[X] Close

நாடு கடத்தப்படும் யானைகள் ! இரக்கம் காட்டுமா மனித இனம் ?

சுற்றுச்சூழல் & சுகாதாரம்

Elephants-are-swiftly-shifted-from-there-places-because-of-farmers-pressure

கோவைக்கும் யானைக்கும் இப்போது மட்டுமல்ல எப்போதும் போதாத காலமாகவே இருந்து வருகிறது. இந்தியாவிலேயே யானை - மனிதன் மோதல் காரணமாக அதிகளவிலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டம் கோவைதான். இப்போது ஓரளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதால் பலி எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துக்கொண்டே வருகிறது. ஆனால், யானை ஊருக்குள் புகும் விவகாரம் மட்டும் தொடர் கதையாகி வருகிறது. யானை ஊருக்குள் வருவதும், வனத்துறையினரிடம் புகார் தெரிவிப்பதும், பின்பு மயக்க ஊசி செலுத்தப்பட்டு மீண்டும் அவற்றை காட்டுக்குள் விடுவதும் கடந்த சில ஆண்டுகள் அதிகரித்து வருகிறது. நாம் ஒவ்வொருவரும் இதனை அப்படியே செய்தியாகி படித்து கடந்துவிட முடியாது. இது ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டம், ஆம் யானை இனம் வாழ்வதற்கான போராட்டம். தமிழகத்தில் யானைகளின் வழித்தடங்களை வரையறுப்பதில் தொடரும் சிக்கல்கள் காரணமாக ஊருக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க முடியவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

உண்மையில் யானை ஊருக்குள் வருகிறதா ? 


Advertisement

பெரும்பாலான இடங்களில் யானைகள் ஊருக்குள் புகுந்ததாகவே மக்கள் சொல்கிறார்கள். ஆனால், யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் அவை மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகின்றன. யானைகளுக்கு நினைவாற்றல் அதிகமுண்டு. எனவே, அவை தங்களது வழித்தடத்தை அவ்வளவு எளிதில் மறக்காது. கோவை, ஒசூர், தருமபுரி, ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப் பகுதிகளில்தான் யானைகள், மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன. கோவையில் வழிபாட்டுத் தலங்கள், தங்கும் விடுதிகள், கல்லூரிகள், வீடுகள் என ஆக்கிரமிப்புகளுக்கு அளவே இல்லை. எப்போதும்போல வனத் துறையினர் யானைகள் ஊருக்குள் வரமால் தடுப்பதற்கான முயற்சிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர் என்பது சூழலியலாளர்களின் கருத்தாக இருக்கிறது.

வரையறுப்பதில் என்ன சிக்கல் ? 


Advertisement

வனப்பகுதி, வருவாய் நிலங்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வனப்பகுதியில் எவை யானைகள் வழித்தடம் என தனியாக அடையாளம் காட்டிவிட முடியும். ஆனால், வருவாய் நிலங்கள் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் யானைகள் வருவதற்கு வனத்தை ஒட்டியுள்ள பகுதிகள் நகரமயாமாக்கல் காரணமாக விரிவாக்கம் செய்யப்பட்டதால் யானைகள் வழித்தடம் அடைபட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாற்றம், ஆக்கிரமிப்புகள் காரணமாக யானைகள் கூட்டம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயர்கின்றன. ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20-30 யானைகள் இருக்கும். ஆனால், இப்போது 6- 10 யானைகள் மட்டுமே உள்ளன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சில யானைகள் கூட்டத்தை விட்டுப் பிரிந்து ஊருக்குள் புகுந்துவிடுவதால் பிரச்னைகள் எழுகின்றன.

இது குறித்து சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் மோகன்ராஜ் கூறியபோது " 25 ஆண்டுகளுக்கு முன்பே எவையெல்லாம் யானைகள் வழித்தடம் என கண்டறியப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கலுக்கு பின்பு காட்டையொட்டி உள்ள பகுதிகள் வருவாய் நிலங்களாகப் பிரிக்கப்பட்டு அவை விற்கப்படுகின்றன. நிலத்தை வாங்கியவர்களுக்கு அவை யானைகளின் வலசைப்பாதை என தெரியாது. இந்த நிலத்தில் பெரும் பணக்காரர்கள் வீடுகளை கட்டும்போது மின்வேலி, பெரிய சுற்றுசுவர்களை எழுப்பி கட்டிவிடுகின்றனர். அப்போது தங்கள் பாதைக்கு வரும் யானைகள் இந்த தடுப்புகளால் வேறு பாதைக்கு செல்கின்றன. அங்கே எளியவர்கள் வீடு கட்டி இருக்கும்போது, அவர்கள் யானைகளால் பலியாகின்றனர். உண்மையில் யானைகள் மனிதனுக்கு எதிரியல்ல. பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல வனங்களையொட்டியுள்ள பகுதியில் நிலங்களை வாங்கும்போது எச்சரிக்கை தேவை" என்கிறார் அவர். 

கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட கோவையில் வரப்பாளையம், பெரிய தடாகம் பகுதிகளில் கடந்த 6 மாதமாக இரண்டு காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இவற்றுக்கு விநாயகன், சின்னத்தம்பி எனப் பெயரிடப்பட்டது. இந்த யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில், 8 பேரை மிதித்துக் கொன்றதாக விவசாயிகள் அச்சத்துடன் தெரிவித்தனர். இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானைகளை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். பின்பு பெரிய தடாகம் அருகே விநாயகன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதை அடுத்து, மயக்கமடைந்தது. இதையடுத்து, யானையை கும்கிகள் உதவியுடன் வாகனத்தில் ஏற்றி வேறு வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர். 

இது குறித்து கோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ஜி.காளிதாசன் "கோவை தடாகம் பகுதியில் பல ஆண்டுகளாக சுற்றித் திரிந்த ஆண் யானை அங்கிருந்து பிடிக்கப்பட்டு முதுமலை காட்டில் விடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த கானகத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள, தான் அறிந்திராத இன்னொரு காட்டுப்பகுதியில் யானையை விடுவது நாடு கடத்தல்தானே ? கோவை மாவட்டத்தில் வேளாண்மை மிச்சமிருப்பது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்தான். அங்குதான் ஓரளவு தண்ணீர் வசதி உள்ளது. இங்குள்ள தடாகம் பகுதி மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட அழகிய பகுதி. ஒரு காலத்தில் முழுவதும் விவசாயம் நடந்த இடம் இது. ஆனால் இப்போது விவசாயம் பெரியளவில் இல்லை. ஆனாலும் தாங்கள் காலம் காலமாய் செய்துவந்த தொழிலை விட முடியாமல் இன்னும் கொஞ்சம் பேர் விவசாயம் செய்துவருகின்றனர். அவர்கள்தான் இந்த யானையைப் பிடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தவர்கள். காரணம் அவர்கள் பாடுபட்டு விளைவிக்கும் பயிர்களைக் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் சேதப்படுத்திவிடுகின்றன" என சொல்கிறார் அவர்.

இது குறித்து மேலும் தொடர்ந்த காளிதாஸ் " ஏற்கெனவே பல்வேறு சிரமங்களோடு விவசாயம் செய்யும் அவர்களுக்குக் காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்பும் சேர்ந்துவிட, பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, தொடர்ந்து பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில யானைகளை இப்பகுதியிலிருந்து அகற்றக் குரல் கொடுத்துவந்தனர். கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒவ்வொரு குறை தீர்க்கும் நாளிலும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். கோவையிலுள்ள வனத்துறை அலுவலர்களிடம் வற்புறுத்தினர். எதுவும் நடக்காததால் சென்னையிலுள்ள வனத்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன் விளைவாக இப்போது இந்த யானை பிடிக்கப்பட்டது. இதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வா ? இப்பகுதி நிலவரத்தை முழுமையாக அறிந்தால்தான் இக்கேள்விக்கு பதில் கிடைக்கும்" என வேதனையுடன் முடிக்கிறார் அவர்.


Advertisement

Advertisement
[X] Close