
மாட்டிக்கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி என இணையத்தில் வீடியோக்களை பார்த்து கொள்ளையடித்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.
சென்னை ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் கொள்ளையனை கைது செய்தனர். விசாரணையின் போது அவர் கூறியவை காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட திருநின்றவூரைச் சேர்ந்த உதயசூரியன், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிக ஊதியத்திற்கு பணியாற்றி வந்துள்ளார். திடீரென அந்நிறுவனம் மூடப்பட்டதால் குறைந்த ஊதியத்திற்கு வேறு நிறுவனத்தில் சேர்ந்துள்ளார் உதயசூரியன். ஆனால், அந்தப் பணம் போதாத காரணத்தால் ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்கும் முடிவுக்கு வந்த அவர், இணையத்தில் பல்வேறு வீடியோக்களைப் பார்த்து அதற்கு தயாராகியுள்ளார்.
ஏற்கெனவே அவர் காவானூர் பகுதியிலுள்ள ஏ.டி.எம்மில் உள்ள சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்து சுமார் 4 லட்சம் ரூபாய் கொள்ளையடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பு ஏற்பட்டதால் அவர் மீண்டும் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் உதயசூரியன் வசமாக சிக்கிக்கொண்டார்.