Published : 11,May 2019 06:05 AM
மகளுக்கு பாலியல் வன்கொடுமை ! தந்தை கைது

மணப்பாறை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த புதுமணியாரம்பட்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ரவிச்சந்திரன். இவரது மகள் கரூர் மாவட்டம் பாலவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான ரவிச்சந்திரன் வீட்டில் தனது மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரையும் தினமும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவிச்சந்திரன் கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் மது அருந்திவிட்டு போதையில், தனது மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி தனது தாயிடம் தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் தனது மகளை தாத்தா வீட்டிற்கு இரவோடு இரவாக அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் மற்றும் அவரது தாய், தந்தை, சகோதரிகள் ஆகியோர் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மீறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறி ரவிச்சந்திரனின் மனைவி வையம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ரவிச்சந்திரனின் தாய், தந்தை, சகோதரிகள் ஆகியோர் மீதும் கொலை மிரட்டல் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.