Published : 25,Mar 2021 05:41 PM

மெஷினில் கறந்த பால் குடிப்பதால்... பெண்கள் குறித்த திண்டுக்கல் லியோனி பேச்சுக்கு எதிர்ப்பு

Dindigul-Leoni-controversy-talk-about-women

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரான திண்டுக்கல் லியோனி தேர்தல் பரப்புரையின் போது, பெண்கள் குறித்து பேசியதற்கு  எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “ஊழல் எஸ்பி வேலுமணியின் அராஜகத்துக்கு அடிக்கப் போகிறார் கார்த்தி சிவசேனாதிபதி சாவுமணி. இவர் என்ன செய்தாரென்று நீங்கள்ளாம் பார்த்திருப்பீர்கள். மாடுகளில் பலவகை உண்டு. பண்ணையில இருக்கற மாடுகளைப் பார்த்திருக்கிறீங்களா, ஃபாரின் மாடு, அத மெஷின்ல வச்சுத்தான் பால் கறப்பாங்க. அந்தப் பாலக் குடிச்சு குடிச்சுத்தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதிப்போய் விட்டார்கள். ஒரு காலத்துல பெண்கள் இடுப்பு 8 மாதிரி இருக்கும். பிள்ளைய தூக்கி இடுப்புல வச்சா உட்கார்ந்து கொள்ளும்.

பாரின் மாடு ஒரு மணி நேரத்துல 40 லிட்டர் பால் கறக்கும், ஆனால் அதைக் குடிச்சோம்னா பெரிசா ஊதிப்போக வேண்டியதுதான். 8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு இன்று பேரல் மாதிரி பெருத்துப் போய் கிடக்கிறது. பிள்ளைய தூக்கி இடுப்புல வச்சா வழுக்கி ஓடிடுது. ஆண் பிள்ளைகளெல்லாம் இவ்வளவு பெரிசா ஆகிட்டாங்க. ஆனால் நாட்டு மாடு, தாய்ப்பாலுக்கு அடுத்து சுத்தமான பால் நம்ம நாட்டு மாடு பால்தான். அந்த நாட்டு மாடுகளை காப்பாற்ற மாபெரும் இயக்கம் நடத்தியர்வர்தான் கார்த்தி சிவசேனாதிபதி” எனப்பேசினார்.

பரப்புரையில் லியோனி பேசிய பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. மேலும், பலர் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் “என்ன ஒரு வெட்கக் கேடு? அவர் என்ன பால் குடிக்கிறார்? குழந்தைப் பேற்றுக்குப் பின் ஒரு பெண்ணின் உடலில் அடையும் மாற்றங்கள் பற்றி அவருக்குத் தெரியுமா? அல்லது ஹார்மோன் மாற்றங்களின் போது ஏற்படும் மாற்றங்கள்தான் தெரியுமா? இத்தகைய ஆணாதிக்க மனோபாவ நபர்கள் குறித்து கனிமொழி என்ன கூற விரும்புகிறார்? இதுதான் உங்கள் கட்சி பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதையா?” என்று சாடியுள்ளார்.

இதுகுறித்து எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் “கடந்த சில வருடமாக தமிழ்நாட்டில் பேச பட்ட மிக பெரிய scam A1, நாட்டு மாடு பால் தான். இந்த அழகில் அந்த பாலை குடிக்காமல் 8 போல் இருந்த பெண்களின் இடுப்பு பேரல் போல் ஆகிவிட்டது என்று திண்டுக்கல் ஐ லியோனி திமுக பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார். இவர்களுக்கேல்லாம் இப்படி பேசும் அதிகாரத்தை யார் கொடுத்தது? கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருமே sexist ஆக இருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் லியோனி கண்ணாடி பார்த்து எத்தனை நாள் ஆனது என்று தெரியவில்லை. ஏன்னா அவர் இடுப்பே அப்படி தான் இருக்கு. உதாரணத்துக்கு அதையே சொல்லி இருக்கலாம். ஆனா பொண்ணுங்க கிட்ட தான் வருவாங்க” எனத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்