Published : 03,Jun 2019 08:58 AM
“ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநரை கேட்டுச் சொல்கிறோம்” - தமிழக அரசு

ஏழுபேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரை என்ன நிலையில் இருக்கிறது என்பதை ஆளுநர் மாளிகையில் கேட்டுச் சொல்கிறோம் என்று ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அத்தீர்மானம் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுபோல 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012ல் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு பேர் விடுதலை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதன் தற்போதைய நிலை குறித்து கேட்டு தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.