
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் சில நாட்களோ அல்லது சில வாரங்களோ சிகிச்சை பெறுவது அவசியம். அவ்வாறு சிகிச்சை பெறும்போது அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் கதி என்னவாகும் என்று யோசித்திருக்கிறார்கள் ஹைதராபாத் இளைஞர்கள். இதனால் கவனிப்பாரற்று இருக்கும் செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் மையம் ஒன்றை நடத்திவருகிறார்கள் அவர்கள்.
விலங்குகள் உரிமை ஆர்வலர் பன்னீரு தேஜா தான் இந்த சேவைகளை அறிமுகம் செய்தவர். அவருடன் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவும் உள்ளது. கொரோனா பயம் காரணமாக பல செல்லப் பிராணிகள் கைவிடப்பட்டுள்ள நேரத்தில்தான் இச்சேவையை இவர்கள் கொண்டு வந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி கூறும் பன்னீரு தேஜா “ கொரோனா பாதித்த உரிமையாளர்கள் தங்கள் நாய்களைக் கைவிடுவது துயரமான சம்பவம். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால் அல்லது வீட்டில் தனிமையில் இருக்க வேண்டியிருந்தால், அப்படிப்பட்ட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் செல்லப்பிராணிகளைப் பராமரிக்க யாரும் இருப்பதில்லை. எனவே நாங்கள் இந்த சேவையை வழங்க முடிவு செய்தோம். ஒரு செல்லப் பிராணியை அழைத்துவரும்போது கையுறைகள், சானிடைசர்கள் , முகக்கவசம் போன்ற அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். சிகிச்சையில் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருக்கும் உரிமையாளரிடம், நாயை அவரது வீட்டிற்கு வெளியே கட்டுமாறு சொல்லிவிடுவோம். நாங்கள் அங்குசென்று கிருமிநாசினி கொண்டு சங்கிலியை சுத்தப்படுத்தி அழைத்து வருகிறோம். பிறகு நாய்க்கு எங்கள் மையத்தில் மருந்து குளியலும் கொடுக்கிறோம். "என்றார்.
தேஜாவும் அவரது குழுவினரும் இந்த சேவையைத் தொடங்கி ஒரு வாரமாகிறது. இதுவரை, அவர்கள் மீட்புக்காக பல அழைப்புகளைப் பெற்றுள்ளனர். “கடந்த ஒரு வாரத்தில் இரண்டு நாய்களை நாங்கள் கவனித்து வருகிறோம். எங்கள் மையத்தில் சுமார் 22 நாய்களை தங்க வைக்க முடியும். பூனைகளுக்கு தனி இட வசதியும் எங்களிடம் உள்ளது. பெரிய நாய்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 500 மற்றும் சிறிய நாய்கள், பூனைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ 400 கட்டணமாக வசூலிக்கிறோம். இதன்மூலமாக செல்லப்பிராணிகளுக்குத் தேவையான உணவு, போர்டிங் மற்றும் அனைத்து பராமரிப்பையும் நாங்கள் வழங்குகிறோம். ”என்றும் தேஜா சொல்கிறார்.
இதுபோன்ற பாதுகாப்பு மையம் இருப்பது தெரிந்தவுடன் செல்லப்பிராணி உரிமையாளர்களிடமிருந்து தங்களுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தபடியே உள்ளது என்று இந்த குழுவினர் கூறுகின்றனர்.