Published : 16,Apr 2019 09:56 AM

தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தலாம் - உயர்நீதிமன்றம் அனுமதி

private-schools-can-run-special-classes-for-neet-exam---Madurai-High-Court

தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நீட் மற்றும் சிறப்பு நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மட்டும் நடத்தலாம். வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர்,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், “பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதை மீறி கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி முதல்வர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

                              

மாணவர்களுக்கு நீட், ஐஐடி என பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் கோடை காலத்தில்தான் நடத்தப்படுகின்றன. பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தான் சிறப்பு பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், சிபிஎஸ்இ பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன என்றார்.

                    

இதையடுத்து, நீதிபதிகள், “தனியார், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நீட் மற்றும் சிறப்பு நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மட்டும் நடத்தலாம். வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.