்கூட அவர்கள் நீர்த்துப்போகச்செய்யும் செயலில் ஈடுபடுகின்றனர். மகளிர் அமைப்புகளின் நீண்ட நெடும் போராட்டங்களின் விளைவாக இந்திய தண்டனை சட்டத்தில் சேர்க்கப்பட்ட பிரிவு 498 ஏ வை முடக்கும் விதமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2017 ஜூலையில் அளித்த தீர்ப்பு நீதித்துறையில் புரையோடியிருக்கும் ஆணாதிக்க சிந்தனைக்கு உதாரணமாகும். 

இந்து மல்ஹோத்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே நேரத்தில், கீழமை நீதிமன்றங்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப அனைத்து மாநிலங்களிலும் சட்டங்களை இயற்றவேண்டும்; தேசிய சட்டப் பள்ளி முதலான சட்டப் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு 50% இடங்களை ஒதுக்கவேண்டும் என்பனபோன்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறு நாம் வலியுறுத்தவும் வேண்டும்.  

நீதி என்பது கனிவோடும்,கருணையோடும் தொடர்புகொண்ட ஒன்றாகும். கருணையும் கனிவும் இல்லாமல் வழங்கப்படுபவை சட்டங்களின் அடிப்படையிலான தீர்ப்புகளாக மட்டுமே இருக்கும், நீதியாக இருக்காது. நமது நீதி மன்றங்கள் வெறும் தீர்ப்புகள் அளிக்கும் அமைப்புகளாக இல்லாமல் உண்மையிலேயே நீதிவழங்கும் அறச்சாலைகளாக மாறவேண்டுமெனில் அவற்றில் பெண்கள் அதிக அளவில் இடம்பெறவேண்டும். அதை இப்போதாவது நமது ஆட்சியாளர்கள் உணரவேண்டும். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close