Published : 21,Jan 2021 02:12 PM

இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’

THE-GREAT-INDIAN-KITCHEN-REVIEW

இந்தியாவைப் பொறுத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப்பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் சினிமா ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’.

மலையாள மொழி திரைப்படமான இது இம்மாதம் 15ஆம் தேதி வெளியானது. இயக்குநர் ஜோ பேபி இயக்கியிருக்கும் இந்த சினிமாவானது Neestream தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சலு கே தாமஸ். 100 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய இந்த சினிமா இந்தியப் பெண்களின் நூற்றாண்டுகால வலியை பேசுகிறது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

image

கேரளாவில் ஒரு அழகான கிராமம் அதில் ஆசிரியராக வேலை செய்கிறார் சூரஜ் வெஞ்சரமுடு. அவருக்கும் நடன ஆசிரியராக இருக்கும் நிமிஷாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு கணவரின் இல்லத்தில் வசிக்கும் நிமிஷா காலை எழுந்ததும் தனது கணவர், மாமனார் ஆகியோருக்குத் தேவையான உணவு தயாரிக்கிறார். அவர்கள் சாப்பிட்ட பிறகு அந்தப் பாத்திரங்களை சுத்தம் செய்கிறார். பிறகு மதிய உணவு தயாரிக்கிறார். அதன் பிறகு மதிய உணவு உட்கொண்ட பாத்திரங்களை சுத்தம் செய்கிறார். இரவு மீண்டும் அதே பணி பிறகு சமையலறையினை சுத்தம் செய்வது. பின்னிரவில் கணவருடன் தாம்பத்யம். இப்படியாகத் தொடர்கிறது அவரது வாழ்க்கை. மீண்டும் அதே விடியல், அதே வேலை, அதே சலிப்பு, அதே இரவு என தொடர்ந்து மருமகளாக நிமிஷா அந்த வீட்டில் வாழ்கிறார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு அந்த வாழ்க்கை மீது சலிப்பு ஏற்படவே என்ன முடிவினை அவர் எடுத்தார் என்பது தான் மீதி திரைக்கதை. உண்மையில் இந்த சினிமா இந்திய ஆண்களின் கோர முகத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சராசரி இந்தியக் குடும்பங்களில் ஒரு ஆண் தனக்கு தண்ணீர் தேவை என்றாலும் கூட “ஏய் தண்ணி கொண்டு” வா என மனைவியிடமோ, மகளிடமோ அதிகாரமாகச் சொல்கிறானே தவிர தன் தாகத்துக்கான தண்ணீரை சமையலறையில் இருக்கும் குடத்தில் எடுத்து தானே குடிக்க வேண்டும் என்கிற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமலே இருக்கிறான்.

image

தாத்தா பாட்டியை அதிகாரம் செய்தார். தனக்கு வேலை செய்யும் அடிமை போல நடத்தினார். அப்பா தன் தாயிடம் அதுபோலவே நடந்து கொண்டார். இவற்றை பார்த்து வளரும் அடுத்த தலைமுறையும் அதனை பின் தொடர்கிறது. இந்திய ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் திருமணம் செய்து கொள்வதென்பது தன் உள்ளாடையை துவைக்க ஒரு ஆள் தேவை என்பதற்காகவே என்பது போலொரு பார்வையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் சொல்லியிருக்கிறது தி கிரேட் இண்டியன் கிச்சன்.
இந்த சினிமாவைப் பார்க்கும் ஒவ்வொரு இந்திய ஆணும் ஏதோ ஒரு இடத்தில் குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுவார். தன் வீட்டுப் பெண்களை இது வரை பார்த்து வந்த அவர்களின் கோணமே மாறும்.

இப்படத்தின் அனைத்து காட்சிகளுமே அருமை என்றாலும் கூட சில காட்சிகள் குக்கர் விசிலை ஓங்கி அடித்திருக்கின்றன. ஒரு காட்சியில் மனைவி கணவனிடம் “உடலுறவுக்கு முன் மனரீதியாக தன்னை முதலில் தயார்படுத்துங்கள்” எனக் கோருவதும், அதனை வலி மிகுந்த வார்த்தைகளால் கணவர் மறுத்துப் பேசுவதும் இந்தியப் பெண்களின் உள்மன வலியை பதிவு செய்வதாக இருக்கிறது.

image

மற்றுமொரு காட்சியில் ஓட்டலுக்கு சாப்பிடப் போகிறார்கள் தம்பதிகள். அப்போது கணவன் டேபிள் மேனஸ் காரணமாக சாப்பிட்ட எச்சங்களை அங்கிருக்கும் காகிகத்தில் ஒதுக்கி வைக்கிறார். “ஏன் உங்களுக்கு இந்த டேபிள் மேனஸ் வீட்டில் வர மாட்டேங்குது” எனக் கேட்டும் மனைவிக்கு கிடைக்கும் பதில் துன்பம். இறுதிக் காட்சியில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் நிமிஷாவின் தம்பி அவரது தங்கையிடம் "போய் தண்ணி கொண்டுவா" என்கிறார். வெடிகுண்டு போல வெடித்து கோபப்படும் நிமிஷா “ஏன் உனக்கு தாகம் எடுத்த நீ போய் எடுத்து தண்ணி குடிக்கமாட்டியா போ போய் குடி” என்கிறார். இப்படியாக படம் முழுக்க நமது வீடுகளில் அன்றாடம் நடக்கும் விசயங்களின் தொகுப்பாகவே காட்சிகள் இருக்கின்றன. ஆனால் இதுநாள்வரை இவற்றை நீங்கள் அணுகாத வேறுஒரு கோணத்தில் இப்படம் பார்த்தபிறகு அணுகத்துவங்குவீர்கள்.

நிமிஷாவின் மாமனாராக வரும் பெரியவர் இந்தியாவின் அசல் ஆணாதிக்க முகம். ‘குக்கர்ல சோறு வச்சா பிடிக்காது. வாஷிங் மெசின்ல துவச்சா துணி கெட்டுப் போகும். மாத விலக்கு காலங்களில் பெண்கள் இப்படித்தான் நடக்கனும்’ என நிமிஷாவுக்கு உளவியல் நெருக்கடி தரும் அந்தப் பெரியவர் தினம்தினம் பெண்கள் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளின் உதாரண முகம்.

image

‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படம் பார்த்த பிறகு நீங்கள் அலுவலகத்துக்கு தினமும் எடுத்துவரும் டிபன் பாக்ஸை குறைந்தபட்சம் கழுவி சுத்தம் செய்துவிட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றால் அதுவே இப்படத்துக்கு கிடைக்கும் குறைந்தபட்ச வெற்றி. ஆனால் ரொம்ப நாள்களுக்கு நாம் குறைந்தபட்ச வெற்றி எனும் புள்ளியில் நின்று கொண்டிருக்காமல் முழுமையாக மனிதத் தன்மையுடன் மாறுவது முக்கியம். ஆணாதிக்க சிந்தனையில் இருந்து விடுபடுவது அவசியம். இந்தியாவில் ஆணாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய சினிமா ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்