Published : 07,Nov 2020 12:10 PM
தீபாவளி ஸ்பெஷல்... 24 மணிநேரம் அணையாமல் எரியும் மேஜிக் விளக்கு : குவியும் ஆர்டர்கள்!

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த குயவர் ஒருவர் தீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரம் அணையாமல் எரியும் விளக்கு ஒன்றை தயாரித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் பாஸ்தார் மாவட்டத்திலுள்ள கொண்டகோன் கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக் சக்ரதாரி(62 வயது). இவர் செய்யும் வித்தியாசமான தீபாவளி விளக்குக்கு ஆர்டர்கள் வந்து குவிந்து கொண்டிருப்பதாக தி பெட்டர் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அலாவுதீனின் அற்புத விளக்கைப் போன்று 24-40 மணிநேரம் அணையாமல் எரியக்கூடிய இவர் தயாரிக்கும் பாரம்பரிய விளக்கு மக்களை பெரிதாக கவர்ந்துள்ளது.
சக்ரதாரி தயாரிக்கும் இந்த விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெயானது தானாக மேல் அமைக்கப்பட்டிருக்கும் குடுவைக்குச் சென்று அங்கிருந்து சிறு குழாய் வழியாக தீபம் எரியும் விளக்கில் விழுந்து அதில் அமைக்கப்பட்டிருக்கும் சிறுதுளை வழியாக மீண்டும் ஒரு குழாய்மூலம் குடுவைக்குச் செல்லும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
Chhattisgarh: Ashok Chakradhari, a potter in Kondagaon, has designed an earthen lamp in which flow of oil is circulated automatically.
— ANI (@ANI) October 30, 2020
He says, "I learnt making this lamp watching several techniques online. I've received a good number of orders for making more such lamps." pic.twitter.com/oIfwmSu1qA
எண்ணெய் சுழற்சி முறையில் திரிக்கு வருவதால் அதிக எண்ணெய் செலவாகாமல் விளக்கு அதிக நேரம் எரியும் என்கிறார் சக்ரதாரி.
மேலும், ‘’எனக்கு எப்போதும் என்னுடைய மண்பாண்டம் செய்யும் திறமை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். புதிது புதிதாக வனைய வேண்டும் என யுடியூபில் வீடியோக்களைப் பார்ப்பேன். 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வித்தியாசமான விளக்கை செய்ய யுடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த வித்தியாசமான விளக்கைப் பார்த்தேன். குடுவையிலிருந்து எண்ணெய் சுழற்சி முறையில் வருவதைத் தெளிவாக்கிக் கொள்ள மேலும் பல வீடியோக்களைப் பார்த்து, பலமுறை செய்து பார்த்தேன்’’ என்கிறார் சக்ரதாரி.
இவருடைய இந்த விளக்கு வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனால் இவருக்கு பல இடங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன.