[X] Close

கேரளாவில் பாஜகவை கரைசேர்ப்பாரா 'மெட்ரோ மேன்' ஶ்ரீதரன்? - ஓர் அலசல்

இந்தியா,சிறப்புக் களம்

Can-Metro-man-Sreedharan-save-BJP-in-Kerala

இந்தியாவின் 'மெட்ரோ மேன்' என்று அறியப்படும் ஸ்ரீதரன் கேரள பாஜகவில் சேர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். 88 வயதான தொழில்நுட்ப வல்லுநர் இ.ஸ்ரீதரன், கொங்கன் ரயில்வே மற்றும் டெல்லி மெட்ரோ திட்டங்களை வழிநடத்திய பெருமைக்குரியவர். மேலும், உலகளவில் புகழ்பெற்ற அவர், அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். ஸ்ரீதரன் போன்ற அந்தஸ்துடைய ஒருவர் கேரள பாஜகவில் இணைவது இதுவே முதன்முறை. ஆனால், இது கேரள பாஜகவுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்குமா?

"ஸ்ரீதரனின் நுழைவு கேரளாவில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், சட்டப்பேரவைத் தொகுதிகளை வெல்வதற்கு பெரிய அளவில் உதவி செய்யாது" என்று முன்னாள் வெளியுறவு அதிகாரியும், கேரள மாநில உயர் கல்வி கவுன்சிலின் தலைவருமான டி.பி.ஸ்ரீனிவாசன் கூறுகிறார். 'மெட்ரோ மேன்' அரசியலில் நுழைய முடிவு செய்து மூன்று மாதங்களே ஆகின்றன என்று ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.

image


Advertisement

மேலும் அவர் பேசுகையில், "இதற்கு முன், ஸ்ரீதரன் எல்.டி.எஃப், யு.டி.எஃப் மற்றும் பாஜகவுடன் உள்கட்டமைப்பு திட்டங்களில் பணியாற்றியுள்ளார். இதன்காரணமாக பல கட்சிகள் அவரை தங்கள் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்திருக்கும். ஆனால், அவர் பாஜகவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். காரணம், அவர் தேசியவாதத்தை விரும்புபவராக இருக்கிறார். ஸ்ரீதரனின் குறிக்கோள் கேரளாவில் எம்.எல்.ஏ இடத்தை வெல்வது மட்டுமல்ல; மாநிலத்தில் பாஜகவை வளர்த்தெடுப்பதும்தான்" என்கிறார்.

மலையாள மிடில் கிளாஸ், குறிப்பாக இந்து மிடில் கிளாஸ் ஆகிய மக்களிடையே அவர் புகழ் பெற்றிருப்பதால், அம்மக்களிடையேயான பெருமளவு ஆதரவை அவரால் திரட்ட முடியும். ஆனால், கேரளா மிகவும் அரசியல் மயமாக்கப்பட்ட வாக்கு வங்கியாகும் என்று ஸ்ரீனிவாசன் நினைவூட்டுகிறார்.

"ஒரு பாரம்பரிய இடதுசாரி அல்லது காங்கிரஸ் வாக்காளர் ஸ்ரீதரனுக்காக தனது வாக்குகளை மாற்ற மாட்டார். ஸ்ரீதரன் நல்லவர் என்று சொல்வார்கள்; ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தங்கள் பாரம்பரிய கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். அந்த வகையில், பழைய வாக்கு வங்கியை உடைப்பது மிகவும் கடினம்" என்று ஸ்ரீனிவாசன் விளக்குகிறார். முந்தைய ஆண்டுகளில் கேரளாவில் பாஜகவின் செயல்திறன் குறித்த ஸ்ரீனிவாசனின் அவதானிப்புகள் உண்மைக்கு நெருக்கமாக இருந்தன.

2004-ம் ஆண்டு வரை, கேரளாவில் பாஜகவின் வாக்கு வங்கி 6%-ஐ தாண்டவில்லை. ஆனால், அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில், பாஜக இறுதியாக 10% வாக்கு வங்கியை பெற்றிருந்தது. அம்மக்களின் imageவாக்களிக்கும் முறையானது எப்போதும் பிரதான தேசிய நீரோட்டத்திலிருந்து விலகியே நிற்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, 2014-ம் ஆண்டு இந்தியா முழுக்க மோடி அலை வீசியது. ஆனால், கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிகளும் மக்களவைத் தேர்தலில் முறையே 8 இடங்களையும் 5 இடங்களையும் வென்றனர். 2014-ல் கேரளாவிலிருந்து ஒரு இடத்தையும் பாஜகவால் வெல்லமுடியவில்லை.

இருப்பினும், 2016 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 15% வாக்குகளைப் பெற்றது. பின்னர் இந்த நிலைமை தேக்கமடைந்துவிட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 15.56% வாக்குகளையும், 2020 கேரள உள்ளாட்சி தேர்தலில் 15.5% வாக்குகளையும் பெற்றது.

திருவனந்தபுரத்தில் சில இந்து பெரும்பான்மை தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் பாஜக அதிகபட்சமாக 16-17% வாக்குகளைப் பெறுகிறது. திருவனந்தபுரத்தில், வட்டியூர்காவு மற்றும் நெமோம் போன்ற தொகுதிகள் கணிசமான நாயர் மக்கள்தொகை நிறைந்து காணப்படும் பகுதிகள். இங்கு இந்து பெரும்பான்மையினர் இருப்பதால் இது பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது.

நெமோம் ஒரு 'எலைட் தொகுதி' இங்கு பொதுவாக பாஜக பிரபலமான வேட்பாளரை மட்டுமே நிறுத்துகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜகோபாலை நெமோமில் நிறுத்தியது பாஜக. அதன்மூலம் 10.02% வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

பிரபலங்களை நிறுத்தியும் பயனில்லை:

இதில் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், தனது வெற்றி வாய்ப்பை எளிதாக்கிகொள்ள பிரபலங்களை முன்னிறுத்தி தேர்தல் களம் கண்டது பாஜக. இது அந்த கட்சிக்கு புதிதல்ல என்றாலும், அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என்பதே கடந்த கால தேர்தல்கள் சொல்லும் வரலாறு.

image

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திரிசூரில் சுரேஷ் கோபியை களமிறக்கியது பாஜக. ஆனால், இடதுசாரி மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைத்தான் பிடித்தார். மொத்தம் 2,93,811 வாக்குகளை பெற்றிருந்தார். அதேபோல கேரளாவின் பாஜக தலைவரான கே.சுரேந்திரன், 2019 மக்களவைத் தேர்தலில் பதனம்திட்டாவிடம் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தேர்தல் நேரத்தின்போது, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பிரச்னை பற்றி எரிந்துகொண்டிருந்தபோதும் கூட எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் க்கு அடுத்த இடத்தைத்தானே சுரேந்திரனால் பிடிக்க முடிந்தது. இதன்மூலம் மக்களிடையே நன்கு முகம் தெரிந்த ஆட்களால் கூட பாஜகவின் வாய்ப்புகளை மேம்படுத்த முடியவில்லை என்பது தெளிவாகிறது.

வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?

கேரளாவில் 55% இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் 45% உள்ளனர், சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் பாஜக அம்மாநிலத்தில் வெற்றி பெற வாய்ப்பில்லை. கேரளத்தில் உள்ள 17% கிறிஸ்தவ மக்களில், பெரும்பான்மையானவர்கள் சிரிய கிறிஸ்தவர்கள், அதாவது - சிரிய கத்தோலிக்கர்கள், ஆர்த்தடாக்ஸ் மற்றும் யாக்கோபிய சிரியர்கள். இவர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க தயராகத்தான் இருக்கிறார்கள். லத்தீன் கத்தோலிக்கர்களைப் போல யுடிஎஃப்-க்கு ஆதரவானவர்களாக இவர்கள் இல்லை. இந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் யுடிஎஃப் வாக்கு வங்கியாக இருந்த சமூகம் இப்போது உடைந்துவிட்டது. இடதுசாரி மற்றும் பாஜக ஆகிய இரண்டும் கட்சிகளுக்கும் இந்த சமூக மக்களின் வாக்குகள் பிரிகின்றன.

- தகவல் உறுதுணை: The News Minute

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close