Published : 08,Nov 2018 10:21 AM

“எய்ம்ஸ் பணிகள் மதுரையில் எப்போது தொடங்கும்” - நீதிமன்றம் கேள்வி

Highcourt-Madurai-Branch-questioned-When-the-AIIMS-will-come-to-Madurai-

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என அறிக்கை அளிக்க மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் மதுரை தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதனை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மேலும் மத்திய அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும் என்றும், கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்தத்தை விரைவு படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிற மாநிலங்களில் ஒரு இடம் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல இடங்கள் பரிந்துரைக்கப்பட்டதுதான் தாமதத்திற்கு காரணம் என்று தெரிவித்தார். மேலும் மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றும், அதில் மாற்றமிருக்காது எனவும் தெரிவித்தார். 

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் கேட்டனர். மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டனர். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் எவ்வளவு காலத்தில் நிறைவடையும்? என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்