Published : 08,May 2020 03:04 AM
“வீட்டை என் பெயருக்கு எழுதிக்கொடு” - குடிபோதையில் தாயை கொன்ற மகன்

கூடங்குளம் அருகேயுள்ள செட்டிகுளத்தில் குடிபோதையில் தாயை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் மேலத் தெருவினை சேர்ந்தவர் ஜெயமணி 62. இவரது கணவர் ராஜாமணி. இவர்களுக்கு ராஜன் என்ற மகனும் 4 பெண்களும் உள்ளனர். இதில் 3 பெண்களுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. கடைசி பெண் செட்டிகுளம் அருகில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை ?
ஜெயமணி தனது கடைசி பெண் மற்றும் ஏனைய திருமணமான மற்றொரு பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவருடனும் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அதேபோல், டெய்லர் வேலை செய்து வரும் ராஜன்(40) அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் செட்டிகுளம் அருகில் உள்ள ஐயப்பன் நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் 40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் ராஜன் மது வாங்கி வந்து குடித்துள்ளார். பின்னர் குடிபோதையில் தனது தாயாரின் வீட்டிற்கு வந்து, தாய் வசிக்கும் வீட்டினை தன் பெயருக்கு எழுதி தரும்படி தகராறு செய்துள்ளார். அதற்கு ஜெயமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜன் வீட்டிலிருந்த அரிவாளால் தனது தாயை வெட்டியதாக தெரிகிறது. இதனால் நிலைகுலைந்த ஜெயமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பரவ காரணமான விமான நிறுவனம்
இதனைப்பார்த்த ராஜனின் சகோதரிகள் அலறினர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடிபோதையில் பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் செட்டி குளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.