Published : 29,Jan 2021 08:43 PM
கனிமொழியை தரக்குறைவாக விமர்சித்ததை ஏற்கமுடியாது: பாஜக நிர்வாகிக்கு குஷ்பு கண்டனம்!

பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் கனிமொழி எம்.பியை அவதூறாக விமர்சித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அந்த கருத்தினை கண்டித்தும் கனிமொழிக்கு ஆதரவாகவும் நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு அக்கட்சியில் இருந்து விலகி கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படவே, சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அவர், பாஜகவில் இணைந்தாலும் சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் சோனியா காந்தியை ‘பார் டான்சர்’ என்று விமர்சித்திருந்தார். அதற்கு குஷ்பு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டது பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜகவின் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் திமுக எம்.பி கனிமொழியை அவதூறாக தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததற்கும் குஷ்பு கடுமையான கண்டங்களை பதிவிட்டுள்ளார். குஷ்பு “ பெண்ணைப் பற்றி இழிவான அவமரியாதையான கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டும். கனிமொழி எம்.பி ஒரு பெண், ஒரு மகள், ஒரு மனைவி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் மரியாதைக்குரியவர். அனைத்து விதங்களிலும் அவருக்கு மரியாதைக் கொடுக்கவேண்டும்’ என்று ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார்.
Irrespective of the party, or an individual, a degrading, disrespectful comment about a woman should be condemned. @KanimozhiDMK is a wife, a daughter, a woman and a parliamentarian elected by the people. She deserves respect and that should be given to her at every give point.?
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 29, 2021