[X] Close

"ஒரு நடிகர் முதல்வராகலாம். ஆனா, ஒரு முதல்வர் 'நடிக்க' கூடாது!"- ஸ்ரீப்ரியா சிறப்பு பேட்டி

சிறப்புக் களம்,தமிழ்நாடு,தேர்தல் களம்

sripriya-special-interview

கமல்ஹாசன் மீது அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமி வரை அதிமுகவினர் முன்வைக்கும் விமர்சனங்கள் அனைத்துக்குமே பதிலடிகளை முன்வைக்கிறார் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைமைப் பேச்சாளரான நடிகை ஸ்ரீப்ரியா. சட்டமன்றத் தேர்தலுக்காக களப்பணியில் சுழன்று கொண்டிருப்பவருடனான ஓர் உரையாடல்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

"பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. கட்சியின் மகளிரணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தபோது 'எல்லா மட்டத்திலும் பணிபுரியவே விரும்புகிறேன்' என்று கூறினேன். தேர்தலில் நின்றுதான் மக்கள் சேவை செய்யவேண்டும் என்பதில்லை. ஆனால், தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்."


Advertisement

image

சினிமாவில் நடிக்க வாய்ப்பு போன பிறகே கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதாக அதிமுகவினர் விமர்சிக்கிறார்களே?

"மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தை எதனுடனும் ஒப்பிடவேக் கூடாது. ஓட்டுப் போடும் ஒவ்வொருவருமே அரசியலில் ஈடுபட்டவர்கள்தான். அதுவும், அரசியல் பங்கேற்புதான். ஒவ்வொரு தேர்தலின்போதும் தலைவர் ஓட்டுப் போட்ட போட்டோ செய்தித்தாள்களில் வரும். அதுமட்டுமல்ல, எங்கள் தலைவர் 60 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். அவருக்கென்று ஃபேன்ஸ் கிளப் வைக்கவில்லை. ஆனால், அவரது நற்பணி மன்றத்தின் மூலம் பல்வேறு சேவைகளை செய்துள்ளனர். அதனால், இவர்கள் தலைவர் குறித்து விமர்சிப்பதற்கு முன்பு யோசித்துப் பார்க்கவேண்டும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இபிஎஸ், ஓபிஎஸுக்கா வாக்களித்தார்கள்? ஜெயலலிதா அம்மாவுக்காக வாக்களித்தார்கள். என்னவோ இவர்களுக்கே வாக்களித்த மாதிரியல்லவா அடுத்தவர்களை விமர்சிக்கிறார்கள். ஒரு நடிகர் முதல்வராகலாம். ஆனால், ஒரு முதல்வர் எல்லாம் தெரிந்த மாதிரி ஒரு நடிகராக இருக்கக்கூடாது. ஆட்சி நன்றாக செய்தால் தலைவர் ஏன் அரசியலுக்கு வரப்போகிறார்? எங்களை வரவைத்ததே இவர்கள்தான். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்வதிலேயே இது எப்படிப்பட்ட ஆட்சி என்பது தெரியவில்லையா?".

image

கமல்ஹாசன் முன்னணி நடிகர். எம்.ஜி.ஆரை பெயரைச் சொல்லித்தான் வாக்கு கேட்கவேண்டுமா? எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து என்கிறார்களே அதிமுகவினர்?

அதிமுகவினர் 'இது அம்மா ஆட்சி என்றுதானே சொல்கிறார்கள்? எம்.ஜி.ஆர் ஆட்சி என்று ஏன் சொல்வதில்லை? எம்.ஜி.ஆர் எங்களுக்கெல்லாம் ஆசான். வழிகாட்டி. எங்கள் கலைத்துறையில் இருந்து வந்தவர். நாங்கள் அவரது பெயரை உபயோகிப்பதில் என்னத் தவறு இருக்கிறது? அதில், இவர்களுக்கு என்ன பிரச்னை? மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பிக்கும்போதே ‘நாளை நமதே'தான் எங்கள் முழக்கமாக இருந்தது. 'நாளை நமதே' புரட்சித் தலைவரின் முழக்கம். அதனால், தேர்தல் என்றவுடன்தான் அவரை இழுக்கிறோம் என்பது தவறானது."

ஆனால், எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி அரசியலுக்கு வந்த பலர் காணாமல் போய்விட்டர்கள் என்று அதிமுக விமர்சனம் செய்கின்றதே?

"அதிமுகவும் தேர்தல் சமயத்தின்போது மட்டும் எம்.ஜி.ஆரை ஏன் இழுக்கிறது? அது என்ன காணாமலா போய்விட்டது? காந்தியடிகள், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகிய தலைவர்களைப் எங்களின் முன்னோடிகளாகப் பார்க்கிறோம். இவர்கள் ஒரு கட்சியினருக்கே மட்டுமே சொந்தம் கிடையாது. அனைவருக்கும் சொந்தம். பொதுவுடைமையானவர்கள்."


Advertisement

image

காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனை தொடர்ச்சியாக தங்கள் கூட்டணிக்கு அழைக்கிறதே?

"கூட்டணி யாருடன் என்று தலைவரும், அதற்கான குழுவினரும் முடிவு செய்வார்கள். எனக்கு நம்பிக்கை உண்டு... தலைவர் சரியானவர்களைத்தான் காட்டுவார்கள். யாருக்கு வேலை செய்யவேண்டும் என்று சொன்னாலும் செய்வோம்."

கமல்ஹாசன் பிக்பாஸுக்குதான் முதல்வர் ஆகலாம். தமிழகத்துக்கு ஆகமுடியாது அதிமுகவினர் விமர்சிக்கிறார்களே?

"அதிமுகவினரே பிக்பாஸ் பார்க்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யலாம். ஆனால், பார்க்காமல் செய்யக்கூடாது. கமல் சார் சினிமா துறையை சேர்ந்தவர். அவருக்கு தெரிந்த வேலை இது. அரசியல் என்பது தனி. இரண்டையும் ஒப்பீடு செய்து விமர்சிக்கக் கூடாது."

image

ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

"ரஜினி சார் மருத்துவமனையில் இருந்து வந்தவுடனேயே 'உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள்' என்று போன் செய்து பேசினேன். எனக்கு தெரிந்து, அவருக்கு பெரிய விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். சூழ்நிலையால் அரசியலுக்கு வந்திருக்கலாம். அரசியலுக்கு வருவது வராததெல்லாம் அவருடைய விருப்பம். ஆனால், அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டது எங்களுடைய நட்பு. ஒரு நண்பராக அவர் ஆரோக்கியம்தான் முக்கியம் என்பேன்."

-வினி சர்பனா


Advertisement

Advertisement

Advertisement
[X] Close