Published : 04,Aug 2019 02:13 AM

முதல் டி-20: திக்கித் திணறி வென்றது இந்திய அணி!

India-beat-West-Indies-by-4-wickets

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி திக்கித் திணறி வெற்றி பெற்றது.

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச் தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே தொடக்க வீரர் கேம்பல் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து லெவிஸ், ஹெட்மயர் இருவரும் டக் அவுட் ஆனார்கள். சற்று நேரம் தாக்குப்பிடித்த விக்கெட் கீப்பர் பூரன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.  அடுத்து பாவெல் (4), கேப்டன் பிராத்வெயிட்(9), சுனில் நரேன் (2) ஆகியோர் வந்ததுமே நடையை கட்ட, அனுபவ வீரர் பொல்லார்ட் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அவர் 49 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 

20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சைனி 3, புவனேஸ்வர் குமார் 2 விக்கெட் எடுத்தனர். 


பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியும் தொடக்கத்தில் தடுமாறியது. ஷிகர் தவான் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, ரோகித்துடன் இணைந்தார் கேப்டன் விராத் கோலி. இருவரும் நிதானமாக ஆடினார். 29 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த கோலி, காட்ரல் பந்துவீச்சில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததும் ரிஷாப் வந்தார். நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப், சுனில் நரேன் பந்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நினைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்ததும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ரோகித் 2 சிக்சர், 2 பவுண்டர்களுடன் இந்த ரன்களை எடுத்தார். மணீஷ் பாண்டே (19), குணால் பாண்டியா (12) ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவும் (10) வாஷிங்டன் சுந்தரும் (8) அணியை வெற்றி பெற வைத்தனர். 17.2 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இளம் வீரர் ஷைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டியில் இதே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்