Published : 28,Jun 2017 03:04 AM
பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

ரூ.30 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி கமிஷன் பெற்று, பெங்களூரு தொழிலதிபர்களை ஏமாற்றிய வழக்கில் தமிழ் சினிமா நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சீனிவாசன் என்கிற பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாகக் கூறி, ரூ.10 கோடி மோசடி செய்ததாக சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் டெல்லி போலீசார் சீனிவாசனைக் கைது செய்தனர்.
அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன் மீது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மசூர் அலாம் மற்றும் அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் பெங்களூரு போலீசாரிடம் பண மோசடி புகார் ஒன்றை அளித்தனர். அதில், “ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு ரூ.1 கோடியை சீனிவாசன் முன்னதாகவே வாங்கினார். ஆனால் சீனிவாசன் இதுவரை கடன் பெற்றுத் தரவில்லை. கமிஷனாக பெற்ற ரூ.1 கோடியையும் திருப்பித் தரவில்லை” என குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து சென்னை சென்ற பெங்களூரு போலீசார் நேற்று சீனிவாசனை கைது செய்து, பெங்களூரு அழைத்து வந்தனர்.