Published : 10,Jun 2017 02:02 PM
ஆபாச வீடியோ பார்க்கச் சொன்ன ஆசிரியரை தேடுகிறது போலீஸ்

பள்ளியில் மாணவிகளை கட்டாயப்படுத்தி ஆபாச படம் பார்க்க வைத்த ஆசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் டுமகுரு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 40 வயதான தேவராஜையா. இவர் இங்கு பயிலும் 6, மற்றும் 7ம் வகுப்பு மாணவிகளை அழைத்து தனது செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை பார்க்க கட்டாயப்படுத்தி இருக்கிறார். இந்த விவகாரம் மாணவிகளின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதுபற்றிய செய்தி அங்குள்ள லோக்கல் சேனலிலும் ஒளிபரப்பானது. இதனையடுத்து கல்வித்துறை உயரதிகாரியும், காவல்துறையினரும் அந்தப் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் நடந்ததை விசாரித்து சென்றனர். அந்த விசாரணையின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவராஜையா மீது பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அந்த ஆபாச ஆசிரியர் மீது தற்போது போஸ்கோ சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பே ஆசிரியர் தேவராஜையா, ஆபாச வீடியோவை பார்க்க மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அப்போது எச்சரித்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்போதே அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்து இருக்காது என குற்றம் சாட்டுகின்றனர் மாணவிகளின் பெற்றோர்கள்.