Published : 22,May 2017 08:18 AM

தீவிரவாதத்தால் அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள்தான்! ட்ரம்ப் பேச்சு

Muslims-are-the-most-victims-of-terrorism

இஸ்லாமியத் தீவிரவாதத்தால் பலியாகும் நபர்களில் 95 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள்தான் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற அரபு-இஸ்லாம்-அமெரிக்கக் கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், எந்த ஒரு நாடும் தீவிரவாத குழுக்களுக்கு இருப்பிடமாகச் செயல்படக் கூடாது என்று தெரிவித்தார்.

தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியா குறித்து அதிகம் கருத்து தெரிவிக்காத ட்ரம்ப், முதல் முறையாக இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் செயல்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் தனது முதல் பயணத்தை இஸ்லாமிய நாடுகளில் மேற்கொள்ளும் டிரம்ப்பின் பேச்சும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதல், பாஸ்டன் வெடிகுண்டு தாக்குதல், ஆர்லாண்டோ தாக்குதல் ஆகியவற்றை குறிப்பிட்டு பேசிய ட்ரம்ப், ’தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடைபெறும் போர். அதை மேற்குலக நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போராகப் பார்க்கக் கூடாது’ என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக போராடவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ட்ரம்ப், ’இஸ்லாமியத் தீவிரவாதத்தால் பலியாகும் நபர்களில் 95 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள்தான். அனைவரும் ஒன்றிணைந்து மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளைய ஆண்களும், பெண்களும் பயமில்லாமல், தீவிரவாதத்திற்கு ஆட்படாமல் தங்களை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

50 இஸ்லாமிய நாடுகள் பங்குபெறும் இந்த மாநாடு தான், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் வெளிநாட்டில் நடக்கும் முதல் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்