[X] Close

மை ஹெரிடேஜ்: தாத்தா, பாட்டி புகைப்படங்களுக்கு உயிர் கொடுக்கும் வைரல் தளம்!

சிறப்புக் களம்,டெக்னாலஜி

MyHeritage---Deep-Nostalgia-technology-gives-new-life-to-old-photos

உங்கள் பழைய புகைப்பட ஆல்பத்தில் இருக்கும் தாத்தா, பாட்டிகளின் கருப்பு - வெள்ளை படத்தைக் கொண்டு, அவர்களை வீடியோவில் உயிர் பெற வைத்தால் எப்படி இருக்கும்? 'மை ஹெரிடேஜ்' என்னும் டீப்-நாஸ்டால்ஜியா (https://www.myheritage.com/deep-nostalgia) இணையதளம் இதைத்தான் செய்து வியக்க வைக்கிறது.

உங்கள் வசம் உள்ள கருப்பு - வெள்ளை படத்தை இந்தத் தளத்தில் சமர்ப்பித்தால், அந்த ஒற்றைப் படத்தை உயிரோட்டமான வீடியாவாக மாற்றிக் காட்டுகிறது. புகைப்படத்தில் இருப்பவர்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை உண்டாக்குகிறது. மறைந்து போனவர்களின் நினைவுகளில் இருப்பவர்கள், இந்த வீடியோ தோற்றத்தைப் பார்த்து நெகிழ்ந்து போய்விடுவார்கள். இணையத்தில் எண்ணற்றவர்கள் இப்படித்தான் உருகி கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இது சாத்தியமாகிறது?


Advertisement

எல்லாம் ஏ.ஐ செய்யும் மாயம்தான். செல்போனில் எடுக்கப்பட்ட படங்களில் விதவிதமான விளைவுகளை சேர்த்து, அவற்றை மாற்றி மெருகூட்டிக் காட்டும் செயலிகள் பல இருக்கின்றன அல்லவா? இவை எல்லாமே, ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை தான் ஏதோ ஒரு விதத்தில் பயன்படுத்துகின்றன.

இந்த வரிசையில், 'டீப் ஃபேக்' வீடியோக்களை உருவாக்க உதவும் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துக்கொண்டு, மேலே சொன்ன, பழைய நினைவுகளை மீட்டுத் தரும் வீடியோ சேவையை 'மை ஹெரிடேஜ்' இணையதளம் உருவாக்கியுள்ளது.

Meet Deep Nostalgia, an AI-powered trend that bring historical portraits back to life. its feel like they are alive.#DeepNostalgia #bhagat_singh pic.twitter.com/fslOCT6YIo

— Vishal Patel (@Dreamer_vish28) March 1, 2021 ">

Advertisement

இணையத்தில் புழங்குபவர்களுக்கு 'டீப் ஃபேக்' நுட்பம் ஏற்கெனவே அறிமுகம் ஆகியிருக்கலாம். செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்டு, இல்லாத அம்சங்களையும் எல்லாம் வீடியோவில் சேர்த்து, அசல் போலவே தோன்றும் பொய் வீடியோவை உருவாக்குவதே 'டீப் ஃபேக்' என குறிப்பிடப்படுகிறது.

கொஞ்சம் திகிலில் ஆழ்த்தக்கூடிய வில்லங்கமான தொழில்நுட்பம்தான் இந்த 'டீப் ஃபேக்'. போட்டோஷாப் கொண்டு ஒட்டு வேலை செய்த படங்களை உருவாக்குவதுபோல, செயற்கை நுண்ணறிவு துணையோடு, வீடியோக்களில் ஒட்டு வேலை செய்து போலி வீடியோக்களை உருவாக்குவதை 'டீப் ஃபேக்' சாத்தியமாக்குகிறது. இந்த முறையில், ஒரு விடியோவில் உள்ளவரது உடலில் வேறொருவரின் தலையை பொருத்தி, அவர் பேசுவதுபோல செய்ய முடியும். ஏற்கெனவே உள்ள வீடியோவை கொண்டு, அதில் உள்ளவர் சொல்லாததை எல்லாம் சொல்ல வைக்க முடியும்.

இந்தப் போலி உருவாக்கங்கள் உண்மை போலவே தோற்றம் அளிக்கும் என்பதுதான் வில்லங்கம். இந்த நுட்பத்தை வைத்துக்கொண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் போலி வீடியோக்களை எல்லாம் உருவாக்கி இணையத்தை திகைக்க வைத்துள்ளனர். பிரபலங்களை கொண்டும் இந்த 'டிப் ஃபேக்' வில்லங்கங்கள் அரங்கேறியிருக்கின்றன.

இந்த 'டீப் ஃபேக்'கில் உண்மையில் என்ன பிரச்னை என்றால், இதன் பின்னே உள்ள ஏ.ஐ நுட்பம், பயிற்சி அடிப்படையில் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும் திறன் படைத்தது. இதனால், எண்ணற்ற விபரீதங்கள் ஏற்படலாம் என அஞ்சுகின்றனர்.

image

வில்லங்கமான இந்த தொழில்நுட்பத்தை கொண்டுதான் 'மை ஹெரிடேஜ்' இணையதளம், பழைய கருப்பு - வெள்ளை படங்களில் உள்ளவர்களை வீடியோவாக உருவாக்கித் தருகிறது. 'டி-ஐடி' எனும் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை அளிக்கிறது.

தொடர் அசைவுகள் மற்றும் சைகைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு முக உணர்வுகளை இந்த நுட்பம் உருவாக்கியிருக்கிறது. சமர்பிக்கப்படும் புகைப்படத்தின் மீது இந்த முக உணர்வுகளை செலுத்தி, அதில் உள்ள உருவத்தை வீடியோவாக மாற்றிக் காட்டுகிறது. இதைப் பார்த்தால் புகைப்படத்தில் உள்ளவர் பேசுவதுபோல தோன்றும்.

குடும்ப வரலாற்றின் வேரை கண்டறிய உதவும் 'மை ஹெரிடேஜ்' தளம், இந்த சேவை மூலம் குடும்பத்தின் பழைய உறுப்பினர்களை வீடியோ வடிவில் காண வழி செய்கிறது.

'மை ஹெரிடேஜ்' தளத்தில் உறுப்பினராகி இந்த சேவையை பயன்படுத்திப் பார்க்கலாம். சேவை இலவசமானதுதான் என்றாலும், இது போன்ற சேவைகளில் சமர்பிக்கப்படும் படங்கள், முகமறிதல் உள்ளிட்ட நுட்பத்திற்காக பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், இந்தப் படங்கள் எதிர்காலத்தில் எப்படி வேண்டுமானால் பயன்படுத்தப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

- சைபர்சிம்மன்


Advertisement

Advertisement
[X] Close