Published : 25,Dec 2020 05:57 PM

பிசினஸ், சர்ச்சை, அதிகாரம்... பிசிசிஐ-யில் கோலோச்சும் அமித் ஷா மகன் ஜெய் ஷா!

Amit-Shah-s-son-Jay-Shah-and-his-journey-in-Business--Cricket

பிசிசிஐ செயலாளராக மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் அமித் ஷா மகன் ஜெய் ஷா. இந்தப் பதவியோடு கூடுதல் பொறுப்பாக ஐசிசி தொடர்பான பல்வேறு விவகாரங்களில் பிசிசிஐ சார்பில் பங்கேற்கும் பிரதிநிதியாகவும் தேர்வாகியுள்ளார் ஜெய் ஷா. அதுவும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல். பிசிசிஐ துணைச் செயலாளர் ஆனதில் இருந்தே மீடியாவின் லைம்லைட்டில் இருந்து வருகிறார் ஜெய் ஷா. இவரின் இந்த வளர்ச்சி அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி ஜெய் ஷாவுக்கு எப்படி சாத்தியமாகியது?

2010-ல் சொஹராபுதீன் என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அமித் ஷாவின் டைரியில் மோசமான காலமாக குறிக்கப்பட்டிருக்கும் அந்த சமயத்தில் ஜாமீன் கொடுக்க நீதிமன்றம் முன்வரவில்லை. இதனால் 3 மாதம் சிறைவாசம் அனுபவித்தார். இந்த வழக்கு நடக்கும்போதெல்லாம் நீதிமன்றத்துக்கு மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடன் 20 வயது இளைஞர் ஒருவர் வருவார். வழக்கறிஞர்களின் பின் வரிசையில் அமர்ந்துகொண்டு அனுமன் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே அந்த இளைஞர் வாதங்கள் நடப்பதை பார்ப்பார்.

ஆம்... நீங்கள் யூகிப்பது சரி! அந்த 20 வயது இளைஞர்தான் இன்றைய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எனப்படும் ஜெய் அமித்பாய் ஷா. ஜெய் ஷா இந்தக் காலகட்டங்களில் இருந்துதான் தலைகாட்ட ஆரம்பித்தார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், சொஹராபுதீன் என்கவுன்டர் வழக்கே ஜெய் ஷாவை வெளியுலகுக்கு காண்பித்தது. வழக்கில் 3 மாதத்துக்கு பின் குஜராத் நீதிமன்றம் அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கி அவரின் சிறைவாசத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் ஒரு செக் வைத்தது. `குஜராத்துக்குள் நுழைய அமித் ஷாவுக்கு தடை' என்பதே உச்ச நீதிமன்றம் வைத்த செக். இதனால் தனது சொந்த தொகுதியான நரன்புராவுக்குள்கூட நுழைய முடியாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் காரணமாக டெல்லியில் சில காலம் தங்க நேர்ந்தது.

image

அமித் ஷா குஜராத்துக்குள் நுழைய முடியாவிட்டாலும், அவரின் ஸ்தானத்தில் இருந்து நிறைய வேலைகளை குறிப்பாக, நரன்புரா தொகுதி மக்களின் பிரச்னைகளை கவனிக்க, அந்தத் தொகுதியிலேயே தங்கி பணிபுரிந்தார் ஜெய் ஷா. ஜெய் ஷாவின் முதல் 'அரசியல் என்ட்ரி' என்றே இதைச் சொல்லலாம். தந்தை அமித் ஷாவுக்கு தோள் கொடுக்க, நேரடியாக தொகுதியில் களமிறங்கி ஜெய் வேலைபார்த்த காலகட்டம் அது. அமித் ஷாவை அரசியல்வாதியாக பார்த்த பலருக்கு அவர் ஒரு பிசினஸ்மேன் என்பது தெரியாத ஒரு விஷயம்.

ஃபேமிலி பிசினஸ் ஆன `பிவிசி பைப்ஸ்' தொழிலைத் தாண்டி ஷேர் மார்க்கெட் வணிகத்தில் அமித் ஷா ஒரு கில்லி என்பார்கள் அவரை நெருக்கமாக அறிந்தவர்கள். ஆனால், 2010-ல் சொஹராபுதீன் என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா சிக்கியபோது, அவரின் அத்தனை தொழில்களும் பெரிய சுணக்கம் கண்டன. அப்போதும் தந்தையின் துயர் துடைத்தார் `பொறியியல் பட்டம்' பெற்ற ஜெய் ஷா. அப்போது இருந்தே எப்போதும் கையில் மொபைலுடன் ஷேர் மார்க்கெட் பிசினஸை கவனித்து வரும் ஜெய் குறுகிய காலகட்டத்தில் தந்தையை போலவே அதில் கொடிகட்டி பறந்தார்.

அரசியல், பிசினஸ் போன்று தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றி குஜராத் கிரிக்கெட் சங்கத்திலும் கால்பதித்தார் ஜெய் ஷா. பிசிசிஐ போன்ற கிரிக்கெட் சங்கப் பதவி என்பது வாரிசுகளுக்கானது என்பது எழுதப்படாத விதிமுறைதானே. 2014-ல் மோடி பிரதமராகப் பதவியேற்ற போது குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆகினார் அமித் ஷா. அதே ஆண்டில் பாஜக தலைவராக பொறுப்பு வர, தனது பொறுப்புகளை கவனிக்க ஜெய் ஷாவை உள்ளே நுழைத்தார் அமித் ஷா. இதனால் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் சங்கங்களில் ஒன்றான குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் அதிகாரமிக்க இணைச் செயலாளரானார் ஜெய்.

அந்த அடிப்படையில் ஜெய் ஷா என்ட்ரி கொடுத்தாலும், அவர் ஒரு கிரிக்கெட் வீரரும்கூட. சௌராஷ்ட்ரா ரஞ்சி அணிக்காக 110 போட்டிகள் விளையாடியுள்ளார் (இது ஜெய் ஷாவே ஒரு பேட்டியில் சொன்னது). ஒரு கிரிக்கெட் வீரருக்கு அதுவும், ரஞ்சி போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஒரு வீரருக்கு கிரிக்கெட் சங்க பதவி என்பது அவ்வளவு எளிதில் கிடைக்கக்கூடிய விஷயம் அல்ல. ஆனால், அது ஜெய் ஷா விஷயத்தில் சாத்தியமானது. முதல்முறையாக இதில் சர்ச்சைகளைச் சந்தித்தார் ஜெய். பிசினஸ்ஸில் கவனம் செலுத்திக்கொண்டு கிரிக்கெட் சங்கத்தின் பணிகளை கவனிக்கத் தவறுகிறார் என சங்க நிர்வாகிகள் குற்றம் சுமத்த சர்ச்சையானது.

image

இதன் பின் அவரின் `டெம்பிள் என்டர்பிரைசஸ்' அசுர வளர்ச்சி கண்டது குறித்து `தி வயர்' செய்தி ஊடகத்தில் வெளியிட்ட கட்டுரை, அதன்பின் ஏற்பட்ட சர்ச்சை மூலம் இந்தியா முழுவதும் தெரிந்தார் ஜெய். 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஜெய் ஷா மீண்டும் பேசுபொருளாகினார். ஆங்கில செய்தி ஊடகமான `தி வயர்' `தி கோல்டன் டச் ஆஃப் ஜெய் அமித் ஷா’ என்ற தலைப்பைக் கொண்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது. இதில், ஜெய்யின் `டெம்பிள் என்டர்பிரைசஸ்' அசுர வளர்ச்சி குறித்து `தி வயர்' பேசியிருந்தது. இந்தக் கட்டுரையை மேற்கோள்காட்டி `பணம் மதிப்பு நீக்கத்தால் பயனடைந்தது அமித் ஷா குடும்பம் மட்டுமே' என்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்க நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் ஜெய் ஷா மீதே இருந்தது.

சர்ச்சைகளை தாண்டி அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது கடந்த ஆண்டு பிசிசிஐயின் செயலாளார் ஆனார் ஜெய் ஷா. முதல்முறை இந்தப் பதவிக்கு அவர் வந்தபோதே எந்தவித எதிர்ப்பும் உருவாகவில்லை. இதோ இப்போது இரண்டாம் முறையாக எந்தவித எதிர்ப்பும் இன்றி ஜெய் ஷாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் கோலோச்சி தற்போது பிசிசிஐயில் கோலோச்சத் தொடங்கியுள்ளார். தந்தையை போன்றே எதிர்காலத்தில் குஜராத் அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக ஜெய் ஷா உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக பேசுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதனால் அவரின் வளர்ச்சி உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஆக, எதிர்காலத்தில் எது நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

- மலையரசு