Published : 08,Mar 2021 04:21 PM

குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா, வேண்டாமா? - 3 சிக்கல்களும் மருத்துவரின் வழிகாட்டுதலும்

postponing-pregnancy-drawbacks-doctor-warning

குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடும் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம் 21 வயதுக்குள் பெண்களுக்கு திருமணம் நடந்தது. அவர்களின் பிள்ளைப் பேறு தள்ளிப்போடப்பட்டாலும் 25 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அடுத்தக் குழந்தை பெற்றுக் கொள்ளவும் போதிய கால அவகாசம் இருந்தது. ஆனால், தற்போது பெரும்பாலும் 25 வயதுக்கு மேல்தான் பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படியிருக்க, இன்னும் பிள்ளைப் பேற்றைத் தள்ளிப்போடுவது நல்லதா? இதுகுறித்து விளக்கமளிக்கிறார், அரசு பொதுநல மருத்துவரான ஃபரூக் அப்துல்லா.

image

‘’இயல்பாகவே கடந்த தலைமுறையில் 20 வயதுக்குள் இருந்த பெண் திருமண வயது இப்போது இருப்பதைத் தாண்டி இருக்கிறது. 20 முதல் 23 என்பதே இப்போதைய சராசரி பெண்கள் திருமண வயதாக ஆகி இருக்கிறது. இது வரும் தலைமுறையில் இன்னும் அதிகரிக்கலாம். பெண்கள் பலரும் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டு திருமணம் செய்வது நல்லது என்ற எண்ணத்திற்கு வந்திருக்கின்றனர்.

தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கி வளர்த்த தந்தைக்கும் தாய்க்கும் தனது சம்பாத்தியத்தில் நல்லவற்றை வாங்கித்தந்து அழகு பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மிகவும் நியாயமான உணர்வு அது. எனவே கல்லூரிப் படிப்பை முடித்தாலும் அடுத்த கட்டமாக வேலைகளுக்குச் செல்கின்றனர். வேலை செய்து பொருளீட்டி அதன் மூலம் பொருளாதார தன்னிறைவை எட்டி குடும்பத்தின் கூட்டுப் பொருளாதாரத்தையும் உயர்த்துகின்றனர்.

இப்போது நடுவில் வருவது திருமணம் குறித்த பேச்சு. இன்னும் நம்மூரில் வரதட்சணை ஒழிக்கப்படவில்லை. இதையும் வேதனையுடன் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது . இதனால் திருமணம் செய்யும் எண்ணம் இருந்தாலும் ஆசை இருந்தாலும் வரதட்சணை தர பொருள் இல்லாததால் திருமணம்  தள்ளிச் செல்லும் நிலையும் இருக்கிறது.

திருமணம் தள்ளிச் சென்றாலும் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள பல தம்பதிகள் விரும்புவதில்லை. காரணம், தங்களுக்குள் இருக்கும் தனிமையான தருணங்கள் (privacy / intimacy)  கெட்டு விடும் வாய்ப்பை ஏன் உடனே உருவாக்க வேண்டும் என்ற எண்ணம். குழந்தை என்பது ஒரு கமிட்மென்ட். அதற்குள் நாம் ஏன் அதற்குள் சிக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் மணவாழ்க்கையை அனுபவிக்கலாமே என்ற எண்ணமாக இருக்கலாம்.

நமது இப்போதைய வருமானம் போதவில்லை. இன்னும் வருமானம் அதிகமான பிறகு பெற்றுக்கொள்ளலாமே என்ற எண்ணம். இன்னும் சில இடங்களில் கணவர் திருமணம் முடிந்ததும் வெளிநாடு சென்றிருக்கலாம். அப்போதும் குழந்தை தள்ளிப்போவது இயற்கை.

ஒரு தம்பதியாக ஆணும் பெண்ணும் தங்களது எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதைப் பற்றி யாரும் கருத்து கூற இயலாது. குழந்தையை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும், எத்தனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் யாரும் ஒரு தம்பதிக்கு கட்டளை பிறப்பிக்க முடியாது.  ஆனாலும், மருத்துவ ரீதியாக குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடுவதால் சில சிக்கல்கள் ஏற்படுகிறது.

image

சிக்கல் 1: ஒரு பெண் சிசு தனது தாயின் கருவறைக்குள் இருந்து பிறக்கையில்,  20 லட்சம் முட்டைகளைக் கொண்டிருக்கும். அந்தக் குழந்தை பிறந்த தேதியில் இருந்து பருவமடையும் (PUBERTY) தேதி வரை இயற்கையின் உயிர்பிழைப்பு நியதிப்படி, சக்தியற்ற முட்டைகள் யாவும் அழிக்கப்பட்டு, அந்தப் பெண் பருவமடையும்போதோ 40 ஆயிரத்துக்கும் குறைவான முட்டைகளே அவரது ஒட்டுமொத்த இனப்பெருக்க காலத்திற்கும் அவரது இரு சினைப்பைகளில் (ovaries)  எஞ்சி இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நிகழ்கையில், ஆயிரமாயிரம் முட்டைகளுக்குள் போட்டி வைக்கப்பட்டு வலிமை வாய்ந்த ஒரே ஒரு முட்டை மட்டுமே சினைப்பையில் இருந்து வெளிவரும். ஆக, 20 லட்சம் முட்டைகளில் இருந்து அவர் பருவமடைந்த தினத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் அவரது மாதவிடாய் நிற்கும் வயது வரை சுமார்  360 சிறந்த முட்டைகளை அவளது உடல் தேர்ந்தெடுக்கிறது.

இதில் பிரச்னை யாதெனில், பெண்ணின் வயது அதிகமாக அதிகமாக அவரது சினைப்பையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கையும் தரமும் குறைந்துகொண்டே வரும். இது இயற்கை. ஆண்களுக்கு ஐம்பது வயது வரை கூட விந்தணு வீரயத்துடன் இருக்கும். ஆனால் பெண்களுக்கு அதே 50 வயதில் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டு விடுகின்றது.

தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு 25 முதல் 30 வயதிலேயே முட்டைகளின் தரம் குறையத் தொடங்கி விடுகிறது என்று எண்ணுகிறேன். அதற்கான காரணங்களாக நான் முன்வைப்பது, அதிக மாவுச்சத்து உண்ணும் உணவு முறை, பெண்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், அதிக உடல் பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை... இவையனைத்தும் சேர்ந்து முட்டைகளின் தரத்தை இன்னும் குறைக்கின்றன.

ஒவ்வொரு வளரிளம் பெண்ணிற்கும் 18 முதல் 21 வயதுக்குள் அவளது கருமுட்டைகள் எத்தனை இருக்கின்றன? அவற்றின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பதை அறியும் பரிசோதனை செய்து கொள்வது உகந்தது. இந்த பரிசோதனைக்கு பெயர் AMH (Anti Mullerian Hormone) எனும் பரிசோதனை. இந்த ஒரு பரிசோதனை மூலம் தனக்கு போதுமான அளவு முட்டைகள் தரமான அளவில் இருக்கின்றனவா என்று ஒரு பெண் சோதித்து கொள்ள முடியும்.  AMH மிகக் குறைவாக இருந்தால் இனியும் திருமணத்தையோ குழந்தை பிறப்பையோ தள்ளிப்போடுவது நல்ல முடிவு அல்ல என்ற திசை நோக்கி செல்லலாம்

AMH நல்லபடியாக இருந்தால் இன்னும் சில காலம் குழந்தை பிறப்பை தள்ளிப்போடலாம் என்ற திசை நோக்கி செல்லலாம். AMH மிக மிக குறைவாக இருந்தால் செயற்கை முறையில் கருத்தரிக்கும் நவீன சிகிச்சை முறைகளுக்கு உடனடியாக செல்லலாம். AMH சராசரிக்கு அதிகமாக இருந்தால் PCOD போன்ற பிரச்னைகள் இருக்கலாம். அவற்றை சரி செய்ய உதவும்.

திருமணத்தை தள்ளிப்போட எண்ணும் பெண்கள், குழந்தைப் பிறப்பை சிறிது தள்ளிப்போட என்னும் பெண்கள் இந்த AMH பரிசோதனையை செய்து தெளிவான முடிவை எடுக்குமாறு பரிந்துரை செய்கிறேன். AMH-யை  கூட்டுவதற்கு மாவுச்சத்தை குறைக்க வேண்டும். குறை மாவு (LOW CARBOHYDRATE)  உணவு முறை  உதவி செய்யலாம். தினமும் உடற்பயிற்சியை அதிகமாக்க வேண்டும். விரதம் இருக்க வேண்டும். புரதம் உள்ள உணவுகளை எடுக்க வேண்டும். ஒமேகா3 மீன் எண்ணெய் எடுப்பது பயன்தரும். உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

image

சிக்கல் 2: தாய்க்கு வயதாக வயதாக, பிறக்கும் குழந்தைக்கு பிறப்பிலேயே வரும் குறைபாடுகள் வரும் வாய்ப்பு அதிகம் உண்டென ஆய்வுகள் கூறுகின்றன. தாயின் 25 வயதில் பிரசவம் நிகழ்ந்தால் 1500 பிறப்புக்கு ஒரு குழந்தைக்கு வரும் Downs Syndrome எனும் மூளை வளர்ச்சிக் குறைபாடு. அதே தாய்க்கு 35 வயதானால் 150 குழந்தைகளில் ஒன்று என்று நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

சிக்கல் 3: தாயின் வயது அதிகமாக அதிகமாக, அவர் கர்ப்பமாக இருக்கும் போது ப்ரஷர், வலிப்பு நோய் , சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. 25 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, கர்ப்பக் காலத்தில் ரத்த கொதிப்பு வரும் வாய்ப்பை விட 35 வயதில் கர்ப்ப காலத்தில் ரத்த கொதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

எனவே குழந்தை 30 முப்பது வயதுக்கு மேல் தள்ளிப்போடுவது பல சிக்கல்கள் நிறைந்ததாக தோன்றுகிறது. குழந்தை பிறப்பை முடிந்தவரை 20 முதல் 30-க்குள் டைமிங் செய்வது பெண்கள் நலனுக்கு நன்று. AMH ரத்தப் பரிசோதனை மாதவிடாய் காலத்தில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப்பார்க்கலாம்.

மேலும் கணவருடைய விந்தணுக்களையும் சோதனை செய்து அவருடைய விந்தணுக்கள் போதுமான எண்ணிக்கையில் போதுமான தரத்தில் இருக்கின்றனவா என்பதையும் சோதித்து, அதன் பிறகு குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் முடிவுக்கு வாருங்கள். அதை தெரிந்து கொண்டு குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடலாமா? வேண்டாமா? என்ற முடிவுக்கு பெண்களும் அவர் தம் வாழ்க்கை துணையும் வர வேண்டும்’’ என்கிறார் அரசு பொதுநல மருத்துவரான ஃபரூக் அப்துல்லா.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்