[X] Close

"மக்களின் அன்பு... வாய்விட்டு அழுத எம்.ஜி.ஆர்!"- நினைவுகள் பகிரும் கே.மாயத்தேவர் நேர்காணல்

சிறப்புக் களம்,தமிழ்நாடு,தேர்தல் களம்

Do-you-know-how-MGR-developed-ADMK-Interview-with-K-Mayathevar

அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர். இரட்டை இலை சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.ஜி.ஆரின் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய கே.மாயத்தேவர், அதிமுகவின ஆரம்ப காலம் முதல் இன்றைய அரசியல் நிலவரம் வரை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.


Advertisement

image

2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்ட்ட நிலையில், அரசியல் அரங்கம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் இல்லாமல் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் மல்லுக்கட்ட தயாராகி வருகிறார்கள். நீயா நானா என இரண்டு கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றன.


Advertisement

இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகின்ற தேர்தலில் ரஜனி, கமலுக்கு விழுகின்ற அடி இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது என காட்டமாக பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவின் முதல் நாடாளுமன்ற வேட்பாளராக சுயேட்சை சின்னமாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் முதல் வெற்றி வேட்பாளர் கே.மாயத்தேவரை, அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக தொடக்கம் முதல் இன்றைய அரசியல் நிலவரம் வரை நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பரபரப்பான பதில் இதோ...

image


Advertisement

எம்.ஜி.ஆர் உடன் ஏற்பட்ட பழக்கம்

"எனது தாய்மாமன் நல்லுத்தேவர் கொலை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கில் வாதாட நான் சென்று வந்த சமயம், எம்.ஜி.ஆர் அவர்களை நடிகர் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கொலை முயற்சி வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழக்கில் ஆஜராக வந்த எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அதிமுகவின் தோற்றமும் வளர்ச்சியும்:

அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். அப்படி இருந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து கருணாநிதியால் நீக்கபட்டார். இதையடுத்து திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆருடன் வந்த தலைவர்களின் ஆதரவோடு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார்.

எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ’நீ வா தலைவா, நாங்கள் இருக்கிறோம்’ என அதிமுகவை மக்கள் வெகுவாக ஆதரித்தார்கள். எம்.ஜி.ஆர் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பெண்களின் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.

அவருடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்ட கருணாநிதி, அதிமுகவை வளரவிட்டால் நமக்கு ஆபத்து என கருதி எம்.ஜி.ஆரை தவிர்த்து கே.ஏ.கிருஷ்ணசாமி, மோகனரங்கம், பம்மல் நல்லதம்பி உட்பட இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு செக்‌ஷன் 307ஐ பயன்படுத்தி கொலை முயற்சி வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிட்டார்.

image

எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பு

கருணாநிதியால் சிறையில் அடைக்கப்பட்டவர்களை மீட்க, பி.எச்.பாண்டியன் போன்ற பெரிய வழக்கறிஞர்களை நியமித்து வாதாடி பகீரத முயற்சி செய்தும் யாரையும் ஜாமீனில் வெளியே எடுக்க முடியவில்லை. கட்சியே அழிந்து விடும் சூழல், எம்.ஜி.ஆருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது எம்.ஜி.ஆர், இரண்டாம் கட்ட தலைவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது நல்ல திறமையான தைரியமான போர்குணமுள்ள இளம் வழக்கறிஞர் யாராவது இருந்தால் அழைத்து வாருங்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து இரண்டாம் கட்ட தலைவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றேன். எம்.ஜி.ஆர் என்னை பார்த்ததும் ’அட நம்ம மாயன், எப்படி இருக்கிறீங்க?’ என்று நலம் விசாரித்து, வழக்கின் தன்மையை விளக்கினார். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நான் அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தேன். இந்த வழக்கில் இருந்து அனைவரும் ஜாமீனில் வெளிவர நான் என்ன வேண்டுமானால் செய்வேன். பின்பு ஏன் அப்படி செய்தாய், இப்படி செய்தாய் என்று என்னிடம் கேட்கக்கூடாது என்றேன்.

image

சிறிது நேரம் யோசனை செய்த எம்.ஜி.ஆர், ’சரி நான் பார்த்துக் கொள்கிறேன்; எனக்குத் தேவை, இந்த கேஸில் இருந்து அனைவரும் வெளியே வரவேண்டும்’ என்றார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது அந்த வழக்கில் ஆஜரான நான், நீதிபதியிடம் ’தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதம் எதையாவது காட்டுங்கள்’ என்றேன்.

அதற்கு நீதிபதியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ’கொலை முயற்சியில் யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்கிறதா?’ என்றேன் அதற்கும் அமைதிதான். ’இப்படி சம்பந்தமில்லாமல் ஒரு கட்சியை அழிக்க நினைக்கும் சூழ்ச்சிக்கு நீதிபதி ஆதரவாக இருக்கலாமா?’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டு, நேருக்கு நேராக சண்டை போட்டு அனைவருக்கும் விடுதலை வாங்கித் தந்தேன். இந்தச் சம்பவம் எம்.ஜி.ஆருடன் எனக்கு நல்ல தொடர்பை ஏற்படுத்தியது.

image

முதல் அதிமுக வேட்பாளராக நாடாளுமன்றத்துக்கு போட்டி

திமுகவைச் சேர்ந்த இராஜாங்கம் என்பவர் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவையொட்டி திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அந்த இடைத்தேர்தலில் அதிமுக முதன்முதலாக களம் கண்டது. அப்போது அதிமுக சார்பாக என்னை வேட்பாளராக எம்.ஜி.ஆர் களமிறக்கினார். அப்போது நான் சொன்னேன்: ’தலைவரே, தேர்தல் களத்தில் செலவுக்கு நிறைய பணம் தேவைப்படும். ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை’ என்றேன். ’உன்னால் முடிந்ததை செலவு செய். மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்’ என்றார்.

இரட்டை இலை சின்னம் கிடைத்த வரலாறு

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் ஆணைப்படி அதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து சின்னம் ஒதுக்கும் நாள் வந்தது. அப்போது மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சிரியாக் 16 சின்னங்களை என்னிடம் காட்டினார். முதன்முதலாக தேர்தல் களம் கண்ட அதிமுகவுக்கு சுயேட்சை சின்னம்தான். சிரியாக் காண்பித்த 16 சின்னத்தில் 7-வது சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னத்தை நான் தேர்வு செய்து எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

’என்ன மாயன், எத்தனையோ சின்னம் இருக்க இரட்டை இலையை?’ என்றார். ’தலைவரே, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற வின்சென்ட் சர்ச்சில் தனது வெற்றியை பறைசாற்ற வெற்றியின் அடையாளமான ’வி’ என்ற எழுத்தை இரண்டு விரல்களில் காட்டிநின்றார். அதேபோல் நீங்களும் இரண்டு விரல்களை மட்டும் காட்டுங்கள். மக்கள் இரட்டை இலை சின்னத்தை எளிதாக புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள்’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் என்னை ஆரத் தழுவிக்கொண்டார். அப்படி என்னால் அடையாளம் காட்டப்பட்ட இரட்டை இலை சின்னம்தான் இன்று அதிமுகவின் மாய மந்திரம்.

image

எம்.ஜி.ஆர் என்மீது கொண்ட பாசம்

இடைத்தேர்தலில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்துடன் தேர்தல் பிரசாரத்தில் அதிக ஈடுபாடு காட்டினார் எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பழக்கப்பட்ட அவருடன் என்னால் ஈடுகொடுத்து வாக்கு சேரிக்க முடியவில்லை. அது எனக்கு பழக்கமும் இல்லை. இப்படித்தான் ஒருமுறை தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்றபோது எம்.ஜி.ஆரின் தோளில் சாய்ந்து தூங்கிவிட்டேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை; தூங்கட்டும் என்று விட்டுவிட்டார். பிரச்சாரம் செய்யும் இடம் வந்ததும் என்னை எழுப்பி ’டீ குடிங்கள்’ என்று கொடுத்தார். இது போன்ற பாசமுள்ள தலைவனை இப்ப பார்க்க முடியுமா? அதுதான் எம்.ஜி.ஆர்.

தன்மீது பாசம் வைத்துள்ள மக்களை நினைத்து வாய்விட்டு அழுத எம்.ஜி.ஆர்

பிரசாரத்துக்கு செல்லும் வழிநெடுகிலும் மக்களிடம எம்.ஜி.ஆருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குடு குடுவென படிகளை தாண்டி மேடையில் தோன்றும் எம்.ஜி.ஆர், மேடையின் நாலாபுறமும் இருக்கும் மக்களை பார்த்து இரட்டை இலை சின்னத்தை தனது விரல்களால் காட்டி வாக்கு சேகரிப்பார். பின்பு மக்களிடையே பேசத்தொடங்கும் எம்.ஜி.ஆர், ’என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே...’ என்ற அவரின் குரலை கேட்டவுடன் ’தலைவா’ என்ற சப்தம் விண்ணைப் பிளக்கும். விசில் சப்தம் காதை கிழிக்கும். அந்த அளவுக்கு மக்கள் அவர்மேல் உயிரையே வைத்திருந்தனர்.

ஏழை பங்காளன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து கண்கலங்கிய மக்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார். ஒருமுறை பிரச்சாரம் முடிந்து காரில் எறிய எம்.ஜி.ஆர் வாய்விட்டு அழுதுவிட்டார். அதைக்கண்ட நான் அதிர்ச்சியடைந்து ’தலைவா தேர்தலில் தோற்றுவிடுவோம்’ என்று அழுகிறீர்களா என்றேன். ’இல்ல மயான், என்மீது இவ்வளவு அன்புவைத்துள்ள மக்களுக்கு நான் என்ன செய்தேன், என்மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்’ என்றவர் தனது ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்களுக்காக பல நல்ல திட்டங்களைத் தீட்டி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தார்.

image

ராசியானவன் என அழைத்து நடுவில் அமரவைத்த எம்.ஜி.ஆர்

சென்னை ராமாவரம் இல்லத்தில் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது, எம்.ஜி.ஆர் நாஞ்சில் மனோகரனுடன் பேசிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ’வாங்க மாயன்’ என்று அழைத்து இருவருக்கும் நடுவில் என்னை அமரச்சொன்னார். நான் தயங்கினேன். உடனே ’நீங்கதான் ராசியானவர். இந்த கட்சியின் ஆனிவேர். அதனால நடுவுலதான் இருக்கணும்’ என்று கையைப் பிடித்து இழுத்து அமரவைத்தார்.

இப்படி பாசமான எம்.ஜி.ஆர் பழசை மறக்காமல். தன்னைத்தேடி தனது இல்லத்துக்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரிப்பார். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு, தான் அணிந்திருக்கும் சிலுக்கு ஜிப்பா பாக்கெட்டில் கையைவிட்டு எடுக்கும் பணத்தை வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாவண்ணம் அப்படியே கொடுப்பார். அதனால் தான் மக்கள் அவரை கொடைவள்ளல் என்றழைத்தனர்.

image

இந்திராவை ஆதரித்து பேசியதற்காக அதிமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டேன்:

1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அப்போது மொராஜி தேசாய் பிரதமராக இருந்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இந்திரா காந்தி மீது பக்கத்து வீட்டு கோழியை திருடிவிட்டார் என்று பொய் கேஸ் போட்டு நாடாளுமன்றத்திலேயே அவரை கைது செய்துவிட்டனர். இதைப் பார்த்து எல்லோரும் அமைதி காக்க, என் மனம் பொறுக்கவில்லை. மொராஜி தேசாயைப் பார்த்து ’இந்திரா காந்தி சாதாரண பெண் அல்ல; சுதந்திரப் போராட்ட தியாகிகள் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரை கைது செய்வதால் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். தண்டனை வழங்குவார்கள்’ என்று ஆவேசமாக முழங்கினேன்.

இதை சற்றும் எதிர்பாராத இந்திரா காந்தி எனது கையை பிடித்து முத்தமிட்டு (My bold darling son) எனது மூத்த மகன் நீங்கள் என்று கூறியதுடன் ’உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானலும் கேளுங்கள்; நான் செய்ய காத்திருக்கிறேன்’ என்றார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு என்னை அழைத்த எம்.ஜி.ஆர், ’என்ன மாயன் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று எதிர்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறீர்கள்’ என்றார். ’நியாயத்தைதானே பேசினேன்’ என்றேன். ஜனதா கட்சியை திருப்திபடுத்த அதிமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் என்னை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்தார்.

image

எம்.ஜி.ஆருக்கு நான் ராசியானவன்

1973க்கு பிறகு எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி மற்றும் புத்தாண்டின் முதல் நாள் காலையில் எனது முகத்தில் தான் விழிப்பார். ’நான் தொடங்கிய கட்சியில் நின்று வெற்றி பெற்று அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆணிவேராக இருந்தவன் நீ... அதனால் உனது முகத்தில் முழிப்பதை பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுக

செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று பலரும் கணக்கு போட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகவும் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்குத் தேவையான நல்ல பல திட்டங்களை அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறார்கள். புதிதாக அதிமுகவில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்ற இரு ஆளுமைகள் உருவாகி இருக்கிறார்கள். இவர்களின் ஓய்வற்ற உழைப்பில் மக்களின் ஆதரவோடு ஒற்றுமையான இருந்து மீண்டும் அதிமுக வெற்றிபெற்று எம்.ஜி.ஆரின் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

நடிகர்களின் அரசியல் வருகையும் எம்.ஜி.ஆர் பெயரும்

ஜனநாயக நாட்டில் நடிகர்கள் அல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்த அவர்களுக்கு உரிமையில்லை. எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக மட்டுமே எம்.ஜி.ஆர் பெயரையும் அவரது உருவப் படத்தையும் பயன்படுத்த முடியும்.

கருப்பு எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆரின் வாரிசு, எம்.ஜி.ஆரின் ஆட்சியை தருவேன், எம்.ஜி.ஆரின் மடியில் தவழ்ந்தேன் என்றெல்லாம் ஆளாளுக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றைமட்டும் சொல்லிக் கொள்கின்றேன். எம்.ஜி.ஆர் என்றால் அவர் ஒருத்தர்தான். அவரைபோல யாரும் வரமுடியாது. திரைப்படங்களில் எப்படி நடித்தாரோ அதேபோலவே வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் கஷ்டங்களை நன்கு அறிந்திருந்தார். பசியின் கொடுமை என்னவென்று அவருக்கு புரியும். அதனால்தான் தன்னை சந்திக்க வரும் மக்களுக்கு வயிராற உணவளித்து மகிழ்ந்தார். அவரைபோல் ஒருவர் பிறந்ததும் இல்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை. அவருக்கு நிகர் அவர்தான்.”


Advertisement

Advertisement
[X] Close