Published : 03,Mar 2020 02:09 PM
தமிழக பட்டாசு ஆலைகள் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியதா?: ஆய்வுக்கு உத்தரவு

தமிழக பட்டாசு ஆலைகள், தடை செய்யப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தியதா என விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசுகளை வெடிப்பதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாலும், பலருக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாலும், அதன் உற்பத்தியை தடை செய்யக் கோரி அர்ஜூன் கோபால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு உற்பத்திக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தடைவிதித்தது.
இந்த தடையால், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் எனக் கூறி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்க தடைவிதித்த உச்ச நீதிமன்றம், லித்தியம், ஆர்சனிக், பேரியம், ஈயம் ஆகிய மூலப்பொருட்களை தவிர்த்த பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும் ஆணையிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலைகள், தடை செய்யப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ-யின் சென்னை பிரிவின் இணை இயக்குநர் 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.