Published : 21,Apr 2019 01:42 AM
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மயங்க் அகர்வால் 2, மில்லர் 7 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடினார். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். அதனால் பஞ்சாப் அணியின் ரன் உயர்ந்தது.
மந்தீப் சிங் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாம் கரன் டக் ஆனார். அதிரடியாக விளையாடி வந்த கெயில் 37 பந்தில் 69 ரன் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் லமிசனே 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ரபாடா, அக்ஸர் படேல் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு, தவான் மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இணை, நேர்த்தியாக விளையாடி அரை சதம் அடித்தனர். தவான் 56 ரன்கள் எடுத்த நிலையில் விஜிலியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதி வரை ஸ்ரேயஸ் ஐயர் களத்தில் நின்று ஆட, டெல்லி அணி 19.4 ஓவர்களில் இலக்கை கடந்து நடப்பு தொடரில் ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. பொறுப்புடன் ஆடிய டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.