உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பல்வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிலர் பலவிதமாகப் பரிந்துரைக்கப்படும் டயட்டை மேற்கொள்கிறார்கள், நடைபயிற்சி செல்கிறார்கள். ஒருசிலர், உடற்பயிற்சிகளை மேற்கொண்டு எடையைக் குறைக்க ஜிம்முக்கு செல்கிறார்கள். வசதி இருப்பவர்கள், எடை குறைப்புக்கான ப்ரத்யேக மருத்துவர்கள், மையங்களை அணுகுகிறார்கள். உடல் எடையைக் குறைப்பதற்கென கொழுப்பைக் குறைக்கும் லிப்போசக்ஷன், லேசர் ஃபேட் ரிமூவல், பிரத்யேக அறுவை சிகிச்சை என பலவகை சிகிச்சைகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற தொழில்நுட்பக் கல்லூரி மாணவி, ஈரோடு சித்தோடு பகுதியில் உள்ள ஹெர்போ கேர் மருத்துவமனையில் உடல் எடை குறைப்புக்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். எந்த விதமான தகவலுமின்றி, பாக்யஸ்ரீயின் உடலை வீட்டில் கொண்டு வந்து வைத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
ஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நிகழும்போதும், சம்பந்தப்பட்ட உடல் எடை குறைப்பு மையங்கள் குறித்த விவாதங்கள் எழுகிறது. விவாதங்கள் எழுந்த பின்னும், உடல் எடை குறைப்பு மோகத்தினால், இத்தகைய மையங்கள் பெருகி வருகிறது. சிறு பெண் குழந்தைகளுக்கு பார்பி டால் முதல் தொலைக்காட்சி விளம்பரங்கள் வரை, உடல் இப்படிதான் இருக்கவேண்டும், கொடியிடையாளாக இருந்தால் தான் திருமணம் செய்வதற்குக்கூட தகுதி இருக்கிறது என்னும் அளவுக்கு, இந்த சைஸ் ஜீரோ பிம்பம் பெண்களின் மனதில் பதிய வைக்கப்படுகிறது.
இதில் அடங்கியிருக்கும் உளவியல் என்ன?
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உளவியல் பேராசிரியர், மருத்துவர் ராமானுஜம் கோவிந்தன் இதுகுறித்து பேசும்போது,
“உடல் எடை குறித்து ஒரு மாயத் தோற்றம் மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே உருவாக்கப்படுகிறது. மெலிந்த உடலே அழகு என்பது வாழ்வில் நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் ஆழ்மனதில் பதிய வைக்கப்படுகிறது. இந்த படபடப்பை, சமூகம் நம்பவைத்துள்ள இந்த விஷயத்தை வணிக ரீதியாக தீவிரமாய் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சில லாபநோக்கு நிறுவனங்கள் சொல்லும் சைஸ் ஜீரோ என்பது ஒருவித மாயத்தோற்றம்.
ஆரோக்கியத்திற்காக, தனது உடலை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையுடன் உடல் எடையைக் குறைக்க விரும்புவதில் எந்த வித தவறும் இல்லை. உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் என அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இது சாத்தியம். பல கல்லூரி மாணவர்கள், ஐடி துறையைச் சேர்ந்தவர்கள், திரைத்துறையினர் என பாரபட்சமின்றி பல துறைகளைச் சேர்ந்தவர்களும் உடல் எடை குறைவு குறித்த தெளிவான பார்வையைத் தவிர்த்து, மன அழுத்தத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். ஆரம்ப நிலையில் மன அழுத்தம், ஒருவித தாழ்வு மனப்பான்மையோடு தொடங்கும் இத்தகைய உணர்வு, ஆனோரெக்சியா நெர்வோஸா என்னும் சாப்பிடாமலேயே இருத்தல் (Anorexia Nervosa), புல்லிமியா என்னும் சாப்பிட்ட பின்பு வாந்தி எடுத்தல் (Bullimia) போன்ற அதிதீவிரமான உளவியல் அபாயங்களுக்கு உள்ளாக நேரிடும்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், முதலில் நமது உணர்வுகள் சஞ்சரிக்கும் இந்த உடலைக் கொண்டாட வேண்டும். உடல் பருமன் இருப்பவர்களுக்கு, சமூகமும் குடும்பத்தினரும் தேவையற்ற தாழ்வு மனப்பான்மையை விதைப்பதை நிறுத்த வேண்டும். வாழ்க்கை முறை மாற்றங்கள், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் ஆரோக்கியமான உடலைப் பெற்றவர்களிடம் பேசுவதன் மூலமும், சரியான உளவியல் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலமுமே இத்தகைய மன அழுத்தத்தில் இருந்து வெளிவரமுடியும்.
சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் மெலிந்த, நோயுற்ற பெண்கள் வாழும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், உடல் எடை, உடல் எடை சார்ந்த மன அழுத்தம், மன அழுத்தமில்லாமல் பயிற்சிகள், உணவுகள் மூலமாக ஆரோக்கிய உடலைப் பெறுவது போன்ற பலவும் சமூக தளத்தில் விவாதிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!