Published : 03,Jun 2019 04:12 AM

“உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” : தமிழும் கருணாநிதியும்

DMK-leader-M--Karunanidhi-96th-Birthday-special-Article

தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் போது தவிர்க்க முடியாத பெயர் "கருணாநிதி". பெயர் மட்டுமல்ல இவரின் செயல்பாடுகளும் சாதனைகளும் அரசியலில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு இன்றளவும் ஏதோ ஒரு வகையில் பாடமாகவே இருக்கிறது. முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் என்று தனது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. இவர், திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாகப் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே தம்மை சமூக இயக்கங்களில் இணைத்துக் கொண்ட கருணாநிதி, நீதிக் கட்சியில் இணைந்து, அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரம் காட்டினார். தமிழ்நாட்டில் திராவிட இயக்க மாணவர் அணியை முதன்முதலாகத் தொடங்கியவரும் இவர்தான்.

அண்ணாவின் வழியில் தொடங்கிய கருணாநிதியின் அரசியல் பயணத்தில், போட்டியிட்ட தேர்தல்களில் தோல்விகளே இல்லை. கட்சி தோற்ற போதெல்லாம் தளராமல் உழைத்தார். பல பிளவுகளை மீறி அரை நூற்றாண்டுக்கு மேல் கட்சியை கட்டிக்காத்த கருணாநிதி,18 ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்தவர். 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த கருணாநிதி, இறக்கும் வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கருணாநிதி மாநில சுயாட்சியை தொடர்ந்து வலியுறுத்தியவர், பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உட்கட்டமைப்பை மேம்படுத்த மேம்பாலங்களை அமைத்தல் என தமிழகம் மறக்க முடியாத பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கருணாநிதி கொண்டுவந்த சாதனைத் திட்டங்கள் எண்ணில் அடங்காதவை.தோல்விகள் ஏற்பட்டபோதெல்லாம் மிகத் தீவிரமாக செயல்பட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். எம்.ஜி.ஆர் மற்றும் வைகோவால் கட்சி பிளவைச் சந்தித்த போதெல்லாம், கட்சி பலவீனமடையாமல் மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவந்த பெருமை கருணாநிதியையே சாரும்.

Related image

அண்ணாவையும் கருணாநிதியையும் எப்படி பிரித்து பார்க்கமுடியோதோ அதேபோல் தமிழையும் கருணாநிதியும் பிரிக்கவே முடியாது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான முழக்கத்தை, தமிழக அரசின் முழக்கமாகவே மாற்றினார். தமிழக அரசின் அலுவல் மொழியாக தமிழைக் கட்டாயமாக்கியது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது என தமிழுக்காக அவர் ஆற்றிய சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது. கலைத்துறையிலும், இலக்கியத்துறையிலும் சாதனைகள் படைத்த கருணாநிதி வள்ளுவத்தை அரசியல் குறியீடாக மாற்றியவர். ‘நான் எழுதிய அத்தியாத்தை தொடர்ந்து எழுதுவார் கருணாநிதி’ என்று சொன்னார் அண்ணா, அப்படித்தான் அண்ணா விட்டுச் சென்ற அத்தியாயத்தை எழுத தொடங்கினார் கருணாநிதி. தமிழக அரசியலில் எந்த காலத்திலும் தவிர்க்க முடியாதபடி திமுக எனும் இயக்கத்தை வலுவாக நிலைபெற செய்ததன் மூலம் தனி அத்தியாமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். 

Image result for கருணாநிதி

அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு கலை, இலக்கிய துறைகளில் இடையூறாத எழுத்துப்பணி, அவரை ஒரு மாபெரும் படைப்பாளியாகவும் உலகுக்கு அடையாளம் காட்டியது. கருணாநிதி வசனம் எழுதிய பராசக்தி திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டுசென்றது. தூக்குமேடை நாடகத்தின் போது எம்ஆர் ராதா, கருணாநிதிக்கு அளித்த கலைஞர் என்ற பட்டம் இந்நாள் வரைக்கும் அவரது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது. முரசொலியில் அவர் எழுதிய உடன்பிறப்புக்குக் கடிதம், உலக அளவில் நீண்ட காலமாக வெளிவந்த தொடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

Image result for கருணாநிதி

நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பியத்திற்கு உரை, திருக்குறளுக்கு உரை என எழுத்துலகில் அவரின் படைப்புகள் தலைமுறைகளை தாண்டி தமிழை தக்கவைக்கும். தமிழக அரசியலில் வள்ளுவத்தை ஒரு குறியீடாக மாற்றிய கருணாநிதி, முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கடலின் நடுவே, நீர்மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது 133அடி உயர திருவள்ளுவர் சிலையை அமைத்து வள்ளுவத்தை உலகம் முழுவதும் பரவச் செய்தார். 

Image result for கருணாநிதி

கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவரை பற்றிய பேச்சு தமிழக அரசியலில் ஒலிக்காமல் இல்லை என்பது தான் நிதர்சனம். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்