Published : 05,Feb 2019 08:29 AM
"தேர்தலுக்கு தன்னை பாஜக பயன்படுத்திக் கொண்டது" அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக ஊழல் எதிர்ப்பு போராளியான அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்கக் கோரியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்கக்கோரியும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் அகமது நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் கடந்த 30-ஆம் தேதி இந்தப் போராட்டத்தை தொடங்கிய அவர் தற்போது வரை தொடர்கிறார்.
இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக அன்னா ஹசாரே புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “ லோக்பாலுக்கான எனது போராட்டமே பாஜக, மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வர காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஆட்சி மாறினாலும் செயல்கள் மாறவில்லை என்பதை இப்போது நான் உணர்கிறேன். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக என்னை பயன்படுத்திக்கொண்டது. ஏற்கெனவே நான் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது மகாராஷ்டிரா அரசு கொடுத்த வாக்குறுதிகளை அது நிறைவேற்றவில்லை. ஏமாற்றிவிட்டனர். தற்போது எங்களின் கோரிக்கைகளுக்காக என்ன செய்யப்போகிறார்கள் என்பதை எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மத்திய, மாநில அமைச்சர்கள் என்னை வந்து சந்திப்பார்கள் என பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தேவையில்லை. உண்மையில் அது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சி பொய் கூறுவதில் பிஹெச்டி முடித்திருக்கிறது என்றால் பாஜக அதில் பட்டப்படிப்பு படித்துள்ளது. நாட்டின் சிஸ்டத்தை மாற்ற வேண்டும். ” என தெரிவித்தார்.