Published : 12,Mar 2021 08:55 AM
போடி தொகுதியில் இன்று வேட்புமனுதாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடை நிறைவு செய்துள்ளது. மேலும், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டில் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது டான்சி வழக்கில் முதல்வர் பதவியை, ஜெயலலிதா இழந்ததால், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.
தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் பெரியகுளம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற பன்னீர்செல்வம், 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 3-வது முறையாக மீண்டும் போடி தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் இன்று நண்பகல் வேட்புமனு தாக்கல் செய்கிறார். போடி வரும் துணை முதல்வருக்கு சாலை காளியம்மன் கோயில் அருகே வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.