[X] Close

"பல வருட உழைப்புக்கு கிடைத்த பலன்!" - ஒலிம்பிக் நம்பிக்கைத் தமிழன் சத்தியன் ஞானசேகரன்

விளையாட்டு,சிறப்புக் களம்

Qualifies-for-Tokyo-Olympics-Table-Tennis--Sathiyan-Gnanasekaran-Interview

உலகில் எந்த ஒரு விளையாட்டு வீரரின் உச்சபட்ச கனவும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதே. அந்தக் கனவு தற்போது தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரனுக்கு மெய்ப்பட்டிருக்கிறது. ஆனால், ஒலிம்பிக் போட்டிக்கு அத்தனை எளிதாக சத்தியன் வந்து சேர்ந்துவிடவில்லை. அதற்கு பின் இருக்கும் உழைப்பும், அதை நோக்கிய பயணமும் ஏராளம்.

2016 ஒலிம்பிக் போட்டி ரியோவில் நடைபெற்றது. அப்போது சத்தியன் ஞானசேகரன், அதற்கு தகுதி பெரும் வாய்ப்பை தவறவிட்டார், ஆனால், அதனால் அவர் துவளவில்லை. மாறாக, டோக்கியோ 2020-ல் தான் நிச்சயம் விளையாடவேண்டும் என உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

விளையாட்டு உலகில் பெரிதாக வெளிச்சம் படாமல் இருந்த சத்தியன், டேபிள் டென்னிஸ் உலக ரேங்கிங் பட்டியலில் 400-வது இடத்தில் இருந்து முதல் 25 இடங்களுக்குள் முன்னேறி, ரேங்கிங் பட்டியலில் 25 இடங்களுக்குள் வந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதன் மூலம் ஒட்டுமொத்த டேபிள் டென்னிஸ் உலகமும் அவரை திரும்பி பார்த்தது.


Advertisement

image

2016 பெல்ஜியம் ஓபன் தொடங்கி, 2018 காமன் வெல்த் தொடரில் வென்ற மூன்று பதக்கங்கள் சத்யனை டேபிள் டென்னிஸின் வருங்காலமாக பார்க்க வைத்தது.

குறிப்பாக, 60 ஆண்டுகால ஆசிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தபோது சத்தியன், அதில் ஓர் அங்கமாக இருந்தார். அதன்மூலம் இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி சத்தியன் ஞானசேகரனை கவுரவித்தது.

இந்நிலையில், தீவிரமாக ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வந்த விளையாட்டு வீரர்கள் அனைவருக்குமே கொரோனா காலகட்டம் மிகப்பெரிய சவாலாக அமைந்தது. பயிற்சிகள் செய்யமுடியாத நிலை ஏற்பட்டபோதும், பயிற்சியை விட்டுவிடாமல் ரோபட் கருவி உதவியோடு தொடர்ந்து தன்னை மெருகேற்றி வந்தார் சத்தியன்.

தற்போது தோஹாவில் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் பாகிஸ்தான் வீரர் முகமது ரமீசை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் டோக்கியோவில் ஜூலை மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் தமிழக வீரர் சத்தியன் ஞானசேகரன்.

image

இதுகுறித்து நம்மிடம் பூரிப்புடன் பேசியவர், "இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது சிறுவயதிலிருந்து எனது கனவு அது இன்று நினைவாகி இருக்கிறது. கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது எனக்கு உணர்த்தி இருக்கிறது.

மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. என்னுடைய பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பின்றி எதுவுமே சாத்தியமில்லை. பல வருடமாக இதற்காக அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்தேன். அதற்கான பலனை இன்று அடைந்துள்ளேன்" என்றார் சத்தியன்.

காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் என கடந்த சில வருடங்களில் பலவற்றை முதல் முறை சாத்தியமாக்கிய தன்னால் ஒலிம்பிக்கையும் முதல் முறை சாத்தியமாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

image

"வாழ்க்கையில் பல விஷயங்கள் கடந்த சில ஆண்டுகளில் முதல் முறையாக நடந்துள்ளன. இதேபோன்று ஒலிம்பிக் போட்டியிலும் முதல் முறையாக வெல்வேன் என்று நம்புகிறேன்" என்றார் உத்வேகத்துடன்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே மிகப்பெரிய சவால் என்றால், அதனை வெல்வது அதை காட்டிலும் சவாலானது. அதற்கு தயாராகிவிட்டீர்களா என்ற கேள்விக்கு, "பல மடங்கு சவால்கள் அதிகரித்துள்ளன, இனி அனைத்து முக்கிய வீரர்களின் கவனமும் நம் மீது இருக்கும், ஒரு முழுமையான வீரராக பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக செல்வேன்.

"டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணிக்கு முதல் பதக்கத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே என் இலக்கு" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சத்தியன் ஞானசேகரன்.

- அருண்மொழிவர்மன்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close