Published : 05,Mar 2020 07:00 AM
வாரணாசியில் தனுஷின் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு - வெளியான புகைப்படங்கள்..!

தனுஷ் அடுத்ததாக நடித்து வரும் பாலிவுட் படத்திற்கான படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடித்தந்தன. தனுஷ் தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.
பாலிவுட்டில் இவர் ராஞ்சனா படம் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர், அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘ஷமிதாப்’ என்ற படத்தில் நடத்தார். தற்போது, பாலிவுட்டில் மூன்றாவது படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் தனுஷ். இந்தப் படத்திற்காக ராஞ்சனா பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் இணைந்துள்ளார்.
அத்ராங்கி ரே (‘Atrangi Re’) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தனுஷ் உடன் நடிகர் அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
‘கடைசி விவசாயி’ படத்தில் இருந்து இளையராஜா விலகல்?
மார்ச் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் படப்பிடிப்பிற்காக தனுஷ், சாரா அலி கான் ஆகியோர் கடந்த திங்கட்கிழமையே வாரணாசி சென்றடைந்தனர்.
இந்நிலையில் இந்தப் படம் தொடர்பாக தனுஷ் புதிய லுக்கில் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், படம் தொடர்பான சாரா அலிகானின் படமும் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா திரைப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் வாரணாசியில்தான் படமாக எடுக்கப்பட்டிருந்தது.
பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திற்கான படப்பிடிப்புகள் திருநெல்வேலி மாவட்ட வாட்டாரங்களில் நடைபெற்று வந்தது. கர்ணன் படப்பிடிப்பில் கடந்த சில மாதங்களாக பங்கேற்று வந்த தனுஷ் தற்போது அத்ராங்கி ரே படப்பிடிப்பில் மூழ்கியுள்ளார்.