Published : 20,Jul 2020 12:48 PM

திமுகவை இந்து விரோத கட்சி என சித்தரிக்க முயற்சி - ஸ்டாலின்

dmk-stalin-statement-about-hindu-against-party

திமுகவை இந்து விரோத கட்சி என சித்தரித்து கட்சியின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்கவே நடக்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கழகம் எனும் மிகப்பெரும் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பிலே உங்களால் உங்களுக்காக அமரவைக்கப்பட்டிருந்தாலும், நான் எப்போதும் உங்களில் ஒருவன்தான். கொரோனா எனும் உலகை உலுக்கும் நோய்த்தொற்றின் காரணமாக, இந்த ஊரடங்குக் காலத்தில் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு முன்புபோல் அமையவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கிடும் வகையில், ஒவ்வொரு நாளும் காணொலி வாயிலாகக் கழக நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடுவதில் ஓரளவு மனதுக்கு நிம்மதி!

திமுக தலைவர் இருக்கையில் இன்று மாலை ...

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று சமூகப்பரவலாக மாறியிருப்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டிலோ, எல்லாவற்றையும் மூடிமறைத்து - மக்களுக்கு மட்டுமின்றி முன்கள வீரர்களான மருத்துவத்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி - கொரோனா காலத்திலும் கொள்ளை அடிப்பதையே குறியாகக் கொண்ட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதுடன், உயிரிழப்பும் ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு என்கிற எண்ணிக்கைக்கு வந்துவிட்டது. நோய்த்தொற்றால் மக்களிடம் அச்ச உணர்வு அதிகரித்து, ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது.

ஜனநாயகத்தில் மக்களின் நம்பிக்கையை ஓர் இயக்கம் பெறுவதும், அதனைத் தக்க வைத்துக்கொள்வதும் சாதாரணமானதல்ல! திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி, கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி, இல்லாத காரணங்களை முன்வைத்து, பொல்லாத பழிகளைச் சுமத்தி நம்மை வீழ்த்திடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.

இன்று - நேற்றல்ல; நூற்றாண்டு கடந்து வீறுநடைபோடும் திராவிட இயக்கம் தனது தொடக்கக் காலத்திலிருந்தே இத்தகையச் சதிகளை முறியடித்து வென்றிருக்கிறது. தி.மு.கழகம் எனும் அரசியல் பேரியக்கம் எத்தனையோ பழிகளை - சதிகளை - அவதூறுகளை எதிர்கொண்டு தகர்த்து தவிடுபொடியாக்கி தனது இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்'..! திமுக ...

தந்தை பெரியார் முன்வைத்த சமூகநீதி - சுயமரியாதைக் கொள்கையை தேர்தல் ஜனநாயக அரசியல் வழியில் அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவதே பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடாகும். இதில் எந்த மதத்தின் மீதும் தி.மு.கழகத்திற்கு வெறுப்பு கிடையாது. பல மதத்தினரும் திமுகழகத்தில் அங்கம் வகிக்கிறார்கள், தம் மதம் - சாதி மறந்து!

யாருக்கும் சாதிப் பகை வளர்த்திடும் சகுனித்தனம் கூடாது. எவரது நம்பிக்கையிலும் பழக்கவழக்கங்களிலும் குறுக்கிடுவதில்லை. அவரவர் உரிமைகள் நிலைநாட்டப்படும் என அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் குரல் உயர்த்தி - ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சமரசமற்ற போராட்டம்தான் இந்தப் பேரியக்கத்தின் இலட்சியப் பாதை.

ஆதிக்கம் என்பது பல நிலைகளைக் கொண்டது. அத்தனை நிலைகளுக்குள்ளும் ஊடறுத்து, ஒடுக்கப்படுகிற - அடக்கப்படுகிற - ஓரங்கட்டப்படுகிற மக்களின் பக்கம் நின்று அறப்போராட்டங்களை நடத்தி, ஆட்சி செய்கிற வாய்ப்பு அமைந்தபோது சட்டதிட்டங்களை வகுத்து உரிமைகளை மீட்டுத் தந்ததே தி.மு.க.,வின் வரலாறு.

திருவாரூர் கோவில் தேரோட்டம், மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளம் தூர்வாருதல் எனத் தொடங்கி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலின் திருப்பணியிலும் கவனம் செலுத்தி, கவனிப்பாரற்று இருந்த கோவில்களிலும் ஒரு காலப் பூசையேனும் நடந்திட வழிவகுத்தது தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சி. கிராமப்பூசாரிகள் நலனுக்காக வாரியம் அமைக்கப்பட்டது. தமிழ் வழிபாட்டு முறைக்கு முன்னுரிமை தரப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டவன் சன்னதியில் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல்15-ம் ...

இப்படி எடுத்துச் சொல்ல எத்தனையோ இருக்கின்ற நிலையில், நம்மை நோக்கி ‘இந்து விரோதிகள்’ என்று விமர்சனத்தை வைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என அரதப்பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து பார்க்கிறார்கள். பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் இத்தகைய சதிவேலைகளைச் செய்தபடியே, பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச்சத்தை இருட்டாக்கிடும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

அதனால் பாதிக்கப்படும் பெரும்பான்மை இந்து மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைத்திடப் போராடுகிறது நமது இயக்கம். அதில் உயிர்பறிக்கப்பட்ட இந்துக்களைக் கொச்சைப்படுத்தியவர்கள்தான் நம்மை இந்து விரோதி என்று திசை திருப்பிடப் பார்க்கிறார்கள்.

குடிநீர் பிரச்னை ஜூன் 22-ந் தேதி ...

எங்கோ - எதுவோ ஒன்று நடந்தாலும் அதனைத் தொடர்புபடுத்தி தி.மு.கழகத்தின் மீது பழிசுமத்திட சில அரைவேக்காடுகளை ஆள்பிடித்து வைத்திருக்கிறார்கள். மாநிலத்தை ஆளும் அடிமை ஆட்சியாளர்கள், தி.மு.க.,வை தமிழர்களின் எதிரியாக சித்தரிக்க நினைக்கும் திடீர் அரசியல் நகைச்சுவையாளர்கள் என அவர்களின் கூட்டத்தில் எடுபிடிகள் ஏவல்செய்வோர் ஏராளமாக இருக்கிறார்கள். இந்தச் சமூக வலைதள யுகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கருத்துகள் எளிதில் சென்று சேர்வதால் அதனை கவனிக்கக்கூடிய கழகத்தினர் சிலர் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றும் போக்குத் தெரிகிறது. அதனைக் கைவிடுங்கள். நகைச்சுவைத் துணுக்குகளாக நினைத்துப் புறந்தள்ளுங்கள்.

சேற்றில் ஊறி எழுந்து வந்த பன்றி தன் உடலைச் சிலுப்புகிறதே என்று, ஆற்றில் நீராடிவிட்டு வருகிற நாமும் பதிலுக்கு அதன்முன் சிலுப்பிக் கொண்டிருக்கக்கூடாது. மத்திய - மாநில ஆட்சியாளர்களால் அன்றாடம் அவதியுறும் மக்களின் நலன் காப்பதே தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தின் கடமை. திட்டமிட்டு, திசைதிருப்பும் நாடகங்களில் மயங்காது, அவற்றைப் புறந்தள்ளி, ஜனநாயகக் களத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் வகையில் அயராது உழைத்திடுவோம்”எனத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்