Published : 09,Aug 2019 03:18 AM
சாலை தடுப்புச் சுவரில் மோதி தூக்கியெறியப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தடுப்புச்சுவரில் மோதி, 60 அடி பள்ளத்தில் தூக்கியெறியப்பட்டதில் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று மதுரவாயல்- தாம்பரம் பைபாஸ் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை வழியாக அவரது இருச்சக்கர வாகனத்தில் தாம்பரம் வந்துள்ளார். அப்போது ஜிஎஸ்டி சாலை இணைக்கும் பகுதி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம் சாலையோரமுள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் தூக்கியெறியப்பட்ட ராதாகிருஷ்ணன் 60 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து சென்ற குரோம்பேட்டை காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.