[X] Close

நிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்?

விவசாயம்,சிறப்புக் களம்

Nivar-cyclone-Tragedy--Why-farmers--disasters-go-unnoticed-by-many-

நிவர் புயல் காரணமாக பல்லாயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை முதலானவை அழிந்துபோயுள்ளன. இதனால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் இழந்துள்ளதை பலரும் கவனிக்க மறப்பது ஏன்? 


Advertisement

image


நிவர் புயல்... நாம் அஞ்சிய அளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்திருக்கிறது என்பதுதான் கள நிலவரம். பலி எண்ணிக்கை குறைவு, நகரப்பகுதிகளில் பெரிய தாக்கம் இல்லை என்பதால் மிகச்சாதாரணமாக இந்த நிவர் புயலை நம்மில் பலரும் கடந்துவிட்டோம். ஆனால், கடக்கவே முடியாத இழப்புகளுடன் நிவர் புயல் தந்த வலியினை சுமந்து நிற்கின்றனர் விவசாய பெருமக்கள்.


Advertisement

தமிழக முதல்வரின் அறிக்கையின்படி, கடலூர் மாவட்டத்தில் மட்டும் 1617 ஹெக்டேர் நெற்பயிர், 315 ஹெக்டேர் மணிலாபயிர், 35 ஹெக்டேர் வாழை, 8 ஹெக்டேர் மரவள்ளி கிழங்கு சேதமடைந்துள்ளன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு மற்றும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பயிர்ச்சேதங்கள் பற்றிய புள்ளிவிபரங்களை அரசு திரட்டிவருகிறது. இந்த மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அறியமுடிகிறது.

image

நெல் என்பது நான்கு, ஐந்து மாத காலப்பயிர்; வாழை, கரும்பு போன்றவை வருடப் பயிர். தற்போது வீசிய நிவர் புயலில் பல்லாயிரம் ஹெக்டர் நெற்பயிர்கள் அழிந்துள்ளன; பல நூறு ஏக்கர் கரும்பு, ஆயிரம் ஏக்கருக்கும் மேலான வாழை, பொங்கல் கரும்பு, மரவள்ளி, காய்கறிப்பயிர்கள் போன்றவை அழிந்துள்ளன. வாழ்விடங்களில் தண்ணீர் சூழ்ந்து நின்றால், சில நாட்களில் தண்ணீர் வடிந்துவிட்ட பிறகு அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடலாம். ஆனால், அழிந்துபோன விவசாயப் பயிர்கள் என்பது அழிந்துப்போனதுதான். அதற்காக வழங்கப்படும் நிவாரணம், காப்பீடு போன்றவை எந்த விதத்திலும் விவசாயிகளின் துயரை துடைப்பதில்லை என்பதுதான் நிஜம்.


Advertisement

உதாரணமாக, ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ஒரு விவசாயி 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யவேண்டும், ஆனால், இதுபோன்ற பேரிடர் சேதங்களின்போது அதற்கு இணையான இழப்பீடோ, நிவாரணத்தொகையோ வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் விவசாய சங்கத்தினர். கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கும் இதே கதிதான். இதுபோன்ற பேரழிவு காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள், அவர்களின் அடுத்த சில ஆண்டுகளை கடன்சுமையுடனேயே நகர்த்த நிர்பந்திப்பதுடன், அவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறவும் காரணமாக அமைகிறது.

image

நிவர் புயலால் இடிந்துபோன வீடுகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நிவாரணத்தை அறிவித்துள்ள தமிழக அரசு இன்னும் விவசாயப் பயிர்களுக்கான நிவாரணத்தை அறிவிக்கவில்லை. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமடைந்துள்ளன.

பயிர் சேதம் அதிகரிப்பது ஏன்?

பல மாவட்ட விவசாயிகளிடம் பேசியபோது, பயிர்களின் சேதாரத்திற்கு அவர்களில் பெரும்பாலானோர் சொன்ன காரணம் 'சரியான வடிகால் வசதி இல்லை' என்பதுதான். கனமழை பொழியும்போது விளைநிலங்களில் தேங்கிநிற்கும் நீருக்கு வடிகால்வசதி இருந்திருந்தால் பெரும்பாலான பகுதிகளில் விளைநிலங்கள் தப்பித்திருக்கும் என்பதுதான் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

முன்னதாக நவம்பர் 30 ஆம் தேதி வரை நெற்பயிருக்கு காப்பீடு செய்யலாம் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், நிவர் புயல் காரணமாக திடீரென்று 25 ஆம் தேதிக்குள் இன்சூரன்ஸ் செய்யவேண்டும் என்று அறிவித்தது வேளாண் துறை. அரசின் இந்த திடீர் முடிவால் பெரும்பாலான விவசாயிகளால் காப்பீடு செய்யமுடியவில்லை. எனவே, அரசு இந்த நெருக்கடி நிலையை கருத்தில்கொண்டு நவம்பர் 30 வரை காப்பீடு செய்யும் அனைவருக்கும் காப்பீட்டு பயனை வழங்கவேண்டும் என்று அனைத்து விவசாய சங்கங்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

image

விவசாயிகளின் இழப்பு என்பது வழக்கமான செய்திதானே என்று நினைக்கலாம், ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் வலி நிறைந்த உண்மையை நாம் உணரவேண்டும். இந்த ஆண்டு சாகுபடிக்காக ஒரு விவசாயி பெரிய தொகையினை கடனாக வாங்கி பயிர் செய்திருப்பார்; எனவே, அவர் முழுமையாக அறுவடை செய்தால் மட்டுமே வாங்கிய கடனையும் அடைக்கலாம், அடுத்த போக சாகுபடியும் செய்யலாம், குடும்பச் செலவுகளையும் கவனிக்கலாம். ஆனால் 'தானே', 'கஜா', 'நிவர்' போல திடீரென ஏற்படும் பேரழிவுகளால் அவர்களின் அத்தனை விஷயங்களும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

இதுபோன்ற நேரங்களில் அரசும் உதவி செய்யவில்லையெனில், அவர்களால் நிச்சயமாக வாங்கிய கடனையும் அடைக்க முடியாது, அடுத்த ஆண்டு சாகுபடியும் செய்யமுடியாது. இதுதான் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் காரணம். எனவே, இப்போதேனும் விவசாயிகளின் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க அரசு வழிசெய்யவேண்டும் என்பதே அம்மக்களுக்கான குரலாக இருக்கிறது.

நிவிர் தாக்கியதில் சேதமடைந்த பயிர்கள்.... கீழ்கண்ட வீடியோக்கள் சாம்பிள்கள் மட்டுமே!


Advertisement

Advertisement
[X] Close