[X] Close

ராமர் கோவில் பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது: ராகுல் காந்தி பேட்டி

Congress-President-Rahul-Gandhi-Interview

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார், அதிலிருந்து சில.

கேள்வி: இடைக்கால பட்ஜெட் ஜனரஞ்சகமானதும்.. விவசாயிகளுக்காக தயாரிக்கப்பட்டது போன்றும் தெரிகிறதே?

பதில்: விவசாயிகளின் குடும்பத்திற்கு நாள் ஒன்றிற்கு ரூ.17 என்பது அவர்களை அவமானப்படுத்துவதாகும். தற்போதைய மோடி அரசு எங்கும் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளது. மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு பயந்து பீதியில் எதையேதையோ சொல்கின்றனர். ஆனால் அவர்களின் வேலை பலிக்கப்போவதில்லை.


Advertisement

கேள்வி: விவசாயத்தை மேம்படுத்த உங்களின் திட்டம்தான் என்ன?

பதில்: ஒருவர் நெருக்கடியில் இருக்கும்போது அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும். அவர்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். ஆனால் அப்போதெல்லாம் மோடி அரசு எதையும் செய்யவில்லை. விவசாயத்தின் நிலைமை, விவசாயிகளின் பிரச்னைகளை பற்றி பேசும்போதெல்லாம், பிரதமர் மோடி அதனை பற்றி கவலைப்படாமல் தூக்கத்தில் இருந்தார். இந்தியா விவசாய நாடு. விவசாயிகளின் கஷ்டங்கள் மற்றும் இடர்பாடுகளை நாங்கள் உணர்கிறோம். பிரதமர் மோடி விவசாயம் பொருத்தமற்றது என நினைக்கலாம். ஆனால் நாங்கள் அப்படியல்ல. நாட்டின் பொருளதார வளர்ச்சியில் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. அதனால் விவசாயத்திற்கு பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

கேள்வி: ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் குறித்து பேசியுள்ளீர்கள்.. எப்படி இதற்கான மக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்..?

பதில்: இது ஒரு புரட்சிகரமான யோசனை. ஏழை மக்களையும் பாதுகாக்க, மேம்படுத்த கொண்டுவரப்பட உள்ளதுதான் அடிப்படை வருமான திட்டம். நன்கு யோசித்து, முற்போக்கான முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒரு கொள்கையை உருவாக்கி அதன்வழி செயல்படுத்துவோம். இந்தியா நெருக்கடியில் இருக்கிறது என்பதை பிரதமர் மோடி இன்னும் உணரவில்லை. வேலையில்லா திண்டாட்டம் காரணமாக இளைஞர்கள் எதிர்காலத்தை நினைத்து மிகப்பெரிய மனஉளைச்சலில் உள்ளனர். இதுதான் மோடி அரசின் மீது மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கோபம். ஆனால் காங்கிரஸ் இளைஞர்களின் மனதை புரிந்துகொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி முன்னேற்றத்திற்கான பாதையில் செல்ல வழியை ஏற்படுத்தும்.

கேள்வி: மேற்குவங்கத்தில் நிலவும் சிபிஐ தொடர்பான பிரச்னைகள் குறித்து உங்களின் கருத்து?

பதில்: இந்திய அரசின் எந்தவொரு தனிப்பட்ட அமைப்பும், மோடி அரசின் சர்வாதிகார போக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்திய நாட்டின் கடவுளாகவே பிரதமர் மோடி தன்னை நினைத்துக்கொண்டுள்ளார். எந்தவொரு அமைப்பையோ அல்லது கூட்டாச்சி அமைப்பையோ சிதைக்கக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவை விட பிரதமர் மோடி பெரியவர் அல்ல. எதிர்க்கட்சிகளிடம் அரசியல் ரீதியான விவாதங்கள் இருக்கலாம். ஆனால் கோபங்கள் இருக்கக்கூடாது. நீங்களே ஒரு நீதிபதிபோல செயல்படக் கூடாது.

கேள்வி: ஏன் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் உடனான கூட்டணி சரிபட்டு வரவில்லை?

பதில்: தனிப்பட்ட முறையில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் மீது எனக்கு அதிகப்படியான மரியாதை உண்டு. அவர்கள் தங்கள் வழிகளில் நாட்டிற்கு மிகப்பெரிய சேவையை ஆற்றியுள்ளனர். அவர்கள் இருவரும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் சித்தாந்தத்திற்காக உ.பியில் தனித்து போட்டியிடுவோம் எனக் கூற எங்களுக்கும் உரிமை இருக்கிறது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கொள்ளை அளவில் நிறைய விஷயங்களில் ஒத்துப்போனாலும் கூட, எங்களுக்கான தனிப்பட்ட கொள்கைகைள உத்தரப்பிரதேசத்தில் நிலைநாட்டுவோம்.

கேள்வி: பிரியங்கா காந்தியை பொதுச் செயலாளராக நியமனம் செய்துள்ளீர்கள்.. அடுத்த சில ஆண்டுகளில் அவர்களின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்..? உ.பி மட்டுமா..? இல்லையென்றால் தேசிய அளவிலான அரசியலில் அவர் கவனம் செலுத்துவாரா..?

பதில்: கட்சியின் பொதுச்செயலாளராக தேசிய அளவில் அவரின் செயல்பாடுகள் இருக்கும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் புத்துயிர் பெறும் என்ற ஆர்வத்தில் இருக்கிறேன். இருந்தாலும் இது சாதாரண விஷயம் அல்ல. ஒரு பெரிய வேலை. காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு பதவி கொடுக்கிறேன். அவர்கள் அந்த பதவிக்கான பொறுப்பை முறைப்படி வெற்றிகரமாக செய்து முடிக்கும்பட்சத்தில் அடுத்த பதவி கொடுக்கிறேன்.

கேள்வி: இந்த ஆண்டின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக ராமர் கோயில் பிரச்னை உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில்: அதைப்பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது என நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி நீதிமன்றங்களை எப்போதும் மதிக்கிறது. இதுதொடர்பான வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இப்போது இது குறித்த எந்த ஒரு கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவையே காங்கிரஸ் கட்சி ஏற்கும்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close